அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

மோடி 3.0 ஆட்சியில் அவர் முன்புபோல நடந்துகொள்ள முடியாது. சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் மோடியின் பாசிச திட்டங்களை அமல்படுத்த விடமாட்டார்கள் என்று பலரும் ஜோசியம் சொல்லுகின்றனர். மாறாக தான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அருந்ததிராயின் மீதான கரையான் அரித்துப் போன ஒரு வழக்கை எடுத்து கொண்டு அவரை UAPA சட்டத்தில் கைது செய்ய ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் அறிவுத்துறையினரின் மீதான தங்களுடைய பாசிச நடவடிக்கைகள் மோடி 3.0 விலும் தொடரும் என மோடி-அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது.

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி கவர்னர் வி. கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி (Committee for releasing Political Prisoner’s) 2010 அக்டோபரில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த  காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதற்காக இந்த நடவடிக்கை எனக்கூறியுள்ளது டெல்லி போலீஸ்.

 

அக்கருத்தரங்கில் எழுத்தாளர் அருந்ததிராய், “காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை. இந்திய அரசும் கூட, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்பதை ஐ.நா.வில் ஏற்றுக்கொண்டது. அப்படியானால் நாம் ஏன் இப்போது அந்தக் கதையை மாற்ற முயற்சிக்கிறோம்? 1947ல் இந்தியா இறையாண்மை தேசம், இறையாண்மை கொண்ட ஜனநாயகம் என்று சொன்னோம், ஆனால் 1947 நள்ளிரவில் இருந்து இந்திய அரசு என்ன செய்தது என்று பார்த்தால், அந்த காலனிய நாடு, கற்பனையால் நாடாக மாறியது.  இந்திய அரசு மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நக்சல்பாரி கிளர்ச்சியின் போது, ​​பஞ்சாப், ஹைதராபாத், கோவா, ஜுனாகர், மிசோரம் ஆகிய இடங்களில் இந்திய அரசு இராணுவ ரீதியாக தலையிட்டது. இந்திய ஆளும்வர்க்கம் நக்சலைட்டுகள் நீண்ட காலப் போரில் நம்பிக்கை கொண்டவர்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் உண்மையில் இந்திய அரசுதான் சொந்த மக்களுக்கு எதிராக நீடித்த போரை நடத்துகிறது என்று பேசியிருந்தார்.

ராயிக்கு எதிராக சங்கிகள் தேசபக்தி என்ற போர்வையில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல ‘தேசபக்த விமர்சகர்கள்’ ராயின் கருத்தை விமர்சனம் செய்து எழுதினர். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அப்போதைய ஒன்றிய அரசு, அருந்ததி ராயை தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்போவதாக அச்சுறுத்தியது. ஒரு மூத்த மத்திய அமைச்சரோ, இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கும் அதேவேளையில், அது மக்களின் தேசபக்தி உணர்வுகளை பாதிக்கும்படி இருக்ககூடாது என்றார்.

தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ராய், “பத்திரிகைகளில் சிலர் நான் ‘வெறுக்கத்தக்க பேச்சுகளை’ பேசுவதாகவும், இந்தியா உடைந்து போக விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மாறாக, நான் சொல்வது அன்பு மற்றும் பெருமையிலிருந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவதையோ, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையோ, சிறையில் அடைக்கப்படுவதையோ அல்லது நகங்களை பிடுங்கி துன்புறுத்தியோ அவர்களை இந்தியர்கள் என்று கட்டாயப்படுத்தி சொல்லவைப்பதை எதிர்ப்பதிலிருந்து வருகிறது. மனதில் உள்ளதை பேசியதற்காக ஒரு நாடு எழுத்தாளரின் குரலை நெரிப்பது என்பது பரிதாபமானதாகும்” என்று எழுதினார்.

ராயின் மீது சுகில் பண்டிட் என்ற காஷ்மீர் பண்டிட் வழக்கு தொடுத்திருந்தார். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பதியப்பட்ட ஒரு வழக்கை தற்போது தூசிதட்டி எடுத்திருக்கிறது மோடியின் போலீஸ். 1000 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கையை டெல்லி குற்றவியல் போலீசார் தாயாரித்துவருவதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.

ராயின் பேச்சு, இரு சமூகத்துக்கு இடையே கலவரத்தை தூண்டுவது, மத அடிப்படையில் கலவரத்தை தூண்டுவது சமூக அமைதிக்கும் ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் IPC 153A,  153B,  504, 505 ஆகிய பிரிவுகளிலும் UAPA வின் 13வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் ஆளுநரிடம் ஒப்புதல் கூறியிருந்தது. கூடவே IPC 124A வும் சேர்க்கப்பட்டிருந்தது. IPC 153A,  153B,  505 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிய கடந்த அக்டோபர் அன்று டெல்லி ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். கடந்த வாரம் UAPA-வின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறார்.

ஆனால் குற்றவியல் தண்டனை சட்டம் 468 ன் படி தண்டனையின் காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு உள்ளிருந்தால் வழக்கு பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்து அந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது. IPC 153A,  153B,  505 ஆகிய பிரிவுகளின் அதிகபட்ச தண்டனைக்காலம் மூன்று ஆண்டுகள் தான். எனவே இப்பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டாலும் நீதிமன்றங்கள் இதனை விசாரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இவைத் தெரிந்திருந்தும் ஆளுநர் ஒப்புதல் அளித்தது கேலிகூத்தானது. தேசதுரோக பிரிவான 124A வும் 2022 ல் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தான் UAPA ன் கீழ் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர்.

2010 ல் காஷ்மீர் குறித்து பேசிய கருத்து பதினான்கு வருடங்கள் கழித்து சமூகத்தில் அமைதியின்மையையும் ஒழுங்கின்மையையும் உருவாக்கியுள்ளது எனக்கூறி வழக்கு போடும் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் கடந்த பத்தாண்டுகளாகவும் சமீபத்திய தேர்தலிலும் முஸ்லீம்கள் மீது வெறுப்பையும் அவதூறுகளையும் பிரச்சாரம் செய்து வருகின்ற மோடி-அமித்ஷா கும்பல் மீதும் தினந்தோறும் தலித்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் மீதும் இன்றுவரை எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை.  

எழுத்தாளர் அருந்ததி ராயை கைது செய்ய ஆளுநர் சக்சேனாவின் ஒப்புதலுக்கு பின்னால் பாஜக வின் அரசியல் உள்நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மோடி தலைமையிலான காவி கும்பல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து (2014) அறிவுத்துறையினர் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடுத்து வருகிறது. தன்னை அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை நக்சலைட் என்று பொய் வழக்குகளை போட்டும் தேசவிரோதிகளாக சித்தரித்தும் அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்தியும் UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து துன்புறுத்திவருகிறது பாசிச மோடி கும்பல். ஜே என் யு மாணவர்கள் தொடங்கி பீமாகொரேகான் வழக்கு, டெல்லி கலவர வழக்கு, நீயூஸ்கிளிக் ஆசிரியர் கைது வரை இதே கதைதான். இவ்வழக்குகளில் பலரை கைது செய்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை முறையான விசாரனை நடத்தப்படவில்லை.

 

உதாரணமாக பீமாகொரேகான் வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஒருவர் மீது கூட நீதிமன்ற விசாரணையை ஆரம்பிக்கவில்லை. இதிலிருந்தே மோடி கும்பலின் உள்நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். UAPA வில் கைது செய்யப்பட்டவர்களில் 90% பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்கின்றனர். குறிப்பாக மோடி-அமித்ஷா கும்பல் இச்சட்டத்தின் மூலம் தன்னை அம்பலப்படுத்துபவர்களையும் தன்னுடைய திட்டத்திற்கு ஒத்து வராதவர்களையும் அடிபணிய வைப்பதற்காகவே பயன்படுத்துகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அதே அணுகுமுறையைதான் தற்போது அருந்ததி ராய் விசயத்திலும் மோடி கும்பல் பின்பற்றுகிறது.

மோடி 3.0 ஆட்சியில் அவர் முன்புபோல நடந்துகொள்ள முடியாது. ஏறத்தாழ அவர் பல்லு பிடுங்கிய பாம்பு போலத்தான் இருக்கமுடியும். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் மோடியின் பாசிச திட்டங்களை அமல்படுத்த விட மாட்டார்கள் என்று பலரும் ஜோசியம் சொல்லுகின்றனர். ஆனால் தான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அருந்ததி ராயின் மீதான கரையான் அரித்துப் போன ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு UAPA சட்டத்தில் கைது செய்ய ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் தங்களுடைய பாசிச நடவடிக்கைகள் மோடி 3.0 விலும் தொடரும் என மோடி-அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது.

அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் உசைன் மீதான UAPA வழக்கு என்பது கடந்த 10 ஆண்டுகளாக மோடி செய்து வந்த பாசிச ஒடுக்கு முறையின் தொடர்ச்சி தான். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல மறுக்க முடியாத உண்மை. இத்தகைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் மட்டுமே இவ்விருவரின் மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியும்.

  • அழகு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன