பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல், தலித் – இஸ்லாமிய – கிருத்துவ மக்களுக்கும் மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது!

 

 

18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், வளர்ச்சியின் பலன்களை பெறவும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வளங்கள் மீதான முதல் உரிமை கோரல் இருக்க வேண்டும்’என்றார்.

இதனை காங்கிரஸ் கட்சியானது, மனித முகம் கொண்ட வளர்ச்சி என்பதாக கூறிவந்தது. ஆனால், கார்ப்பரேட்டுகள் தனது சுரண்டலுக்கு இது பொருத்தமாக இல்லை என்பதால் புறக்கணித்து விட்டது. இதற்கு மாற்றாக தான் ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிசக் கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தது.

மன்மோகன்சிங்’கின் உரையை தனது பார்ப்பன மதவெறி அரசியலுக்கு ஆதரவாகத் திரித்து இராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் – பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ‘காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்து மக்கள் சொத்துகளை பகிர்ந்தளித்துவிடும், இந்திய மக்களின் உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் பிரித்தளித்து விடும். இவை அர்பன் நக்சல் (URBAN NAXAL) எண்ணங்கள் என்பதால் உங்கள் தாலியைக் கூட விட்டுவைக்காது”’ என்கிற அவதூறை பாசிச இட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸ் பாணியில் அவிழ்த்து விட்டார் பாசிச மோடி. இந்து மதவெறிப் பிரச்சாரம் என்கிற வகையில் தேர்தல் நடத்தை விதி மீறல் மட்டுமல்ல; சட்டத்திற்கு விரோதமானது; ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட.

பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களான பட்டியல் – பழங்குடியினர் – சிறுபான்மையினர் – இசுலாமியர்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் வளர்ச்சியின் பலன்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை நெல்லுக்கு இறைத்த நீரைப் புல்லும் புசித்தது என்கிற வகையில் ஒருவிதத்தில் ஏற்கலாம். ஊர் தாலியை அறுப்பது, ஏழைகளின் வயிற்றில் அடிப்பது, பெண்களை – சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, தலித் – சிறுபான்மை மக்களை விமர்சிப்பவர்களை இலக்கு வைத்துக் கொல்வது மோடி வகையறாக்களான பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி கும்பலின் வேலை. இழிவான இவ்வேலையை நக்சல்பாரிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அவர்கள் உழைக்கும் மக்களின் விடுதலையை நேசிப்பவர்கள். இவர்களைப் போல கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் அல்ல.

உழைக்கும் வர்க்க அரசியலை உயர்த்திப் பிடிக்கும் நக்சல்பாரிகளின் இலக்கு, மற்ற மதங்கள் –  ஜாதிகள் – தேசங்கள் – இனங்களிலுள்ள உழைக்கும் மக்களின் சேமிப்புகள் அல்ல, அவர்களின் இலக்கு கார்ப்பரேட்டுகளின் சொத்துகளே. அவர்களின் (கார்ப்பரேட்) சொத்துகளை பறிமுதல் செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமூக சொத்தாக மாற்றியமைப்பதே நக்சல்பாரியின் எண்ணங்களும், செயல்பாடுகளும். பாசிஸ்டுகளைப் போல கார்ப்பரேட்டுகளின் சொத்துகளை பாதுகாக்கும் பூதங்கள் அல்ல.

இந்த பூதங்கள்தான் கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பை அழித்தும், விலைவாசியை – பெட்ரோல் – டீசல் – கேஸ் விலையை உயர்த்தியும், ஜிஎஸ்டி வரியை திணித்து பெரும்பான்மை உழைக்கும் இந்து மக்களின், இதர உழைக்கும் மக்களின் சேமிப்பைப் பிடுங்கி, 3% அரிய வகை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, வங்கி கடன் தள்ளுபடி என்ற பெயரில் அவர்களின் கஜானாவை நிரப்பியது. மேலும், வேளாண் சட்டங்கள் – தொழிலாளர் சட்டங்கள் – 12 மணி நேர வேலை ஆகியவற்றைத் திணித்து கொடூரமான சுரண்டலுக்கு ஆசி வழங்கியதின் மூலமும், அரசுச் சொத்துகளை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு விற்றது மூலமும் அவர்களின் அபரிவிதமான கொள்ளைக்கு வழி வகுத்தது. அவர்களின் சொத்து மதிப்பை இலட்சக்கணக்கான கோடிகளில் உயர்த்தி உலகப் பணக்காரர்கள் வரிசையில் அணிவகுக்கச் செய்தது. இதற்கான கையூட்டுதான் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பெறப்படும் கோடிக்கணக்கான பணம்.

இதிலிருந்து நமக்கு ஒரு உண்மை விளங்கும், இந்துக்கள், இந்துக்கள் என்று இவர்கள் ஊளையிடுவது கார்ப்பரேட்டுகளுக்குதானே தவிர உழைக்கும் வர்க்கத்திற்கோ, உழைக்கும் இந்துக்களுக்கோ அல்ல. அந்த வகையில் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கு விரோதமானது.

அதனால்தான் கார்ப்பரேட்டுகள் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப் படுத்துவதற்கும், எதிர்க் கட்சிகளை ஈவு இரக்கமற்ற வகையில் ஒடுக்குவதற்கும், தனது மூலதனத்திற்கு இழப்பு ஏற்படாமல் மேலும் பெருக்குவதற்கும் ஏதுவாகவே பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலைத் தெரிவு செய்து, அதற்காக கோடி கணக்கில் செலவு செய்து பாசிச மோடியை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்ப்பதற்குதான். இதே அடிப்படையில் மக்கள் அவையையும் இதற்கேற்ப, அதாவது காவி கார்ப்பரேட் பாசிஸத்திற்கேற்ப வார்ப்பு செய்கின்றன. கார்ப்பரேட்டுகளால் கையகப்படுத்தப்பட்டு வரும் ஊடகங்களும், ஊதுக் குழல்களும். இவற்றை முறியடிக்க கார்ப்பரேட் பணத்தால் அரங்கேற்றப்படும் தேர்தல்பாதை உதவாது. உழைக்கும் மக்களால் நிரப்பப்படும் வீதி போராட்டங்களே உதவும்.

– கீரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன