“இந்தியா” கூட்டணியால் பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா என்பதுதான் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே பலர் பாசிசத்தைத் தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியும் என்றும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதில் சிலர் இப்படி சொல்வது மட்டுமல்ல ”இந்தியா” கூட்டணி பாசிசத்தை வீழ்த்திவிடும் என்று நம்பவும் செய்கிறார்கள்.
அதேசமயம் திருவாளர் மருதையன் போன்ற திமுக அபிமானிகள் ”இந்தியா” கூட்டணிதான் பாசிசத்தை வீழ்த்த ஒரே வழி என்று அடித்துக் கூறிவருகின்றனர்.
பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றால் பாசிச எதிர்ப்பு கலாச்சாரத்தை வரித்துக் கொண்ட, அதற்கென கட்டியமைக்கப்பட்ட ஒரு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி தேவை. ஆனால் முதலாளித்துவக் கட்சிகளின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியைக் காட்டி இதுதான் பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி என ”இந்தியா” கூட்டணியை ஆதரிப்பவர்கள் நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.
ஆனால் இன்று ”இந்தியா” கூட்டணியின் நிலைதான் பரிதாபகரமாக இருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமார் ”இந்தியா” கூட்டணியைக் கைவிட்டு பாஜக கூட்டணிக்கு ஓடிப்போய்விட்டார், மேற்கு வங்கத்தில் மமதா பேனர்ஜி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார், பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டது. கேரளத்தில் சி.பி.எம். கட்சியும், காங்கிரசும் எதிர் எதிராக களம் காணப்போகின்றன.
தமிழ்நாட்டையும், காங்கிரஸ் வழுவாக உள்ள ஒருசில வடமாநிலங்களையும் தவிர மற்ற இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணியின் நிலை “இருக்கு ஆனால் இல்லை” என்பதுதான்.
முதலாளித்துவக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்திற்கு நிதிஷ்குமார் ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு. நிதிஷ்குமாரைத் துரோகி என்றும் முதுகில் குத்துபவர் என்றும் கூறுகிறார்கள். முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளின் வரலாற்றில் நிதிஷ்குமார் செய்தது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டில் பாமக செய்யாத துரோகமா? ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக என மாற்றி மாற்றி கூட்டணி அமைக்காத கட்சிகள் இங்கே இருக்கின்றனவா? மதிமுக, திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் ஒரு சீட்டுக்காக கூட்டணி தாவவில்லையா என்ன? ஊழலுக்கு எதிராக அதிமுகவுடன் கூட்டணி என்றும் மதவாதத்திற்கு எதிராக திமுகவுடன் கூட்டணி என்றும் சி.பி.ஐ. சி.பி.எம். கட்சிகள் இதனை நியாயப்படுத்தவில்லையா?
இதற்கு முன்னர் இவர்கள் அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இன்று அமைத்துள்ள ”இந்தியா” கூட்டணிக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? பெயரில் உள்ள மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தன்னை பிரதம மந்திரி வேட்பாளராக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால், மமதா உட்பட எல்லோரும் விரும்புகிறார்கள். நிதிஷ்குமாரை பிரதம வேட்பாளராக அறிவிக்காத கோபத்தில்தான் கூட்டணியை விட்டே வெளியேறினார்.
ஒருவேளை இவர்கள் கூறுவது போல ”இந்தியா” கூட்டணி பாசிசத்திற்கு எதிரான கொள்கைக் கூட்டணி என்று வைத்துக்கொண்டால், அதில் சிவசேனாவிற்கு என்ன வேலை? பாசிசத்திற்கு எதிராக இன்னொரு பாசிசக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் ராஜதந்திரத்தை ”இந்தியா” கூட்டணியை நம்பச்சொல்கிறவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். சிஏஏ-வை ஆதரிப்பது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை ஆதரிப்பது, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பது, அயோத்தி ராமர் கோவிலை ஆதரிப்பது என பாசிசத்தின் முன்னெடுப்புகளையெல்லாம் ஆதரிக்கும் சிவசேனாவையும், அந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளையும் ஒரே கூட்டணியில் வைத்துக் கொண்டு ”இந்தியா” கூட்டணி பாசிசத்திற்கு எதிரான கொள்கை கூட்டணி என்று கூறுவது யாரை நம்பவைப்பதற்காக?
பாசிச நடவடிக்கைகளை சிவசேனா நேரடியாக ஆதரிக்கிறது என்றால், கேஜ்ரிவாலும் மமதாவும் மறைமுக ஆதரிக்கிறார்கள். அதாவது மறந்தும்கூட மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதில்லை. பாசிசம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தைத் துண்டாடிய நிகழ்வை கேஜ்ரிவால் ஆதரித்துப் பேசினார். மமதாவோ பாஜக அதனை செய்த விதம்தான் தவறு என்று பேசினார், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் செய்ததை கண்டித்ததுடன், இந்நடவடிக்கையின் ஆத்மார்த்தமான தேவையை அங்கீகரிப்பதாக கூறினார். இப்படிப்பட்டவர்களை பாசிச எதிர்ப்பின் படைத்தளபதிகளாக ஏற்றுக்காள்ள முடியுமா?
”இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்திப் பேசிவரும் காங்கிரசின் தீவிர ஆதரவாளரான மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக பாசிச எதிர்ப்பு குறித்து காணொளி மூலமாகவும் தொடர்ந்து பேசி வருகிறார். சமூக ஊடகங்கள் முழுவதும் திமுக ஐ.டி.விங் மூலம் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் இந்த நிகழ்வுகளை மட்டும் வைத்து முடிவுசெய்வதாக இருந்தால் மு.க.ஸ்டாலின்தான் மிகப்பெரிய பாசிச எதிர்ப்புப் போராளி எனக் கூற வேண்டும். ஆனால் நடைமுறையில் திராவிட மாடல் அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று பார்த்தால்தான் அவர்களது பாசிச எதிர்ப்பு வெறும் வாய்ச்சவடால் என்று புரியும்.
பாசிச பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவது, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நுழைந்துள்ள பாசிச சக்திகளை தடுக்காமல் அவர்களுடன் பேரம் பேசுவது, காவி பாசிஸ்டுகளின் நம்பகமான கூட்டாளியான அதானிக்கு தமிழ்நாட்டில் தொழில்தொடங்க சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது, காவி கார்ப்பரேட் பாசிசத்தின் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களில் ஒன்றான வேலை நேரச் சட்டதிருத்தத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர முயற்சித்தது, எட்டுவழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களை எதிர்க்கட்சியாக இருந்தபோது அதனை எதிர்த்துவிட்டு தற்போது அதற்கு எதிராகப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி அதே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு பாசிச பாசத்தில் வழுக்கி விழுந்த நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
திமுகவைப் பொருத்தவரை பாஜகவை எதிர்ப்பதுதான் பாசிசத்தை எதிர்ப்பது. பாசிசத்தின் கொள்கைகளைப் புறக்கடையில் அமுல்படுத்திக் கொண்டே பாசிச எதிர்ப்பாளராக வலம் வரும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளை எல்லாம் திமுக அபிமானிகளுக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால், இந்த நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் என எல்லா கட்சியினரையும் வருமானவரித் துறையையும், அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.யையும் கொண்டு இந்த பாசிச மோடி அரசு ஒடுக்கிவருகிறது. அதிமுக போன்று அவனிடம் சரணடைந்தாலும் விடாமல் கட்சியை உடைக்கும் வேலையச் செய்கிறது. நிதிஷ்குமார் முதலில் பாஜக கூட்டணியில் இருந்து “இந்தியா” கூட்டணிக்கு வந்த காரணமே அவரது கட்சியை பாஜக உடைக்கிறது என்பதுதான். இது எல்லாம் தெளிவாகத் தெரிந்திருந்தும் பாசிசத்திற்கு எதிரான தேர்தல் கூட்டணியில் கூட இவர்கள் இணைய மறுக்கிறார்கள். குறைந்த பட்சம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கவில்லையா? தமிழகத்தில் இன்றைக்கு அதிமுக இருக்கும் நிலைக்கு தங்களை பாசிசம் கொண்டுவந்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லையா?
பாசிசம் தங்களை திட்டமிட்டு ஒடுக்குகிறது என்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருந்தாலும், இதனை பாசிசம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு தனது எதேச்சதிகார ஆட்சியை நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். அரசியல் விளையாட்டில் எதிரிகளை கையாளும் வகையாக சுருக்கிப் பார்க்கிறார்கள் இதனைத் தனிநபர்களின் ஆதிக்கமாக அவர்கள் முன்னெடுக்கும் செயலாக பார்க்கிறார்கள். பாசிசத்தின் வழிக்கு கொண்டுவரும் ஒத்திசைவாக்கம் என்ற நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக இதனைப் பார்க்கவில்லை.
பாசிசம் தன்னுடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது என்பதை உணரத்தவறுகின்றனர். இதுதான் அவர்களை இந்தியா கூட்டணியிடம் நெருங்கிவருவதை தடுக்கிறது. தங்களது மாநிலங்களில் தங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு அவர்களை அவ்வாறு சிந்திக்கவைக்கிறது.
ஓட்டுக் கட்சிகள்தான் இப்படி என்றால், பாசிசம் குறித்தும் அதன் நடவடிக்கைகள் குறித்தும் புரிந்து கொண்டு, மார்க்சிய லெனியத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஊன்றி நின்று அதனை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள் தான் எனக் கூறிவரும் கலைப்புவாதிகளுக்கும், அவர்களது ஞானகுருவான திருவாளர் மருதையனுக்கும் மக்கள் மீது துளியும் நம்பிக்கை இல்லை. பாசிசமே நிறுவப்பட்டாலும் அதனை வீழ்த்துவதற்கு மக்கள் நினைத்தால்தான் முடியும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால்தான் இவர்கள் ஓட்டுக்கட்சிகளை நம்புகிறார்கள்.
இந்த தேர்தலில் எப்படியாவது பாஜகவை தோற்கடித்துவிட்டால் பாசிசத்தினைத் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். இந்த தேர்தலில் குறைந்தபட்சம் மோடி அமித்ஷா கும்பலைத் தடுத்துவிட்டால் பாசிசத்தின் தாக்குதலை எதிர்க்க முடியும். என்று பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரசையும், திமுகவையும் பாசிச எதிர்ப்பில் நம்பகமான சக்தி என காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் திமுக அபிமானத்தைத் தாண்டி மோடி அமித்ஷா கும்பலை வீழ்த்தவேண்டும் என்ற சிறு முனைப்பு கூட வெளிப்படவில்லை. அதனால்தான் “இந்தியா” கூட்டணி எனும் ஓட்டைப் பலூனை ஊதி ஊதிப் பறக்கவிடப்போவதாக கதையளக்கிறார்கள்.
- அறிவு