இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

இந்தியத் தொழிலாளர்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாத கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்புவது என்பது அதிகாரிகளின் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நடப்பது அல்ல, தொழிலாளர் நலன் சார்ந்த கெடுபிடிகள் எதுவும் இருக்கக் கூடாது என்ற இஸ்ரேலின் கோரிக்கை ஏற்று பாசிச மோடி அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது நடைபெறுகிறது.

 

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதி முழுவதும், இஸ்ரேலின் ஏவுகணைகளால் துளைக்கப்பட்டு, சிதைந்துபோய்க் கிடக்கிறது. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக கொன்றழித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்காமல் இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. இட்லர் நிகழ்த்திய இனப் படுகொலைகளின் இன்றைய வடிவமாக இஸ்ரேலின் இந்தத் தாக்குதல், பாசிசத்தின் கொடூரத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.  

இந்த சமயத்தில் இஸ்ரேல் அரசுக்குச் செய்யும் எந்த உதவியும் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கு செய்யப்படும் உதவியே அன்றி வேறில்லை.  இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் இந்த இனப்படுகொலைக்குத் துணை நிர்ப்பதை உறுதிப்படுத்துகிறது பாசிச மோடி அரசு.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்குத் துணை நிற்கும் பாசிச மோடி அரசு, இந்தப் போர் காரணமாக இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டி இஸ்ரேலை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்தியத் தொழிலாளர்களை அந்நாட்டிற்கு அனுப்புகிறது. அதேசமயம் வழக்கமாக மற்ற நாடுகளுக்குத் தொழிலாளர்கள் வேலை செய்ய போகும் போது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் கைவிட்டு இந்தியத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குவதற்கு இஸ்ரேலுக்கு வழி செய்து கொடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஹரியாணா மற்றும் உத்திரபிரதேச மாநில தொழிலாளர் நலத்துறை சார்பாக இஸ்ரேலுக்கு பத்தாயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. “கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு” எனவும் “வெளிநாட்டு வேலை, லட்சங்களில் சம்பளம்” எனவும் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து வந்துள்ள விண்ணப்பங்கள் ஒரு சில வாரங்களில் பரிசீலிக்கப்பட்டு தொழிலாளர்கள் உடனடியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட இருக்கின்றனர்.

டிசம்பர் மாதம் 19ம் தேதி இந்தியப் பிரதமர் மோடியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தயன்யாகு, இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து ஒன்றிய அரசும், ஹரியாணா, உத்திரபிரதேச மாநில அரசுகளும் வேலைக்கு ஆட்களை எடுப்பதை வேகப்படுத்தியுள்ளனர்.

ஆனால் துரிதகதியில் தொழிலாளர்களை அனுப்புவதில் முனைப்பாக உள்ள அரசு அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. வழக்கமாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறையின் ஈ-மைகிரேட் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண நடைமுறை கூட இங்கே பின்பற்றப்படவில்லை.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் 1.25 இலட்சம் ருபாய் சம்பளமாக வழங்கப்படு என விளம்பரப்படுத்தப்படுகிறது ஆனால் அதில் தொழிலாளர்கள் தங்குவதற்கும், உணவுக்குமான தொகை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து கொள்ளப்படும். வளைகுடா நாடுகளுக்கோ, உடல் உழைப்பினைக் கோரும் வேலைகளுக்காக மற்ற நாடுகளுக்கோ தொழிலாளர்கள் போகும் போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேலை உத்திரவாதம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி கூட இங்கே தளர்த்தப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கட்டிட வேலைக்கு இஸ்ரேல் செல்லும் தொழிலாளர்களுக்கு அங்கே முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதைக் கூட இந்த அரசு உத்திரவாதப்படுத்தவில்லை. தொழிலாளர்கள் தங்களது மருத்துவச் செலவுகளைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி இஸ்ரேலுக்கும் போவதற்கும் இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்குமான விமானச்சீட்டிற்கான பணத்தையும் தொழிலாளர்களே கொடுக்க வேண்டும். வேலைக்கான உத்தரவாதம் ஏதுமின்றி இஸ்ரேலுக்குப் போகும் இந்தியத் தொழிலாளர்களை, இனி உங்களுக்கு வேலை இல்லை என அந்நாட்டு முதலாளிகள் பாதியில் திருப்பி அனுப்பிவிட்டால், விமானத்திற்காக செலவிட்ட தொகையை ஈடுகட்டவே தொழிலாளர்கள் பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை பணியின் போது தொழிலாளர் எவறேனும் உயிரிழக்க நேர்ந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது.

 

 

டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியிட்டு ஜனவரி மாதத்திற்குள் பத்தாயிரம் தொழிலாளர்களை அனுப்பிவிட வேண்டும் என அவசரமாக வேலை செய்யும் ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ தொழிலாளர் நலனுக்கு பொறுப்பேற்காமல் தட்டிக்கழிக்கின்றனர். தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு பிரசுரத்தின் அடிப்படையில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியான வேத் மணி திவாரியிடம் ‘தி இந்து’ நாளிதழ் கேள்வி எழுப்பிய போது வேலைக்கான விளம்பரம் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது எனவும் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் கை கழுவிவிட்டார்.

ஹரியாணா மற்றும் உத்திர பிரதேச மாநில அரசின் தொழிலாளர்நலத் துறையோ இது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டம் எனக்கூறி நழுவிக்கொண்டுள்ளது. இஸ்ரேலுக்குப் போகும் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் தலா பத்தாயிரம் ருபாயைக் கட்டணமாக வசூலிக்கும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுகிறது. நாளிதழ்களில் கவர்ச்சியான விளம்பரம் கொடுத்து தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து அவர்களை வேலைக்கு எடுக்கும் மாநில அரசுகளும் பொறுப்பேற்க மறுக்கிறது.

இதனை வெறுமனே அரசு அதிகாரிகளின் அலட்சியம் என்று பார்க்க முடியாது. இஸ்ரேல் நாட்டில் கட்டுமானம், மருத்துவ சேவை வழங்குதல் போன்ற துறைகளில் இந்தியத் தொழிலாளர்களின் தற்காலிக வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், இஸ்ரேல் அரசும் கடந்த நவம்பர் மாதத்தில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளையும் செயல்படுத்துப் பொறுப்பு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கென இஸ்ரேலின் குடியேற்றத் துறை அதிகாரிகளுடன் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகள் டிசம்பர் மாதத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

எனவே இந்தியத் தொழிலாளர்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாத கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்புவது என்பது அதிகாரிகளின் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நடப்பது அல்ல, தொழிலாளர் நலன் சார்ந்த கெடுபிடிகள் எதுவும் இருக்கக் கூடாது என்ற இஸ்ரேலின் கோரிக்கை ஏற்று பாசிச மோடி அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது நடைபெறுகிறது.

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த பல லட்சம் பாலஸ்தீனத் தொழிலாளர்களின் வேலைகான அனுமதிகளை அந்நாட்டரசு ரத்துசெய்து, பாலஸ்தீனத் தொழிலாளர்களைத் துரத்தியடித்துள்ள காரணத்தால் அந்நாட்டில் கட்டுமானப் பணிகள் நின்று போய் அந்நாட்டு முதலாளிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு, பாலஸ்தீனத் தொழிலாளர்களைப் போன்றே எவ்வித உரிமைகளும் இல்லாத கொத்தடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் இஸ்ரேல்  முதலாளிகளுக்குத் தேவைப்படுகின்றனர். அதற்காகத்தான் இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் பாசிச மோடி அரசோ இதனை தொழிலாளர்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு என விளம்பரப்படுத்தி தொழிலாளர்களை ஏய்க்கிறது.

  • அழகு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன