கேள்வி கேட்பதற்கான ஜனநாயகத்தை பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

 

கோவை கொடிசியாவின் தொழில் முனைவர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது, அனைவரும் அறிந்ததே.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவ உரிமையாளரும், கோவை உணவக சங்க கௌரவ தலைவருமான சீனிவாசன், GST-யில் உள்ள நிறை, குறைகளை, குளறுபடிகளை இந்த பாசிச முண்டங்களுக்கு புரியும் வகையில் ஜனரஞ்சகமாக, எளிமையாக, நகைச்சுவையாக எடுத்து முன்வைத்தார். அதிலும், அவர் GST-யை குறைக்கவோ, ரத்து செய்யவோ கோரவில்லை. மாறாக, அவற்றிலுள்ள முரண்களை, குளறுபடிகளை களையும்படிதான் கோரினார் தரைக்குறைவாக கூட எதுவும் பேசவில்லை.

“இனிப்புக்கு ஒரு வரி, காரத்திற்கு ஒரு வரி, காபிக்கு ஒரு வரி, பன்னுக்கு ஒரு வரி, கிரீம் வைத்த பன்னுக்கு ஒரு வரி” என பல வகையான வரியை போடுவது ஏன்? என்று வாடிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை. ஏன், கோவை மேற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூட GST குறித்து என்னிடம் சண்டை போட்டுள்ளார். போதாதக் துறைக்கு கணினியும் பில் போட தடுமாறுகிறது. இதனால், கடையை நடத்த முடியவில்லை. எனவே, இவற்றில் ஒரே மாதிரியான வரியை – அவை அதிகபட்சமாக இருந்தாலும் கூட –  கொண்டு வர பரிசீலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இவை, வலைதளங்களில் பரவாலாகியவுடன், இதற்கு, உரிய முறையில் விளக்கமளிக்க துணிவில்லாத, துப்பு இல்லாத இந்த பாசிஸ்டுகள் வெறி தலைக்கேறி, அவரை மிரட்டி பணிய வைத்து, வலுக்கட்டாயமாக மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். இவற்றை “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறுவது போல” ஆணவத்தின் உச்சம் மட்டுமல்ல ரவுடித்தனமும் கூட. ரவுடித்தனத்தை அன்றாடம் அரங்கேற்றி வரும், ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடி தலைமையிலான பாசிஸ்டுகளிடம் ஜனநாயகத்தின் உள்ளடக்கமான கேள்வி எழுப்பும் சுதந்திரத்தை எதிர்பார்ப்பது, அடி முட்டாள்தனம் என்பதை 3 குற்றவியல் சட்டமானது விரைவில் புரியவைக்கும்.

GST-யில் உள்ள குளறுபடிகளை நியாயமான முறையில், உண்மை விவரங்களுடன் எதிரே இருப்பது ‘நெற்றிக்கண்’ நிர்மலா சீதாராமன் என்றாலும், துணிவுடன் முன் வைக்கும் “நக்கீரன்” சீனிவாசன், “தானாக விரும்பி மன்னிப்புக் கோரினார்” என்று காதிலே பூ சுத்துவதில் வானதி சீனிவாசன் போன்ற கோயபல்ஸ்களுக்கு கைவந்த கலை என்பதை எவராலும் உணராமல் இருக்க முடியாது.

பாசிசம் மோடி அரசானது, பண மதிப்பிழப்பு, எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவைகளுடன் GST-யையும் கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில்களின் கழுத்தை நெரித்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை பறித்தது. இந்த துரோகத்தின் காயங்கள் ஆறுவதற்கு முன்பே, வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, மேலும், மேலும் GST-யை உயர்த்தி காயங்களை மேலும் ரணமாக்கி வருகிறது.

இந்த சித்திரவதையிலிருந்து மீள, GST-யை ரத்து செய்ய வேண்டும்; அல்லது படிநிலையை ரத்து செய்து, ஒரே வரியாக, குறைந்தபட்ச வரியை 5%-மாக திருத்தியமைக்க வேண்டுமென போராடுபவர்களை எதிரியாக, தேசத் துரோகியாக சித்தரிப்பதும், இப்படிப்பட்டவர்கள்தான் GST-யில் ஆதாயம் அடைந்து வருவதாக அவதூறு செய்வதும் எவ்வளவு அயோக்கியத்தனம்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மீது GST-யை திணித்து, அதன் இருப்பையும், வளர்ச்சியையும் தடுத்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வையும் பறித்து வருகிறது. மேலும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் GST-யைத் திணித்து அவர்களுடைய அன்றாட தேவைகளான சேமிப்பையும் சூறையாடி வருவதோடு, மேலும், மேலும் அவர்களை கடனாளியாக்கியும் வருகிறது.

இவற்றை வெளி உலகத்திற்கு தெரியாமல் ஊத்தி மூடவே, GST-க்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அவதூரை அள்ளி வீசுவதும், அடக்குமுறை செலுத்துவதும், கேள்வி கேட்பவர்களை மிரட்டி பணிய வைப்பதும், பணிய மறுத்தால் ED, ID-யை ஏவி அச்சுறுத்துவதும் அவர்களின் வாடிக்கையான செயலாக மாறி வருகிறது.

இதன் அடிப்படையில் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிறுவனங்கள் மீது ED, ID-யை ஆகிய மோடி அரசின் அடியாள் படைகளும் ஏவப்படலாம். இவை, சீனிவாசன் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கொடிசியாவின் மீதான தாக்குதலாக உணர்ந்து, தங்களின் ஜனநாயக உரிமையை இழக்காமல் மீட்டெடுக்க, ஒட்டுமொத்த கோவை மக்களுடன் இணைந்து போராடுவதே அதிகபட்ச தீர்வாக அமையும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன