பல ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களால்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட
ஜம்மு-காஷ்மீர் பின்தங்கிய நிலையில் உள்ளதா?
[ஜம்மு-காஷ்மீரின்] சமூக-பொருளாதாரம் பற்றிய
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

குழந்தை பாலின விகிதம் (child sex ratio), பெண்கல்வி போன்ற பல முக்கியக் குறியீடுகளில் அனைத்து இந்திய சராசரியை விட ஜம்மு-காஷ்மீரானது முன்னேறிச் சென்றுள்ளதைக் காட்டுகிறது. இப்புள்ளிவிவரங்கள் [காஷ்மீர் பின்தங்கியுள்ளது என்ற] பொதுக் கருத்தை அடியோடு மறுக்கின்றன.

ஒன்றிய மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து அதை இரு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது செல்லும் என்று ஆகஸ்டு 11 2023 அன்று உச்ச(மனு)நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீரின் 370-வது சிறப்புப் பிரிவின் காரணமாக அங்கு யாரும் நிலம் வாங்க முடியவில்லை; அதனால் அம்மாநிலத்தின் வளர்ச்சியே குன்றிவிட்டது. தொழில்வாய்ப்புகள் பறிபோய்விட்டன; – என்று அங்குள்ள மக்கள் பஞ்சத்திலும் பசியிலும் வாடுவதைப் போலவும் காஷ்மீர் தவிர்த்த பிற இந்திய மக்கள் சொர்க்க பூமியில் வாழ்வது போலவும் அந்த நன்மைகள் காஷ்மீரிகளுக்குக் கிடைக்கவில்லை என்பது போலவும் காவி பாசிசக் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது / வருகின்றது. ஆனால் இவை எதுவும் உண்மை இல்லை என்பதை மோடி அரசின் பல்வேறு துறைகள் நடத்திய ஆய்வின் முடிவுகளே நிரூபிக்கின்றன. தேசிய குடும்ப நல ஆணையம், நிதி ஆயோக் போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகள் எடுத்த ஆய்வுகளின் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளை விட ஜம்மு-காஷ்மீரானது பல மனித வளர்ச்சிக் குறியீடுகளில் (HDI) முன்னேறியுள்ளதையே காட்டுகின்றன.

ஒருபொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாகும் என்ற பாசிச அணுகுமுறையின்படி, ஊடகங்களும் காவி பாசிசக் கும்பலும் காஷ்மீர் பின் தங்கியிருந்தது என்றும் 370 நீக்கப்பட்ட பிறகுதான் அங்கு பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்றும் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து முறியடிக்க தி பிரிண்ட் இணையதளத்தில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். காவி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இதை ஆயுதமாகப் பயன்படுத்துமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

********************

சில பத்தாண்டுகளாக நடந்துவரும் மோதல்களால் காஷ்மீர் பின்தங்கியுள்ளது என்பதில் உண்மை ஏதுமில்லை. சுகாதாரம், பெண்கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் (women empowerment) போன்ற முக்கிய சமூக-பொருளாதார குறியீடுகளில் ஜம்மு-காஷ்மீரானது இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகச் செயல்படுவதையே அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

முன்பு மாநிலமாக இருந்த [இன்று இரண்டு யூனியன் பிரதேசமாக உடைக்கப்பட்டுள்ள] காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் பிரிவு 370 நீக்கப்பட்டு இந்த ஆகஸ்டு மாதத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், காஷ்மீரின் கள நிலவரம் குறித்த அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை தி பிரிண்ட் [இணையதளம்] பரிசீலித்தது. [370 நீக்கப்படுவதற்கு] முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது குழந்தை பாலின விகிதம், பெண்கல்வி போன்ற பல முக்கியக் குறியீடுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட முந்திச் சென்றுள்ளதைக் கண்டறிந்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் நிலைமையானது முசுலீம்களைப் பற்றி அடிக்கடிக் கூறப்படும் பொதுக்கருத்தை மறுப்பதையும் அப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இத்தகைய குறியீடுகளில் ஜம்மு-காஷ்மீரின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுகையில், அப்பகுதியைப் பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் இது ஒன்றும் புதிய விசயமல்ல என்று கூறுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே சமூக நலன் மற்றும் சுகாதாரம், கல்வி போன்றவற்றில் அக்கறை காட்டுவது ஜம்மு-காஷ்மீர் அரசாங்கதத்தின் அடிப்படைக் கூறாக இருந்து வந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுகாதாரம்

2019-21 காலகட்டத்தில் [மோடி அரசின்] தேசிய குடும்ப நல ஆணையமானது (NFHS-5), குழந்தை பாலின விகிதம், ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு விகிதம், மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கும் விகிதம், பெண்கள் கருத்தரிக்கும் விகிதம், பெண்களின் இரத்த சோகை விகிதம் உள்ளிட்ட ஐந்து சுகாதாரக் குறியீடுகளை [நாடுமுழுவதும்] ஆய்வு செய்தது.

இவற்றில் நான்கு அம்சங்களில் அனைத்து இந்திய சராசரியைவிட ஜம்மு-காஷ்மீரானது மிகவும் சிறப்பாக உள்ளது.

 

 

குழந்தை பாலின விகிதம் : இது 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் என்னும் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. [பெண்களைக் கருவிலேயே கொல்லும் ஆணாதிக்க மனோபாவம் ஒரு சமூகத்தில் எந்தளவு உள்ளது என்பதையும் அச்சமூகத்தின் நாகரிக வளர்ச்சியையும் புரிந்துகொள்ள இக்குறியீடு நமக்கு முக்கியமாகப் பயன்படும் ஒன்றாகும்] ஜம்மு-காஷ்மீரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தகளில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண்குழந்தைகள் உள்ளன. அனைத்திந்திய சராசரியோ 1000-க்கு 929 தான். அதாவது, ஜம்மு-காஷ்மீரானது அனைத்திந்திய சாராசரியைவிட 47 குழந்தைகள் அதிகமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வயதுக்கும் கீழ் குழந்தைகள் இறக்கும் விகிதத்திலும் (under five mortality) ஜம்மு-காஷ்மீரின் அளவு குறைவாகவே உள்ளது. [இது தாய்க்கும் சேய்க்கும் எந்தளவு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கிறது, மருத்துவக் கட்டமைப்புகள் எந்தளவு முன்னேறியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒன்றாகும்] ஜம்மு-காஷ்மீரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 குழந்தைகளுக்கு 18.5 என்ற விகிதத்தில் இறக்கின்றன. அனைத்திந்திய சராசரியோ 1000-க்கு 42 இறப்புகளாகும். அதாவது ஜம்மு-காஷ்மீரைவிடவும் இரண்டு மடங்கு அதிகமான இறப்புகளாகும்.

மொத்த கருத்தரிப்பு விகிதம் : இது பெண்கள் எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் என்பதைக் கொண்டு அளவிடப்படுவதாகும். [பெண்கள் குழந்தைகள் பெற்றெடுக்கும் எவ்வளவு குறைவாக உள்ளதோ அது அச்சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவத்தின் குறைவையும் சமூகத்தின் முதிர்ச்சியையும் காட்டும் ஒரு அம்சமாகும்] அனைத்திந்திய சராசரியின்படி ஒரு பெண் 2 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் சராசரியாக ஒரு பெண் 1.4 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். இதன் பொருள் அனைத்திந்திய சராசரியின்படி ஒவ்வொரு 100 பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தையின் அளவை ஒப்பிடுகையில் ஜம்மு-காஷ்மீரில் 60 குழந்தைகளைக் குறைவாகப் பெற்றெடுக்கின்றனர்.

மேலும், மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறக்கும் விகிதத்திலும் ஜம்மு-காஷ்மீரானது [அனைத்திந்திய சராசரியைவிட] மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. [வீடுகளில் அல்லது பின்தங்கிய பாரம்பரியமுறைகளின்படி இல்லாமல் மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மருத்துவக் கட்டமைப்பு எந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு குறியீடாகும்] [மேற்குறிப்பிட்ட மோடி அரசின் 2019-21 தேசிய குடும்ப நல] ஆய்வின்படி ஜம்மு-கஷ்மீரில் 92.4% பெண்கள் மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களில்தான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அனைத்திந்திய சராசரியின்படி 88.6% குழந்தைகள் தான் இவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.

வாழ்க்கைத் தரம் (standard of living)

வருவாய் பற்றாக்குறையைத் தாண்டி, சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், மாசு ஏற்படுத்தாத சமையல் எரிபொருள்கள் [அதாவது புகையை ஏற்படுத்தும் விறகடுப்பு முதலியவை மாசு ஏற்படுத்துபவை], வீட்டுவசதி, மின்சார வசதி, சொத்துக்கள், வங்கி வசதி போன்ற ஏழு அம்சங்களில் [மக்களுக்கு] உள்ள பற்றாக்குறையின் அளவை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் நிதி ஆயோக் நிறுவனத்தால் பன்னோக்கு வறுமை குறியீடு 2023 (Multidimensional Poverty Index 2023) எடுக்கப்பட்டது. இவற்றில், சுத்தமான குடிநீர் வசதியைத் தவிர மற்ற எல்லாக் குறியீடுகளிலும் அனைத்திந்திய சராசரியைவிட ஜம்மு-காஷ்மீரின் பற்றாக்குறை குறைவாகவே உள்ளது. [அதாவது இவற்றில் ஜம்மு-காஷ்மீரானது அனைத்திந்திய சராசரி நிலைமையைவிட முன்னேறியுள்ளது]

 

 

மாசு ஏற்படுத்தாத எரிபொருள் பற்றாக்குறையைப் பொறுத்தளவில் ஜம்மு-காஷ்மீரின் அளவு 32.3%, ஆனால் அனைத்திந்திய சராசரி பற்றாக்குறையின் அளவு 44% ஆகும். ஜம்மு-காஷ்மீரில் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்குக்குக்கும் குறைவானவர்களே (24.2%) சுகாதார வசதிகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவின் சராசரி கணக்கெடுப்பின்படி 30 % மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 96.8% மக்கள் மின்சார வசதி பெற்றுள்ளனர். காஷ்மீரில் அதைவிட சற்று அதிகமாக 99%-க்கும் மேற்பட்டோர் மின்சார வசதி பெற்றுள்ளனர். முறையான வீடின்மை  (housing deprivation) : இது மொத்த மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேர் மண் தரை அல்லது சாதாரண மேற்கூரையுடன் கூடிய வீடுகளில் வசிக்கிறார்கள் என்பதைக் கொண்டு அளவிடப்படுவதாகும். ஜம்மு-காஷ்மீரில் முறையான வீடின்மையின் அளவு 25.36% ஆகும். அனைத்திந்திய சராசரியின் அளவோ 41.37% ஆகும். வங்கி வசதிகள் அல்லது சொத்தின்மையை எடுத்துக்கொண்டாலும் அனைத்திந்திய சராசரியை ஒப்பிடுகையில் ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றகரமாகவே உள்ளது. (அட்டவணையில் காண்க)

பெண்களின் முன்னேற்றம்

[பெண்கள் அதிகம் படிப்பது, வேலைக்குச் செல்வது, தாமதமாக திருமணம் செய்துகொள்வது, தனக்கென சொந்தமாக தொலைபேசி வைத்திருப்பது, பெண்களுக்கு கணவனால் ஏற்படும் வன்முறைகள் குறைந்திருப்பது போன்றவை எல்லாம் ஒரு சமூகத்தின் நாகரிகத்தின் முதிர்ச்சியையும் ஆணாதிக்கத்தின் தளர்வையும் பெண்களின் முன்னேற்றத்தையும் காட்டுகின்றன. இவை அனைத்திலும் இந்தியாவின் சராசரி நிலைமையைவிட ஜம்மு-காஷ்மீரானது முன்னேறியுள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.]

தேசிய குடும்பநல ஆய்வு 5-இன்படி, ஜம்மு-காஷ்மீரில் 15 – 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 51% பெண்கள் 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ளனர். அனைத்திந்திய சராசரியோ 41% ஆகும். பெண்கள் அதிகம் படிப்பது அவர்கள் விரைவாகத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பைக் குறைக்கின்ற ஒரு அம்சமாகும். 25–49 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்துகொள்வதைப் பொறுத்தளவில், ஜம்மு-காஷ்மீரில் சராசரியாக 23.9 வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். அனைத்திந்திய அளவில் பெண்களோ சராசரியாக 18.8 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர்.

 

 

மொத்த உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கும் (share of women in workforce) அனைத்திந்திய சராசரியை ஒப்பிடுகையில் ஜம்மு-காஷ்மீரில் அதிகமாகத்தான் உள்ளது. இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலைமையை அளவிடும் வருடாந்திர பருவ உழைப்புச் சக்தி  (Annual Periodic Labour force Survey 2021-22) இன் அண்மைய ஆய்வின்படி, 35% காஷ்மீர் பெண்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய சராசரியின் அளவில் 21.7% பெண்கள்தான் அவ்வாறு உள்ளனர். [அதாவது மற்ற பெண்கள் வீட்டில்தான் முடங்கிக் கிடக்கின்றனர்] ஜம்மு-காஷ்மீரில் அதிகளவிலான பெண்கள் (75%) தங்களுக்கென சொந்த தொலைபேசியை வைத்துள்ளனர். அனைத்திந்திய சராசரியின்படி 51% பெண்களே தங்களுக்கென சொந்த தொலைபேசி வைத்துள்ளனர்.

பெண்களைப் பற்றிய இன்னொரு முக்கியமான குறியீடான கணவரால் பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படுவது குறித்து தேசிய குடும்ப நல ஆய்வு 5 கூறுவது என்னவென்றால், ஜம்மு-காஷ்மீரில் 9.6% பெண்கள்தான் இவ்வாறு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் அனைத்திந்திய சராசரியின்படி 29.3% பெண்கள் கணவரால் வன்முறைக்குள்ளாகிறார்கள்.

[முசுலீம்களைப் பற்றிய] பொதுப்புத்தியை மறுக்கும் அம்சங்கள்

ஜம்மு-காஷ்மீரானது முசுலீம்கள் அதிகம் உள்ள மாநிலமாகும். லடாக்கையும் உள்ளடக்கிய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அங்குள்ள மக்கள் தொகையில் முசுலீம்களின் எண்ணிக்கை 68% ஆகும்.

ஆயினும், முசுலீம்களைப் பற்றிய மக்கள் தொகை குறியீடுகள் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முசுலீம்களை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவில் வேறுபாட்டுள்ளது. தேசிய குடும்பநல ஆய்வு 5 இன்படி, ஜம்மு-காஷ்மீரில் ஒரு இசுலாமிய பெண் சராசரியாக 1.4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள். ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள ஒரு இசுலாமியப் பெண் சராசரியாக 2.36 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள். இதன் பொருள் என்னவென்றால், ஜம்மு-காஷ்மீரில் 100 இசுலாமியப் பெண்கள் 91 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது அனைத்திந்திய சராசரியைவிடக் குறைவானதாகும்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் பெண்கள் தாங்கள் குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதை அந்த ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர். கருத்தரித்துக் கொள்வதைப் பற்றிய தங்களது சுயவிருப்பத்தைப் (wanted fertility rate) பொறுத்தளவில் ஒரு ஜம்மு-காஷ்மீர் இசுலாமிய பெண் சராசரியாக 1.3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாள். ஆனால் இந்தியளவில் ஒரு இசுலாமிய பெண் சராசரியாக 1.8 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாள்.

பலதாரமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் குடும்பம் நடத்துவது (polygamy) என்னும் நடைமுறை இந்தியாவில் அரிதாகக் காணப்படுகிற ஒன்றாகும். ஆனால் இசுலாமியர்களைப் பொறுத்தளவில் இது பொதுவான ஒன்று என்ற [தவறான] பொதுப்புத்தி நிலவிவருகிறது. மும்பையை அடிப்படையாகக் கொண்ட, மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (Institute of Population Science) என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியளவில் [இசுலாமியர் தவிர இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினரைச் சேர்ந்த] 1.4% பெண்கள் தம் கணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணைவிகளைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். இதுவே இசுலாமியப் பெண்களைப் பொறுத்தளவில் 1.9% பேர் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் பெண்களைப் பொறுத்தளவில் 0.5% பெண்கள்தான் தம் கணவர்களுக்கு வேறு மனைவிகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

[இதுவரை குறிப்பிட்ட எல்லா அமைப்புகளும் புள்ளிவிவரங்களும் மோடி அரசின் அமைச்சகங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளாகும். ஒன்றிய அரசின் அதிகாரப் பூர்வமானவையாகும். பலதாரமணம் பற்றிய இந்த ஒன்றுமட்டும்தான் தனியார் நடத்தியதாகும். ஏனென்றால் பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பிற நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் தங்களுக்கு பாதகமான முடிவுகள் வந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று வாதிடுவார்கள் என்பதற்காக இதை இடைக்குறிப்பாகக் கூறுகிறோம்.]

 

[ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு காரணமான] திறவுகோல் அதன் பொருளாதார வரலாற்றில் உள்ளது

காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் ஜம்மு-காஷ்மீரின் சமூக-பொருளாதார நிலைமைகளை நன்கு அறிந்தவருமான பேராசிரியர் நூர் அகமது அவர்களின் கூற்றுப்படி, காஷ்மீரின் வளர்ச்சிக்கான அடித்தளமானது பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது.

“1944-இல், சமூகநீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றை தேசிய மாநாட்டுக் கட்சியின் அறிக்கை (NC) தனது உள்ளார்ந்த கருவாகக் கொண்டிருந்தது” என்கிறார் அவர். “1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் இந்தியாவின் தலைமையின் கீழ் வந்துவிட்டால் இவற்றையெல்லாம் சாதிப்பது சாத்தியம் என்று காஷ்மீரின் அப்போதைய தலைவர்கள் கருதினர்” என்று அவர் தி பிரிண்ட் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றது. இந்தியாவில் நிலச் சீர்திருத்தத்தை மேற்கொண்ட முதல் மாநிலமாகியது” என்கிறார். அவர் மேலும் கூறியதாவது “அது [காஷ்மீர்] நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு முடிவுகட்டியது. நிலத்தை விவசாயிகளுக்கு விநியோகித்தது, இதுதான் காஷ்மீரில் சமத்துவத்துக்கான அடித்தளத்தை அமைத்தது. காஷ்மீரிலுள்ள நிலங்கள் நல்ல தரத்தில் இருந்தமையால் அது பெரும் இலாபத்தை ஈட்டித் தந்தது. எனவே எல்லோரும் வசதிகளைப் பெற்றனர்.”

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ஹசீப் டிரபு என்பவரின் ஆய்வுகளில் இதற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு பொருளாதார நாளேடான மிண்ட் இல் அவர் எழுதிய கட்டுரையில், ஜம்மு-காஷ்மீரில் கிராமப்புறத்தில் வருவாய் ஏற்றதாழ்வு (rural income disparity) மிகவும் குறைவாக இருந்தது என்றும் எனவே அவர்கள் கடனாளியாவதும் குறைவாகவே இருந்தது என்றும் கூறுகிறார்.

“[காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் நிலம் வாங்க முடியாது] என்று கொடுக்கப்பட்டிருந்த உரிமையினால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழைகளைப் பொறுத்தளவில் நிலமில்லாதவர்கள் என்று கிட்டத்தட்ட யாருமே இல்லை என்ற நிலைமை இருந்தது. அங்கு வெறும் 2%-க்கும் குறைவானவர்களே விவசாயக் கூலிகளாவர். ஆனால் அனைத்திந்திய அளவில் சராசரியாக 23% பேர் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.” என்று ஹசீப் டிரபு எழுதினார்.

பொருளாதார ரீதியாக அதிகாரமளித்தலின் (economic empowerment) அளவைப் பொறுத்தவரை, “25%-க்கும் மேற்பட்ட காஷ்மீரி குடும்பங்கள் தங்கள் சொந்த நிலத்தில் கிடைக்கும் அறுவடையின் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டுகின்றனர் என்ற உண்மையிலிருந்து அது வெளிப்படையாகத் தெரிகிறது” என்கிறார். மேலும் “ ‘வளர்ச்சிபெற்ற’ பஞ்சாபில் இது [தங்கள் சொந்த நிலத்தின் மூலமே வருவாய் ஈட்டுவது] வெறும் 18% தான், ‘துடிப்பான’ குஜராத்தில் இது வெறும் 16%-க்கும் குறைவுதான், ‘பயங்கரமான’ தமிழ்நாட்டில் இது வெறுமனே 3% தான். இருந்தபோதிலும் காஷ்மீரானது ‘நோய்வாய்ப்பட்ட’ மாநிலமாக சித்தரிக்கப்படுகிறது.” என்கிறார் ஹசீப் டிரபு.

தேசிய மாநாட்டுக் கட்சி கல்வியிலும் சுகாதாரத்திலும் செலுத்திய முதலீடுகள் காஷ்மீர் வளர்ச்சிக்கு முன்பிருந்தே உதவியதைப் பற்றி பாபா என்பவர் பின்வருமாறு கூறுகிறார். “காஷ்மீரின் அரசாங்கம் மிகப்பெருமளவிலான தொகையை சுகாதாரத்துக்கும் கல்விக்கும் செலவழித்தது. எனவே, காஷ்மீரில் கடந்த காலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்த [ஷேக் அப்துல்லா] அரசின் சோசலிச அரசியல் கொள்கையானது, அதன் நீண்டகால வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”

பெரும்பாலும் கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட, காஷ்மீரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கைவிணைப் பொருட்கள் துறையின் காரணமாக கிராமப்புறத்துக்கும் நகரத்துக்குமான சமத்துவமின்மை மிகக் குறைவாக இருந்ததை அவர் பின்வருமாறு கூறுகிறார் :

“காஷ்மீரின் கைவிணைப் பொருட்கள் உயர் தரத்திலானவை, அதிக மதிப்புடையவை. இத்துறை பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. மேலும் அவர்கள் ஒரு வசதியான (comfortable) வாழ்க்கை வாழத் தேவையான வருவாயையும் ஈட்டித் தருகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் நீங்கள் [சாதாரணமாக] பார்ப்பதைப்போல தெருக்களில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பவர்களை காஷ்மீரில் பார்ப்பது அரிது. உயர்வான வளர்ச்சியும் முன்னேற்றமும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் குறைவான கருத்தரித்தலுக்கும் இட்டுச் சென்றுள்ளது. காஷ்மீரின் வளர்ச்சியை அதன் பொருளாதார மாற்றத்தின் மூலம்தான் [அதாவது நிலச்சீர்திருத்தம் மேற்கொண்டதன் மூலம்தான்] விளக்க முடியும் என்பதை என்னுடைய அனுபவத்தில் இருந்து என்னால் கூறமுடியும்.”

மூலக் கட்டுரை

நிகில் ராம்பால்,

தி பிரிண்ட் இணையதளம்.

தமிழாக்கம்

ரவி

 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன