மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

சிஏஏ என்பது மூன்று நாடுகளில் இருந்து மதஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, இதனை எப்படி நீங்கள் தவறெனக் கூறலாம். தற்போது அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் சட்டவிதிகளில் கூட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவது போல ஒன்றும் இல்லையே என்று ஏற்கெனவே கேட்கப்பட்டு முறியடிக்கப்பட்ட பழைய வாதத்தை மீண்டும் காவிகள் கடைவிரிக்கிறார்கள்.

 

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கான விதிகளைக் கடந்த திங்களன்று அரசிதழில் வெளியிட்டு, நாடும் முழுவதும் இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சி.ஏ.ஏ. குறித்த விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. 2019ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தங்களை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்ததையொட்டி, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நடத்திய கடுமையான போராட்டங்களினால் இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதை பாஜக அரசு தள்ளிப்போட்டிருந்தது.

தற்போது நாடாளுமன்றத்த தேர்தல் நெருங்கிவருவதால், அதுவும் குறிப்பாக தேர்தல் பத்திர மோசடி அம்பலமாகிவரும் சூழலில், தங்களது அடுத்த மதவெறி அஸ்திரத்தைப் பாசிஸ்டுகள் தற்போது எய்திருக்கிறார்கள். தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதில் நடந்துள்ள மோசடி, ஒன்றிய அரசைப் பாதுகாக்க எஸ்.பி.ஐ. வங்கி வெளிப்படையாக செயல்படுவது ஆகியவை அம்பலமாகி பாசிஸ்டுகளுக்கு எதிரான விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் அவற்றைத் திசைதிருப்பும் விதமாகவே இந்த அறிவிப்பை அரசு கொடுத்திருக்கிறது.

குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருவதால் இனி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிருஸ்தவர்கள் என இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சட்டவிரோதக் குடிகளாக (illegal immigrants) கருதப்படமாட்டார்கள், அவர்களுக்கு இந்தியக்  குடியுரிமையும் வழங்கப்படும்.

அதேசமயம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் தங்களது பூர்வீகம் இந்தியாதான் என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியுரிமைச் சட்டத்தில் 2019ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த திருத்தத்துடன் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)யும் சேரும் போது அது இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தும். அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு என்ஆர்சியை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் என்ஆர்சியின் விதிகளின் படி தங்களது குடியுரிமையை நிரூபிக்க இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் பேரால் இயலவில்லை. ஆகையால் என்ஆர்சி அங்கே நிறுத்திவைக்கப்பட்டது.

ஆனால் தற்போது சி.ஏ.ஏ. அமுலுக்கு வந்துள்ளதால் அங்கே மீண்டும் என்ஆர்சியைக் கொண்டு வந்தால் இஸ்லாமியர்கள் தவிற மற்றவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும். இஸ்லாமியர்கள் சட்டவிரோதக் குடியேறிகள், நாடற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இதன் மூலம் இஸ்லாமியர்களைப் பிரித்து ஒடுக்குவது என்பது பாசிஸ்டுகளுக்குச் சுலபமாகிவிடும்.

இது வடகிழக்கிலோ அல்லது வடஇந்திய மாநிலங்களிலோ மட்டுமல்ல நம் மாநிலத்திலும் நடக்க சாத்தியம் உள்ளது. ஏற்கெனவே திருப்பூரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மியான்மரின் ரொஹிங்கியா முஸ்லீம்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக காவி பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது சி.ஏ.ஏ.வைச் சாக்காக வைத்து திருப்பூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரையும் சட்டவிரோதக் குடியேறிகள் என முத்திரைகுத்துவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். ஜி.எஸ்.டி.யைப் போன்றே, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவதை எதிர்த்து மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசு நினைத்தாலும் அதனைத் தடுக்க முடியாது.

சிஏஏ என்பது மூன்று நாடுகளில் இருந்து மதஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, இதனை எப்படி நீங்கள் தவறெனக் கூறலாம். தற்போது அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் சட்டவிதிகளில் கூட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவது போல ஒன்றும் இல்லையே என்று ஏற்கெனவே கேட்கப்பட்டு முறியடிக்கப்பட்ட பழைய வாதத்தை மீண்டும் காவிகள் கடைவிரிக்கிறார்கள்.

ஆனால் சிஏஏவின் உண்மை நோக்கம் என்ன என்பதை அமித்ஷா கடந்த நாடாளுமன்றத்துக்கான தனது தேர்தல் பரப்புரையிலும் அதற்குப் பிறகு கலந்து கொண்ட மாநாடுகளிலும் பல முறை அறிவித்திருக்கிறார். குறிப்பாக 2019 ஏப்ரல் மாதத்தில் சி.ஏ.ஏ. கொண்டுவரப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அமித்ஷா “நாங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் தவிற இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒழித்துக் கட்டாமல் விடமாட்டோம்” எனச் சூளுரைத்தார், அதே கூட்டத்தில் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லீம்களை நாட்டை அரிக்கும் கறையான்கள் என்றும் அவர்களை வெளியேற்றியே தீருவோம் எனவும் கூறினார்.

2019ம் ஆண்டு மீண்டும் ஆட்சியமைத்தபின்னர் உள்துறை அமைச்சராக ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது பேசிய அமித்ஷா, சட்டவிரோத குடியேறிகளை அங்குலம் அங்குலமாகத் தேடிக் கண்டறிந்து நாடுகடத்துவோம் என்றார்.

யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னதாக நாஜிக்கள் அவர்களைத் தனித்து அடையாளப்படுத்தி, அவர்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தது போல சி.ஏ.ஏ.வைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்த நினைக்கின்றனர். அதனைத் தங்களுடைய சாதனையாக காட்டி இந்து மதவெறியைத் தூண்டி அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெற துடிக்கின்றனர். இந்த நோக்கத்திற்காகத்தான் நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது சிஏஏவை அமுலுக்குக் கொண்டுவருகிறார்கள். காவிபாசிஸ்டுகளின் இந்த திட்டத்தை முறியடிப்பதற்கு நாடுமுழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன