பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

மோடியின் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையர், மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தேர்தல் நடக்கும் முன்பாகவே மோடிதான் வெற்றி பெற்று பிரதமராக வரப்போகிறார் என்று அவருக்காக 100 நாள் திட்டத்தை உருவாக்க வேலை செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இவர்கள் அனைவரும், அரசுத் தலைமை உத்தரவிடுகிறது அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்தின் அணியில் இணைந்து அதற்காக உளமார பணியாற்றுகின்றனர்.

 

 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களைப் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கூட்டத்திற்கு, கட்டுப்பாடின்றி குழந்தைகளைப் பெற்றுப் போடும் கூட்டத்திற்கு இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துக் கொடுக்க போகிறது என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருகிறார் நரேந்திர மோடி.

தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமன்றி காங்கிரஸ் கட்சி குறித்தும் பொய்யான தகவல்களைக் கொண்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார் மோடி. மோடியின் இந்த வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும், பொய்ப்பிரச்சாரத்திற்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தாலும் அவர் அதனை நிறுத்தப்போவதில்லை.

மோடியின் இந்த மதவெறிப்பேச்சுக்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதோடு, இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல பத்தாயிரம் கடிதங்களும் எழுதியிருக்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையமோ, தலைமைத் தேர்தல் அதிகாரியோ இது குறித்து வாயே திறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர்.

தேர்தல் பரப்புரையின் போது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், மதவெறியைத் தூண்டும் விதமாகவும் பேசிவரும் மோடியின் மீதும் மற்ற பாஜக தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரினால், தேர்தல் கமிசன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீதான தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுக்களுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறுகிறது. அதாவது அப்பட்டமாக மதவெறிப் பிரச்சாரம் செய்யும் மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதைத் தேர்தல் ஆணையம் சொல்லாமல் சொல்கிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையைத் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையமும் அதன் அதிகாரிகளும் பாசிஸ்டுகளின் அணியில் இணைந்து கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பாஜக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிவதற்கு முன்பாகவே தாங்கள் தான் அதில் வெற்றி பெருவோம் ஆகையால் அதன் பிறகு வரும் 100 நாட்களில், செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து எல்லா அமைச்சரவையும் செயல்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். இதனை மே 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கெடு விதித்துள்ளார். மார்ச் 3 அன்று நடந்த அமைச்சரவைச் செயலாளர்களுடனான கூட்டத்தில் 9 மணி நேரம் உரையாற்றிய மோடி, அதிகாரிகள் இந்த தேர்தல் காலம் குறித்து, கவலைப்படாமல் தங்களது பணிகளைத் தொடர வேண்டும் என்றும், ஜூன் 1ம் தேதி அவர்களைச் சந்திக்க வரும் போது தனக்கு 100 நாள் செயல்திட்டம் தேவை என்றும் கூறியுள்ளார்.  மோடியின் இந்த உத்தரவு ஒரு பக்கம் இருக்க, இந்த உத்தரவைத் தலைமேல் ஏந்தி எல்லா அமைச்சரவை அதிகாரிகளும் துரிதமாகப் பணியாற்றி வருகிறார்கள்.  

ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலாளர்கள் அனைவரும் குழுவாக ஆக்கப்பட்டு, 100 நாள் செயல்திட்டம் எப்படி வர வேண்டும், அதில் மோடி கூறிய ஆறு அம்சங்களில் என்ன என்ன இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, தலைமைச் செயலரிடம் அதனைக் காண்பித்து ஒப்புதல் வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென அவர்கள் இரவு பகல்பாராது, ஞாயிறு விடுமுறை கூட எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்பதை மோடி நம்புகிறாரோ இல்லையோ, இந்த அமைச்சரவைச் செய்லாளர்களும் மற்ற அதிகாரிகளும் உளமார நம்பி வேலை செய்கின்றனர். இவர்கள் வரிசையில், அயர்லாந்துக்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா ஒரு படி மேலேபோய் பாஜகவின் விசுவாசமான தொண்டராகவே மாறிவிட்டார். அயர்லாந்து நாட்டு நாளிதழ் ஒன்று மோடியை விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு, மோடி மீதான தனது விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.

அயர்லாந்து நாட்டு நாளிதழான தி ஐரிஷ் டைம்ஸ் இந்தியாவில் மோடியின் ஆட்சி குறித்தும் அது ஜனநாயக விழுமியங்களை எப்படி மீறுகிறது, நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எவ்வாறு அது வழக்கு போட்டு முடக்கியுள்ளது எனவும் எழுதியுள்ளது.

ஒரு நாட்டின் தூதராக இதனைக் கண்டித்து எழுதும்போது இந்தியாவில் அப்படியெல்லாம் ஜனநாயகம் மீறப்படுவதில்லை, இங்கே ஜனநாயகம் தழைத்தோங்குகிறது, பாலாறும் தேனாறும் ஓடுகிறது என எழுதலாம். ஆனால் இந்தியத் தூதரோ நரேந்திர மோடி கறையற்றவர், நேர்மை குணம் கொண்டவர், தலைசிறந்த சிந்தனையாளரான இவர் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப் பிரபலமான தலைவராக உள்ளார் என்று கூறி மோடி புகழ் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி இந்தியாவில் ஒரு குடும்ப ஆட்சியின் காரணமாக ஊழல் மலிந்து, வேரூன்றியிருக்கும் சூழலை எதிர்த்து மோடி போராடி வருகிறார் என்றும் கூறியிருக்கிறார்.   

வெளிப்படையாகவே மோடி புகழ் பாடி, அவரது அரசியல் எதிரிகளைச் சாடும் இந்த மனநிலை நாஜி ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனியின் ஃபியூரர் வழிபாடு, அதாவது ஹிட்லர் எனும் மாபெரும் தலைவர் தங்களது தேசத்தை மீட்டெடுக்க வந்தவர் எனும் நம்பிக்கைகொண்டு ஹிட்லரை வழிபட்ட அந்நாட்டு அதிகாரிகளின் மனநிலையை ஒத்ததாக இருக்கிறது.

நாஜிக் கட்சி தங்களுக்கு எதிரானவர்களை மட்டுமன்றி அரசு அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவருவதற்குச் செய்த எல்லாவற்றையும் காவி பாசிஸ்டுகள் தற்போது இந்தியாவில் செய்து வருகின்றனர். ஒத்திசைவாக்கல் எனும் அவர்களது இந்த நிகழ்ச்சிநிரலில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு திகார் ஜெயில் என்றால் அகிலேஷ் மிஸ்ராவுக்கு அயர்லாந்து தூதர் பதவி.

மோடியின் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையர், மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தேர்தல் நடக்கும் முன்பாகவே மோடிதான் வெற்றி பெற்று பிரதமராக வரப்போகிறார் என்று அவருக்காக 100 நாள் திட்டத்தை உருவாக்க வேலை செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இவர்கள் அனைவரும், அரசுத் தலைமை உத்தரவிடுகிறது அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்தின் அணியில் இணைந்து அதற்காக உளமார பணியாற்றுகின்றனர்.

இது பாசிசத்தின் ஒத்திசைவாக்கல் நிகழ்ச்சிப்போக்கு எந்த அளவிற்கு வெற்றிபெற்றிருக்கிறது என்பதையும், பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதை நோக்கி காவி கார்ப்பரேட் பாசிசம் எந்த அளவிற்கு முன்னேறிச்செல்கிறது என்பதையும் காட்டுகிறது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன