மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார்:
மக்கள் பணத்தில் முதலாளிகள் மஞ்சள் குளிப்பதற்கான ஏற்பாடு!

ஒரு புறம் அதானி மற்றும் அம்பானிகளை ஊக்குவிப்பதற்காக திட்டங்களை வகுப்பது அதற்காக ஏராளமான கடன்களை ஏற்பாடுகள் செய்வது, கடன் தள்ளுபடி செய்வது மற்றும் வரி சலுகைகளை வழங்குவது; மறுபுறத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டு முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுப்பது, இதைத்தான் தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு ஈர்ப்பு, ease of doing business, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்று கதையளக்கின்றனர்.

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோல் என்று ஆளும்வர்க்கங்களாலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மைல்கல் என்று பாஜகவாலும் பிரச்சாரம் செய்யப்பட்ட இத்திட்டம் அது முன்மொழிந்த இலக்குகள் எதையுமே எட்டவில்லை என்பதோடு தொழிற்துறைவளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் குறைந்திருக்கின்றன என்பதுமே எதார்த்தம்.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 16.4 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவது (முதலில் 2022 க்குள் என இலக்கிட்டு பிறகு 2025க்கு மாற்றியமைக்கப்பட்டது). 

2. ஆண்டுக்கு (YOY) 12-14 சதவீத தொழிற்துறை வளர்ச்சியை எட்டுவது  

3. தொழிற்துறையின் மூலம் 2022க்குள் கூடுதலாக 100 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. 

ஆகியவை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூன்று முக்கிய இலக்குகளாக சொல்லப்பட்டது. 

இந்த இலக்குகளில் 50 சதவிகிதத்தைக் கூட மோடி அரசால் எட்டமுடியவில்லை என்பதையும் ஏற்கனவே இருந்த தொழில்துறை வளர்ச்சியும் தற்போது வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதாக மோடி அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன. 2014 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த பத்தாண்டுகளில் தொழிற்துறை வளர்ச்சி விகிதம் சராசரியாக 5.9% உள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக அடையப்போவதாகச் சொல்லப்பட்ட 12-14 சதவீத வளர்ச்சியில் பாதிதான்.  

அதேபோல கடந்த பத்தாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்துறையின் பங்கானது 16.04 சதவீதமாக உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 2025 க்குள் 25 சதவிகித தொழிற்துறையின் பங்களிப்பை அடைவது என்று கூறப்பட்டது.  

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 100 மில்லியன் புதிய வேலைவாய்ப்பை தொழிற்துறையில் உருவாக்கப் போவதாக உறுதியளித்திருந்தார் மோடி. ஆனால், அதற்கு மாறாக உற்பத்தி துறை வேலைவாய்ப்பானது 12.6 சதவிதத்திலிருந்து குறைந்து (2011-12)  11.6 சதவிகிதமாக உள்ளது. தொழில் துறையின் மந்தநிலையை விளக்க மற்றொரு எளிமையான உதாரணத்தைக் கூறலாம். 2020 ல் விற்பனை செய்யப்பட்ட கார்களை எண்ணிக்கை எட்டு வருடங்களுக்கு முன்பு 2012 ல் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்துள்ளது.  

அதேபோல 2022க்குள் 100 மில்லியன் வேலை வாய்ப்புகள் உற்பத்தி துறையில் உருவாக்கப்படும் என்று மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட பரப்புரைக்கு நேரெதிராக 2017 இருந்து 2021 க்குள் 24 மில்லியன் வேலை வாய்ப்பை தொழில்துறை இழந்திருந்தது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை ஏறத்தாழ 11 மில்லியன் வேலை வாய்ப்புகள் உற்பத்தி துறையில் இல்லாமல் போயின.  

தனியார் நிறுவனங்கள் தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றன அதனால் தான் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்குகளை அடைய முடியாமல் உள்ளது என்று மோடி கும்பல் காரணம் கூறியது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக 2019-20 பட்ஜெட்டில் வரிச்சலுகைகளை நிர்மலா சீதாரமன் அறிவித்திருந்தார். இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 30 சதவீகிதலிருந்து 25 சதவீதமாக குறைப்பதாகவும் அவர்கள் தொடங்கும் புதிய தொழில்களுக்கான கார்ப்பரேட் வரியை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவீதமாக குறைப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். மேலும் கொரோனா ஊரடங்கின்போது (2020) 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சலுகைகளையும் மிகக் குறைந்த வட்டியில் வங்கிக்கடனையும் இந்திய தொழில் துறை முதலாளிகளுக்கு மோடி அரசு வழங்கியது. 

இவ்வளவு சலுகைகளை முதலாளிகளுக்கு வழங்கியும் மேக் இன் இந்தியா செல்ப் எடுக்கவில்லை. 2014 ல் இருந்த தொழில்வளர்ச்சி விகிதம் தான் 2024 லிலும் இருக்கிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தினுடைய State of working India 2023 அறிக்கையில், 25 வயதுக்குள் உள்ள படித்த இளைஞர்களில் 42 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா என்ற போர்வையில் மக்கள் பணத்தை முதலாளிகளுக்கு மோடி மொத்தமாக தாரைவார்த்தது தான் மிச்சம். 

இதற்கிடையில் ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்ற திட்டத்தை(2020) மோடி அறிவித்தார். இத்திட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது; இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது மற்றும் இந்திய தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக ஒரு சில குறிப்பிட்ட தொழில்நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதனை முன்னிலைப்படுத்துவது என்ற மூன்று செயல்திட்டம் சொல்லப்பட்டது.  

இந்திய தொழில்துறையை ஊக்குவிப்பதென்பது அதானி மற்றும் அம்பானியை ஊக்குவிப்பது என்றுதான் அர்த்தம். சீனாவில் இருந்து வெளியேறும் ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க ஊக்குவிப்பதற்காக உற்பத்தி தொடர்புடைய ஊக்குவிப்பு(Production Linked Incentive-PLI) என்ற திட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு ஜூனில் மைக்ரான் நிறுவனம் குறை கடத்தி சிப்ஸ் (DRAM and NAND-storage and memory chips)களை ஒன்றுசேர்ப்பது (assembly) மற்றும் சோதனை செய்வதற்கான (test facility) தொழிற்சாலையை இந்தியாவில் (குஜராத்) தொடங்கப் போவதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(23,092 கோடி). இதில் 50 சதவீத அளவிலான தொகையை (11,546 கோடி) மோடி அரசு கொடுப்பதாக ஒத்துக்கொண்டது. குஜராத் பாஜக அரசாங்கம் 20% தொகையை(4,618 கோடி) வழங்குவதாகவும் ஒத்துக் கொண்டது. மீதமுள்ள 30 சதவீத தொகையை மட்டுமே அதாவது 825 மில்லியன் டாலர்கள் மட்டுமே (6,928 கோடி) மைக்ரானின் முதலீடு. அதையும் இரண்டு கட்டங்களாக முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு தருவதாக ஆஸ்கார் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்திய தரப்பு மைக்ரானுக்கு தருவதாக ஒப்புக்கொண்டு மானியத்தோடு(17,000 கோடி) ஒப்பிட்டு பேசினால் மைக்ரான் தரப்போகும் ஒரு நபருக்கான வேலைக்கு 3.2 கோடியை மானியமாக மோடி அரசு மைக்ரானுக்கு தருகிறது. இந்த கேலிக்கூத்துக்கு பெயர் தான் வளர்ச்சி. 

ஏறத்தாழ 17,000 கோடி சலுகைகளைக் கொடுத்து மைக்ரான் நிறுவனத்தை இந்தியாவில் தொழில் தொடங்க வைப்பதற்கான அவசியம் என்ன? ஆப்பிள் கைபேசி அசம்பளி தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்குவதற்காக ஆப்பிள் உடன் மோடி அரசு போட்டுள்ள ஒப்பந்தமும் இதே தன்மையுடையது தான்.  

ஒரு ஐபோனை இந்திய தொழிற்சாலையில் அசெம்பிள் செய்வதற்கு ஆகும் செலவு ஐபோனுடைய மொத்த விலையில் 4% ஆகும். ஆனால் இந்திய அரசு ஒரு ஐபோனுக்கு அதனுடைய மொத்த விலையில் ஆறு சதவீதத்தை மானியமாக கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய அரசு தரும் மானியத்தைக் கொண்டு இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்கான மொத்தச் செலவையும், தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட, ஆப்பிள் நிர்வாகத்தினால் சமாளிக்க முடியும். மீதமுள்ள 2% மானியம் ஆப்பிளுக்கான லாபம். ஆப்பிள் நிறுவனத்திற்கு எந்த செலவு இல்லாமல் மோடி அரசு பணம் கொடுத்து ஐபோனை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு புறம், அதானி மற்றும் அம்பானிகளை ஊக்குவிப்பதற்காக திட்டங்களை வகுப்பது அதற்காக ஏராளமான கடன்களை ஏற்பாடுகள் செய்வது, கடன் தள்ளுபடி செய்வது மற்றும் வரி சலுகைகளை வழங்குவது; மறுபுறத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டு முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுப்பது, இதைத்தான் தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு ஈர்ப்பு, Ease of doing business, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்று கதையளக்கின்றனர். 

இப்படி மக்கள் பணத்தில் இந்திய தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் மஞ்சள் குளிப்பதற்காகவே மேக் இன் இந்தியா ஆத்ம நிர்பர் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இத்திட்டங்களில் மூலம் என்ன செய்யப் போகிறோம் என்று மோடி அரசு எதை பரப்புரை செய்ததோ அதில் முப்பது சதவீதத்தைக் கூட அடையவில்லை.  

பெருமுதலாளிகளுக்கான இவர்களது நடவடிக்கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சியை இறங்கு முகத்திலும் கிட்டத்தட்ட மூடும் நிலைக்கும் தள்ளியுள்ளன. கூடவே பணமதிப்பிழப்பு, GST, கொரோனா ஊரடங்கு போன்ற மோடியின் ‘தெய்வீக நடவடிக்கையினால்’ சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வீழ்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.  

இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அவ்வாறு காட்டிக்கொள்வதற்கும் மோடி-அமித்ஷா கும்பல் கொஞ்சமும் தயங்குவதில்லை. தீவிரமடைந்துள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களின் சமூக வாழ்வில் பல்வேறு முரண்பாடுகளாக சிக்கல்களாக துன்பங்களாக வெளிப்படுகின்றன. ஆனால் இந்திய சமூகத்தை, மக்களுடைய பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களை நோக்கிய விவாதத்திற்குள் செல்லவிடாமல் மக்களின் சாதி-மத உணர்வுகளை தூண்டியும்(இந்து பெருமை-முஸ்லீம் வெறுப்பு) அதனடிப்படையில் கலவரத்தை நடத்தியும் அதன் மூலம் கொலைகளை செய்தும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறுபான்மையினரும் நாத்திகர்களும் கம்யூனிஸ்ட்களும் காரணம் என்று மாயத் தோற்றத்தை மக்களிடையே பாஜக பிரச்சாரம் செய்கிறது. அதாவது கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மோடி-அமித்ஷா பாசிச கும்பல் இந்த காவி பாசத்தை, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்துகிறது. மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் போன்ற தொழில்துறை திட்டங்கள் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவதற்கானதே அன்றி மக்களுக்கானதாக ஒருபோதும் இல்லை என்பது தான் உண்மை. 

  • அழகு 

 

தகவல் ஆதாரம்

https://madrascourier.com/opinion/make-in-india-an-abysmal-failure/

https://www.businesstoday.in/latest/economy/story/raghuram-rajan-uses-iphone-example-to-question-pli-scheme-346941-2022-09-12

https://scroll.in/article/1073404/ten-years-on-make-in-india-is-a-qualified-failure

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன