ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்!

மக்கள் பிரச்சனைக்காக போராடி சிறை செல்லும் போராளிகளுக்கும் கூட வரும் காலத்தில் ஜி.பி.எஸ். கருவியயைப் பொருத்தி அவர்களை எந்த நேரமும் கண்காணித்து முடக்கும் வேலையில் இந்தக் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள் நிச்சயம் இறங்குவார்கள்.

 

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குலாம் முகமது என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவர் காலில் ஜி.பி.எஸ் (Global Positioning System) கருவியை காஷ்மீர் போலீசார் பொருத்தியுள்ளனர்.

சிறைத்துறை சீர்திருத்த நாடாளுமன்ற சிறப்புக் குழு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் ஜாமினிலும், விடுதலையாகியும் வெளியே வரும் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தலாம் என்ற பரிந்துரையுடன் கூடிய ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளது. இவை இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்குவதற்கு முன்பே அவற்றை காஷ்மீர் போலீசார் அதிரடியாக நடைமுறைப்படுத்தி போலீசின் ரவுடித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர். இவை போலீசுத்துறையை உள்ளடக்கியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும், அதன் அமைச்சர் அமித்ஷாவிற்கும் அறியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவை இதர மாநிலங்களுக்கும் நீடிக்கப்படலாம். போலீஸ் சாம்ராஜ்ஜியம் அரங்கேறினால் நரிகளின் நாட்டாமை தான்.

இது ஒருபுறமிருக்க, இனி ஜிபிஎஸ்.ஆனது பிணையிலோ, விடுதலையாகியோ வெளியேவரும் தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, சனநாயக உரிமைக்காக, அரசின் ஒடுக்குமுறை, அடக்குமுறைக்கு எதிராக, அதன் ஊபா, தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களுக்கு எதிராக, கூலி உயர்வு கோரி முதலாளிகளுக்கு எதிராக, காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராக, ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராடும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் போராடி கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிடும். இவர்கள் அனைவரும் ஜாமீனிலோ, விடுதலையாகியோ வெளியே வரும்போது இவர்கள் அனைவரையும் அர்பன் நக்சல்கள் என முத்திரைக் குத்தி ஜிபிஎஸ் பொருத்தப்படலாம். இதர குற்றங்களுக்காக சிறைசென்று ஜாமீனிலோ, விடுதலையாகியோ வருவோருக்கும் பொருத்தப்படலாம்.

மாநிலங்களின் சனநாயக உரிமைக்காக, தொழிற்சங்க உரிமைக்காக தொடர்ந்து போராடி, முதலாளிகளுக்கும் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் போராளிகளை 110 சட்டப்பிரிவின் கீழ் வைத்து, தொடர்ந்து கண்காணித்து வருவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் ஒரு பிரச்சனையென்றால் உடனே அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போல ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட அனைவரையும் தீவிரவாதிகளென வரையறுத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து போராடவிடாமல் அச்சுறுத்தி முடக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஒன்றிய அரசின் சனநாயக விரோத நடவடிக்கையை அதன் அடக்குமுறை கருப்புச் சட்டங்களை எதிர்த்தும் சனநாயக உரிமைக்காக போராடிய வரவர ராவ், ஆனந்த் தெல்டும்டே, சுதா பரத்வாஜ், மகேஷ் ராவத், சோமன் போன்றவர்களை பூனாவில் பீமா கோராகான் நிகழ்ச்சியில் பங்கேற்றதைக் காரணம் காட்டி அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்தி கருப்புச் சட்டமான ஊபாவில் கைது செய்து பிணையில் வராதபடி சிறையில் அடைத்த மோடி அரசின் பாசிச அடக்குமுறையை ஜி.பி.எஸ்-ஐ கொண்டுவரும் நோக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தால் பாசிஸ்டுகளின் இலக்கை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

2019-ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “தீவிரவாதம் துப்பாக்கியில் உருவாவது இல்லை. அவற்றைத் தூண்டக்கூடிய செய்திகள், எழுத்துக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றால் உருவானது” இவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற நாடளுமன்றத்தில் உரையாற்றிய விசக்கருத்தின் காரணமாகவே, சனநாயக அறிவு ஜீவிகள், போராளிகள் ஊபாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்கள்.

பாசிச மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூற்றுபடியே தீவிரவாதத்தைத் (மக்கள் கூற்றுப்படி போராட்டத்தை) தூண்டக்கூடிய செய்திகள், எழுத்துக்கள், இலக்கியங்கள் ஒரு வினைவின் எதிர் வினைவே தானே. அதாவது, ஒன்றிய, மாநில அரசுகளால் மக்களின் சனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது, நசுக்கப்படும்போது, சிறுபான்மை மக்கள் அடக்குமுறைக்குள்ளாகும் போது இதர உயிரனங்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்களும் போரடுவார்கள் என்பதுதானே இயற்கையின் நியதி. இவற்றை காவி – கார்ப்பரேட் பாசிச அமித்ஷா – மோடி கும்பலும் உணராமல் இல்லை.

மாறாக இவர்களுக்கு எதிராக போராடும் சனநாயக, முற்போக்கு புரட்சிகர சக்திகளை அடக்கி ஒடுக்கி வைப்பதே பாசிஸ்டுகளின் இலக்கு. அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தை கண்காணிப்பால் வைத்துக் கொள்வதற்கு ஒன்றிய அரசால் கொண்டு வரபட்ட ஆதாரை தொடர்ந்து, அடக்குமுறை கருப்புச் சட்டமான ஊபாவின் வரிசையில் தற்போது ஜிபிஎஸ்’சும் அணிவகுக்கப் போகிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். அமித்ஷா கூற்றுப்படியே தீவிரவாதத்தை தூண்டும், அதாவது புரட்சியை தூண்டிய பிரெஞ்சு இலக்கியங்களின், ரஷ்ய, சீன இலக்கியங்களின் வரிசையில் நாமும் பயணிப்போம்!.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன