ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

ராகுல் காந்தி சொல்வதை நேர்மறையில் எடுத்துக் கொண்டால் கூட அவர் சொல்வது போல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக வின் பாசிச அஜண்டாவிற்கு சேவைசெய்யும் இந்த அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? அதற்கு இந்த கட்டமைப்பில் வாய்ப்புகள் உண்டா? இல்லை என்றுதான் கூறவேண்டும்.

“அரசாங்கம் மாறியதும், ‘ஜனநாயகத்தைக் கொலை’ செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்! மேலும் இதையெல்லாம் செய்ய யாருக்கும் தைரியம் வராத வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்” இது ராகுல் காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டது.   

ராகுலின் கோபத்திற்கு காரணம், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சிக்கு 1862 கோடி அபராதம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அதுப்பியது தான். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியினை முடக்குவதற்காக மோடி செய்துள்ள சதி என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.                 

வருமான வரித்துறை இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், “ரூ. 14 லட்சம் விதிமீறலுக்காக” 1823 கோடி அபராதம் என்றால் அதே விதிகளின் படி பாஜகவின் “ரூ. 42 கோடி விதிமீறலுக்கு”  அபராதத் தொகையாக ரூ 4,600 கோடியை அக்கட்சிக்கு விதித்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரசுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பிவிட்டு பாஜகவை கண்டுகொள்ளாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றிலும் மவுனம் காக்கின்றனர். என்கிறது காங்கிரஸ் கட்சி.  

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் காங்கிரசை மட்டுமல்ல தனக்கு ஆதரவாக இல்லாத அனைத்து கட்சிகளையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறது. இதற்காக ED, CBI, IT, NIA ECI, ANI போன்ற நிறுவனங்களின் துணையோடு பாசிச மோடி கும்பல் எதிர் கட்சிகளை ஒடுக்கிவருகிறது. இதன் மூலம் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பல்வேறு கட்சிகளை ஒடுக்கியும்/உட்கிரகித்துக் கொண்டும் பாசிச ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் தலைமையிலான சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவது என்று திட்டமிடுகிறது. இந்த பாசிச கும்பலின் நெருக்கடியை தாங்க முடியாமல் தான் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார்.  

எதிர்கட்சிகளுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கமல்ல. ஏனெனில் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என எல்லா ஆணிகளுமே மக்களுக்கு தேவையற்ற ஆணிகள்தான்.  

ஆனால் நமது கேள்வியே ராகுல் காந்தி சொல்வதை நேர்மறையில் எடுத்துக் கொண்டால் கூட அவர் சொல்வது போல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக வின் பாசிச அஜண்டாவிற்கு சேவைசெய்யும் இந்த அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? அதற்கு இந்த கட்டமைப்பில் வாய்ப்புகள் உண்டா? என்பதுதான். கடந்தகால உதாரணங்களில் இருந்தே இதற்கான பதிலை பெறமுடியும்.      

       

கடந்த ஆண்டு நடந்த மணிப்பூர் கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குக்கி இனப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். உலகமே பார்த்து அதிர்ந்துபோன இந்த கொடிய நிகழ்வின் ஆரம்பப் புள்ளியே மைத்தி மக்களுக்கு பழங்குடி தகுதி அளிப்பதை ஒட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த வழிகாட்டுதல் தான்.   

மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான M V முரளிதரன் வழங்கியிருந்த இவ்வழிகாட்டுதலை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு “மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்க வேண்டும். இது முற்றிலும் தவறானது, நீதிபதி முரளிதரனின் தவறை நிவர்த்தி செய்ய நாங்கள் அவருக்கு கால அவகாசம் கொடுத்தோம், அவர் செய்யவில்லை. அதற்கு எதிராக நாங்கள் இப்போது தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.” என்றது  

இந்த வரலாற்றுத் தவறுக்கு நீதிபதி முரளிதரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது, அவ்வளவு தான்.  இவ்வளவு பெரிய அநீதிக்கு அடிக்கொள்ளியாக இருந்த தீர்ப்பை வழங்கிய அந்த நபருக்கு இதற்கு மேல் வேறெந்த தண்டனையும் வழங்கவில்லை வழங்கவும் முடியாது.              

 

தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்துவிட்டது. ஆனால் அச்சட்டம் கொண்டு வரப்பட்ட 2017ல் இருந்து இன்று வரை ஓட்டுக் கட்சிகள் மொத்தமாக 12009 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளன. இதில் சராசரியாக பாதி சதவீதத்திற்கு மேல் அதாவது 6,986 கோடி ரூபாய் நிதியை தேர்தல் பத்திரம் மூலம் பாஜக கட்சி மட்டுமே பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி இந்த மொத்த பணமும் சட்டவிரோதமாக பெறப்பட்டவையே.   

தரமற்ற மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்த ஏழு மருந்து நிறுவனங்கள் அரசின் தண்டனைகள் இருந்து தப்பிப்பதற்காக தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளன. மத்திய அரசின் கட்டுமான ஒப்பந்தங்களை பெற பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்து கட்டுமான ஒப்பந்தங்களை அந்நிறுவனங்கள் பெற்றுள்ளன. நிதி நிறுவனங்கள்(Kodak linked NBFC) தங்களுக்கு சாதகமான சலுகைகளை ஒன்றிய அரசிடம் இருந்து பெற தேர்தல் பத்திரங்கள் மூலம் 130 கோடி நிதியை பாஜக விற்கு வழங்கியுள்ளது.  

பாரதி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனக்கு சாதகமாக விதிமுறைகளை திருத்துவதற்கு பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியுள்ளது. மத்திய/மாநில  அரசினுடைய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை தனியார் நிறுவனங்கள் தனக்கு சாதகமாக மாற்றி அமைப்பதற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல நூறு கோடிகளை கட்சிகளுக்கு நிதியளித்துள்ளனர். இன்னும் கூடுதலாக, தேர்தல் பத்திரம் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக பல நிறுவனங்களிடமிருந்து கட்சிகள் நிதிகளை பெற்றுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் முதலாளிகளின் நலங்களுக்கு ஆதரவாக திட்டங்களைக் கொண்டுவர சட்டபூர்வமான வழியில் ஓட்டுக்கட்சிகள் லஞ்சம் பெறுவதை தேர்தல் பத்திரங்கள் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளனர். இதனை அதிகாரிகளும் நூறு சதவிகிதம் அமல்படுத்தியுள்ளனர். 

இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலமாக தான் வழங்கப்பட்டது. இந்திய தரகு முதலாளிகளும் பாஜகவும் தங்களுக்கு சாதகமான சலுகைகளை பெற தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வாறு மோசடி(லஞ்சத்தை சட்டபூர்வமான வழியில்) செய்துள்ளனர் என்பது பற்றிய செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. இப்படி ஆரம்பத்தில் இருந்தே முறைகேடுகளுடனே கடந்த ஆறு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த தேர்தல் பத்திரம் சட்டம் மூலம் பணம் பெற்ற எந்த கட்சிகள் மீதும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.  

இந்த சட்டத்தை கொண்டுவந்த பாஜக கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீதும் அதனை  நடைமுறைப்படுத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் இதர மத்திய அரசு அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அவ்வாறு எடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றமும் வழிகாட்டவில்லை. அவ்வாறு தீர்பளிப்பதற்கும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. காரணம் இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நாங்கள் தலையிட முடியாது என்பார்கள்.  

Ed, IT, CBI, NIA, EC போன்ற அமைப்புகள் அப்பாட்டமாகவே பாஜக வின் கிளை அமைப்புகள் போல் செயல்படுகின்றன. பாஜக வின் அரசியல் திட்டத்தினை (காவி-கார்பரேட் நிகழ்ச்சி நிரல்) அமல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் போலவே அதன் அதிகாரிகளும் கிடைமட்ட ஊழியர்களும் செயல்படுகின்றனர். இவையனைத்தும் சட்டவிதிமுறைகளுக்கு உடபட்டுதான் நடக்கிறது. இது உண்மை என்று தெரிந்திருந்தாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு தண்டித்தால் இந்த அரசகட்டமைப்பையே தண்டிக்க வேண்டும். அதை எப்படு செய்வது?

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றிய முறையை பாருங்கள். தான் கொண்டு வந்த சட்டத்தின் மீது குறைந்தபட்சம் விவாதம் கூட நடத்தவில்லை. இவர்கள் ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக விதிகளையும் மரபுகளையும் கூட பாஜக பின்பற்றவில்லை. இந்தச் சட்டங்கள் அனைத்துமே நிதி மூலதனங்களுக்கு ஆதரவானதாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இந்திய தரகு முதலாளிகளின் பகற்கொள்ளையை உத்திரவாதப்படுத்துவதாகவுவே உள்ளது. “பாஜக கொண்டுவரும் சட்டங்கள் குறித்து எந்த வாதமும் நாடாளுமன்றத்தில் நடத்த அனுமதிப்பதில்லை, அப்படி நடத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் கனிமொழி.             

 

இந்த சட்டங்களினால் பல கோடி கணக்கான மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் அவர்கள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டும் சுற்றுச்சூழல் நாசப்படுத்தப்பட்டும் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் தனியார்மயம்-தாரளமயம்-உலகமயம் என்ற மறுகாலணியாக்க  நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் மிகத் தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு பெரிய பாதகங்களுக்கு அடிப்படையாக இருந்த இந்த சட்டங்களை அமல்படுத்தியதற்காக பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அல்லது அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களையும் அல்லது இதற்கு பின்னால் இருந்து வேலை செய்த அதிகாரிகளையோ தண்டிக்க ஏதாவது வழிவகை உண்டா? இந்த 75 ஆண்டுகால ‘ஜனநாயக’ இந்தியாவில் அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா?  

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவுக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பகுதி மக்களின் போராட்டத்தில் 13 பேரை போலீஸார் சுட்டுக் கொண்டனர். ஆனால் இன்றுவரை அந்த போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  துப்பாக்கி சூட்டின் போது பொறுப்பிலிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. 1985 இல் இருந்து இன்று வரை ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அத்வானி-மோடி-அமித்ஷா கும்பல் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கலவரங்களின் மூலமும் போலி மோதல்களின் வாயிலாகவும் இந்துத்துவா குண்டர்படையைக் கொண்டும் கொன்றிருக்கிறது. சிறுபான்மையினரின் சொத்துக்கள் சுரையாடப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றுவரை இதற்கு காரணமானவர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. பிரதமராகவும் முதல்வராகவும் அமைச்சர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இக்குற்றங்களில் இருந்து ஆர்எஸ்எஸ்-பாஜக காலிகளை விடுதலை செய்ததற்காக நீதிபதிகளுக்கும் உதவி புரிந்த உயர் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வும் ஏராளமான சலுகைகளும் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. மொத்தக் கட்டமைப்புமே இவ்வாறுதான் கட்டியமைக்கப்பட்டிடுக்கிறது.  

இச்சட்டங்களை எதிர்த்து மக்கள் போராடினாலோ அல்லது மக்களை திரட்டி பல்வேறு அமைப்புகள் போராடினாலோ இந்த அரசியலமைப்பு சட்டத்தின் படி அது தண்டனைக்குரிய குற்றம். மக்கள் நலன் சார்ந்து போராடக்கூடிய பல தோழர்கள் மிகக் கடுமையான சட்டங்களினால் மிக கடுமையான சட்டங்களை கொண்டு தண்டிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதற்கு காரணம் இந்த நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளிகளுக்கான ஜனநாயகமாகவும் பெரும்பான்மை மக்களுக்கு மக்கள் மீதான சர்வாதிகாரமாகவும் எதார்த்தத்தில் இருக்கிறது. இந்த அரசியலமைப்பு சட்டத்தினுடைய உள்ளடக்கமும் அதுதான். எனவேதான் இதனை போலி ஜனநாயகம் என்கிறோம். இதில் ஓட்டுபோடுவதைத் தவிர பெரும்பான்மை மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

கூடவே, கடந்த 10 வருடங்களாக பாஜக தன்னுடைய காவி கார்ப்பரேட் பாசிச திட்டத்திற்கு ஒத்திசைவான வழியில் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையுமே நகர்த்தி வந்திருக்கிறது. மக்கள் மனதிலோ, முஸ்லிம் வெறுப்பையும் கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்பையும் பெரியார் திராவிடம் போன்றவற்றின் மீதான வெறுப்பையும் மிக தீவிரமாகவே பரப்பி வருகின்றனர்.

ராமர் கோயில், 370 சட்டமன்ற ரத்து செய்யப்பட்டது, பொது சிவில் சட்டம்,  சிஏஏ-என்ஆர்சி கொண்டு வந்தது, லவ் ஜிகாத் ,பாப்புலேஷன் ஜிகாத், சாமியார்களை ஊக்குவிப்பது, கார்ப்பரேட் சாமியார்களை முன்னிறுத்துவது; இந்தியா என்பது இந்து தேசம், வேதங்களின் அடையாளம், சனாதனமே இந்தியாவின் ஆன்மா என்று மக்களிடையே மத கண்ணோட்டத்தையும் சாதிய கண்ணோட்டத்தையும் வளர்க்கும் வேலைகளை ஆர்எஸ்எஸ்-பாஜக மிக தீவிரமாக செய்து வருகிறது. ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் இதற்கு தகுதாற்போல் ஒத்திசைக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் தனது காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தை வெகு விரைவில் அரங்கேற்றும் என்றே கணிக்க முடிகிறது.

மேற்கண்ட சூழ்நிலைகளில் பாஜகவின் பாசிச திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு அதிகாரியை தண்டிக்க வாய்ப்புகள் மிகச் சொற்பமே. வரும் நாடாளுமன்றத தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் இவர்களை தண்டிப்பது என்பது மல்லாக்கப்படுத்து கனவு காண்பதற்கு ஒப்பாகும். பெரும்பான்மையான மக்களுக்கான உண்மையான அதிகாரத்தை அங்கீகரிக்கும் அரசு அமையும் போது மட்டுமே இது போன்ற அதிகாரிகளை தண்டிப்பது என்பது சாத்தியம்.

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன