“வளர்ச்சிக்கு நக்சல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர்.” என்ற, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு, ஆதரவளிக்கும் வகையில் தினமணி நாளேடு, வாசகர் அரங்கம் என்கிற தலைப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளது.
தினமணி உட்பட, நக்சல்பாரிகள் மீதான கருத்துக்களை உதிர்த்துள்ள வாசகர்கள் அனைவரும் ‘ஷா’ அள்ளி வீசிய அவதூறை, எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல், அவரவர் வார்த்தைகளில், சொற்களில் அப்படியே வாந்தியெடுத்துள்ளனர். ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்துக் கொண்டிருப்பதைப் போல, இவர்களின் சொல்லுக்குப் பின்னாலும் ‘ஷா’வின் ஆளும்வர்க்கமும், ஒடுக்கும்வர்க்கமும் ஒளிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
இயற்கை வளங்களை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க, வனப்பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்குவது என்பது வாசகர்கள் கூறுவது போல பகுதியின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லையா? இந்த வளத்தை காலங்காலமாக பாதுகாத்து வந்த பூர்வ குடிகளான பழங்குடி மக்களை அப்பகுதியில் இருந்து, அரசின் ராணுவத்தையும், காவிகளின் நிழல் ராணுவத்தையும் கொண்டு அடித்து விரட்டுவது, அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கவில்லையா? அவர்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்து வரும் நக்சல்பாரிகள் கேடு விளைவிப்பார்களா? இவர்களின் நியாயமான – நேர்மையான செயல்பாட்டிற்கு ஆதரவு தரும் சமூக செயல்பாட்டாளர்கள் ‘அர்பன் நச்சல்’களா? ஆம், இவர்களின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் விமர்சிக்கும் காங்கிரஸ் உட்பட அனைவரும் மோடி – ஷா’வின் இலக்குப்படி நக்சல்களே.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வளித்து வந்த, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் அளவு கடந்த சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு, அடிமாட்டு விலைக்கு மோடி – ஷா அரசு தாரை வார்த்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், அரசின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பறித்த, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடியும் – ஷாவுமே மக்கள் விரோதிகள், தேசத்துரோகிகள், ஆண்ட்டி இந்தியன்கள், பயங்கரவாதிகள்!
நக்சல்பாரிகள் இயக்கியவியல் பொருள்முதல்வாதிகள், திருநெல்வேலி வாசகர் முகதி சுபா கூறுவது போல, கடவுள்களாக தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இந்திய மக்களை ‘காக்க வந்த கடவுள்களாக’ தங்களைக் காட்டிக் கொள்ளும் சனாதனவாதிகளான மோடி – ஷா போன்ற மோசடிகள், இந்து ஆதிக்கச் சாதிகளை கேடயமாக பயன்படுத்தி இந்திய குடிமக்களான தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் எதிரிகளாக, இந்தியாவில் இருந்து விரட்டியடிக்க வேண்டியவர்களாகச் சித்தரிப்பது. அவர்களின் வாழ்வுரிமையையும், அவர்களின் உழைப்பால் உருவாக்கப்படும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கவில்லையா? சிறுபான்மை மக்களை எதிரியாகச் சித்தரிக்கும் பாசிச மோடி – ஷா அரசு நீடிக்கும் வரை, அவர்கள் நிம்மதியாக – வாழ்வதற்கான சாத்தியமே இல்லை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்பு மீதும் ஆரிய – பார்ப்பன சனாதன ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலுக்கே கூட நம்பிக்கை இல்லை. அதனால்தான், இந்த அரைகுறை ஜனநாயக முறைக்கும் ஆப்பு வைக்கும் வகையில் காவி – கார்ப்பரேட் ஜோடியானது ஒட்டுமொத்த அரசமைப்பையும் பாசிசமயமாக்கி வருகிறது. இதன் மூலம், இவர்கள் நிறுவ முயல்வது, முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல, முதலாளித்துவ பாசிசமே என்பதை தினமணி வாசகர் சிவகங்கை சே.முத்துராமன் போன்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மேலும், இதற்கேற்ப, முடிவெடுக்கும் அரசு அதிகாரிகள், நடைமுறைப்படுத்தும் அரசு ஊழியர்களின் பதவிகளுக்கு சனாதனவாதிகளை பொருத்துவதும், இயலாத போது சனாதனத்திற்கு ஆதரவாக மாற்றுவதும் என்கிற பாசிச வலையைப் பின்னி வருகிறது. இதற்கு ஏதுவாக, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்படுவதற்கு தடையாக இருந்த சட்ட சரத்தையும் நீக்கிவிட்டது.
இந்த ஜனநாயக அமைப்பு முறையில் நம்பிக்கை இல்லாததால் தான், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், விஜயதசமி உரையில் “இந்துக்களுக்கு சிறு இடையூறு வந்தாலும், அரசையோ, சட்டத்தையோ நாட வேண்டாம்.” நேருக்கு நேர் மோதும்படி பயங்கரவாதத்தைக் கக்கியுள்ளார். ஆனால், நக்சல்பாரிகளோ, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சர்வதிகாரத்தை அரங்கேற்றும் போலி ஜனநாயக மன்றம் என்கிற வகையில் புறக்கணிக்கச் சொல்கின்றனர். மாறாக, தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும், உரிமையுடன் கூடிய ஜனநாயகத்தையும், தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையுடன் கூடிய சுதந்திரத்தையும் மக்களுக்கு வழங்கக்கூடிய மக்கள் ஜனநாயகத் தேர்தல் முறையைக் கோருகின்றனர். இந்தப் போராட்டத்தினூடே ஆயுதம் ஏந்துவதா? வேண்டாமா என்பதை அரசின் அணுகுமுறை – நடைமுறைதானே தீர்மானிக்கின்றது. இதற்கு, உதாரணமாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளதே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போல, பாசிச ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையிலான மோடி – ஷா அரசு, கடந்த 10 ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமையைச் சூறையாடி வருவதில் ஒரு சில துளிகளே இவை. தினமணி வாசகர் மதுரை கே.ராமநாதன் கூறுவது போல, “நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கோ, பாதுகாப்பிற்கோ இடையூறாக இருக்கும் எந்தவொரு இயக்கமுமே ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டிய இயக்கங்கள் ஆர்எஸ்எஸ், பிஜேபி, அதன் நிழல் இராணுவங்களே.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிய பொக்கிஷங்களான வளங்கள் அனைத்தையும் முதலீட்டுக்கான மையங்களாக மாற்றி, அதை அப்படியே, கார்ப்பரேட்டுகளின் கொள்ளை இலாபத்திற்கு அள்ளிக் கொடுத்து வளர்ச்சி என்ற பெயரில், நாட்டை பாதுகாப்பற்ற – நாசகரமான சூழலில் தள்ளியுள்ளது பாசிச மோடி – ஷா அரசு. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, இந்தியா முழுவதும் உள்ள வளங்களை இதுவரை பாதுகாத்து வந்த பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, அந்த வளங்கள் முழுவதையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தருவதற்கு, நக்சல்பாரிகள் தடையாக உள்ளனர். இதற்கு, அவர்கள் (நக்சல்பாரிகள்) காலூன்றக் கூடாது என்கிற இலக்கோடு நக்சல்பாரிகள் மீதான அவதூரை அள்ளி வீசுகிறது. அவர்கள் அழித்தொழிக்கப்படுவதை நியாயப்படுத்துகிறது பாசிச மோடி – ஷா அரசு. இதற்கு, தினமணியும், தனது வாசகர் அரங்கம் மூலம் வெண்சாமரம் வீசுகிறது
- மோகன்