மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் என்பது ஒரு வெற்று இடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அடையாளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையின் குறியீடு.  இத்துறைமுகம் வாயிலாகவே அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய முதலாளிகளின் சரக்குகள் கையாளப்படும். இதற்காக இந்திய கார்ப்பரேட் முதலாளியான அதானியும், நாட்டின் பிரதமர் மோடியும்  கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

இஸ்ரேலின் விமானங்கள், காசாவின் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது வான்தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிகின்றன. காசாவில் இருக்கும், குழந்தைகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் வீசும் குண்டுகளினால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பிரசவித்திற்காக காத்திருக்கின்றனர். அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, தொலைதொடர்பு வசதி இல்லை.  மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் அறுவைச் சிகிச்சை கூட செய்ய முடியாமல் மருத்துவர்கள் பரிதவிக்கின்றனர். காசாவிற்கான நிவாரணப் பொருட்கள் இஸ்ரேலினால் தடுக்கப்படுகின்றன. 

மனிதகுலமே வெட்கித் தலை குனியுமளவுக்கு மதவெறி கொண்ட பாசிச இஸ்ரேல் அரசின் இந்த அநீதியான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இப்போரை உடனடியாக நிறுத்தக் கோரியும், பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கக் கோரியும் ஐக்கிய நாடுகளின் மன்றம் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. மோடியின் இந்திய அரசோ இத்தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல், புறக்கணித்ததன் மூலம் தனது இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படையாக காட்டியுள்ளது.

 

 

ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல், இத்தீர்மானத்தின் மீது பேசும் போது, பயங்கரவாதம் மிகக் கொடியது; அதற்கு எல்லையோ, நாடோ, இனமோ கிடையாது; பயங்கரவாதச் செயல்கள் நியாயப்படுத்தப்படுவதை உலகம் ஏற்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்..

இந்தியப் பிரதமர் மோடியோ, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய உடனே, தனது எக்ஸ் பக்கத்தில் ”இந்தியா அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது” என்று பதிவிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு என இஸ்ரேலின் இன அழிப்பு போரை மோடியும் பாஜகவும் ஆதரிப்பது சர்வதேச உழைக்கும் மக்களை ஏய்ப்பதற்கான முதலை வடிக்கும் கண்ணீர் போன்றதே தவிர வேறில்லை.

****************

அணிசேரா இயக்கத்தின் தலைவரான இந்தியா 1950 களின் முற்பகுதியில் பாலஸ்தீன மக்களின் நெருங்கிய நண்பராகவே கருதப்பட்டது. 1975ல்  ஜ.நா மன்றம் கொண்டு வந்த 3379 தீர்மானத்தின் போது, ஜியோனிசத்தை இனவெறி என்றே இந்தியா அறிவித்தது. ஆனால் 1990 களில் நடந்தேறிய தாராளமயத்தின் விளைவால் தனது ஏகாதிபத்திய அடிவருடித் தன்மை காரணமாக இஸ்ரேலுடன் கொண்டிருக்கும், உறவை இந்தியா இயல்பாக்கியதால் இந்திய-இஸ்ரேல் உறவு திசை மாறியது

பாரதிய ஜனதா, தனது ஜனசங்க காலத்திலிருந்தே முஸ்லீம் எதிர்ப்பின் காரணமாக இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. மோடியின் தலைமையில் பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்தியா-இஸ்ரேல் உறவுக்கான அடிப்படையாக ஜியோனிச-இந்துத்துவ கூட்டு என்பது மட்டுமில்லாமல் இந்தியா-இஸ்ரேல் நாட்டின் பெரு முதலாளிகளின் நலன்களும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. உலகெங்கிலுமுள்ள பாசிச அரசுகளுடன் உறவுகளை கட்டியெழுப்ப மோடி தீவிரமாக முயன்று வருவதால்,இந்திய-இஸ்ரேல் உறவு தற்போது தீவிரமடைந்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலைமையில் செப்டம்பர் 2020ம்ஆண்டு நடைப்பெற்ற ஆபிரகாம் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா-இஸ்ரேல் உறவு மேலும் செழித்து வளர்ந்தது இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியச் சந்தைகளின் இணைப்புக்கு முக்கிய தளமாக மாற்றி அமைத்தது.

ஆபிரகாம் ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் 2022 ஆம் ஆண்டில் மட்டும்  சுமார்  ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. அரபு நாடுகளுக்கு மட்டும் 24% (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், மொராக்கோ, சூடான்), ஐரோப்பாவிற்கு 29% ஆசியாவிற்கு 30% ஆயுதங்களை விற்பனை செய்தது. இஸ்ரேலுக்கு ஆசியாவின் பெரிய வாடிக்கையாளராக இந்தியா இருந்து வருகிறது.

இஸ்ரேலிடமிருந்து இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டு தோறும்  சுமார் 12,000 கோடி ரூபாய் முதல் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள், ரேடார்கள், ட்ரோன்கள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இந்தியா வாங்குகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்டிரீஸ், ரபையல், மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் போன்ற இஸ்ரேல் நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாரத் போர்ஜ், டெக் மஹிந்திரா, அதானி குழுமம், மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ், போன்ற இந்திய அரசு நிறுவனங்களுடனும் நவீன ஆயுதங்களை கூட்டுச் சேர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன.

அதானியின் இந்திய நிறுவனம் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைந்து. தாக்குதல் துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெர்ம்ஸ் ட்ரோன்கள் 2014ஆம் ஆண்டு காசா மீதான குண்டு வீச்சின் போது முதன் முதலில் சோதனை செய்யப்பட்டது. பின்னர் இந்திய ஆயுதப்படைகளுக்காகவும், இஸ்ரேலின் ஏற்றுமதி சந்தைக்காகவும் தயாரிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனம் லோரா என்ற நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணையை (90 முதல் -430 கீமீ) உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதுமட்டுமில்லாமல்  இந்நிறுவனம்  பாரத் எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் லோரா ஏவுகணையை இந்திய பாதுகாப்பு படைகளுக்காக உற்பத்தி செய்து வருகிறது. இவ்வாறு இந்தியாவும் இஸ்ரேலும் பல்வேறு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் நடைப்பெற்ற ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தியா தனது வர்த்தக மேம்பாட்டை இஸ்ரேலுடன் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற அரபு நாடுகளுடன் விரிவுபடுத்தியுள்ளது.

இதன் பின்பு அக்டோபர் 2021 ஆம் ஆண்டு I2U2 (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா) என்ற அமைப்பு அதிகாரபூர்வமாக  உருவாக்கப்பட்டது

I2U2 முதல் உச்சி மாநாட்டிற்கு முன்னர் நீர், எரிசக்தி, போக்குவரத்து,  விண்வெளி, சுகாதாரம், மற்றும் உணவுப்பாதுகாப்பு போன்ற துறைகளில் கூட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய அரசின் அறிக்கைகள் கூறின. வெளிப்பார்வைக்கு பொருளாதார ஒத்துழைப்புக்காக உறவுகளை சீர்செய்து கொள்கிறது எனத் தோன்றினாலும், இந்தியாவின் அரசியல் நோக்கமும் அது எதிர்பார்க்கும் பலன்களும் வேறானதாகும். இந்த I2U2 அமைப்பு மூலம் ஒரு புறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்வது; மறுபுறம் இந்நாடுகளில் உள்ள நிதிமூலதனக் கும்பலை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வது; இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தை மேலும் பெருக்குவது என தாராளமயக் கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்கும் மோடி அரசு காய் நகர்த்துகிறது.

 

 

இந்த I2U2 அமைப்பின் விளைவாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலின் மிக முக்கியமான ஹைஃபா துறைமுகத்தை மோடியின் நண்பரான அதானி கைப்பற்றினார்

இந்தியாவின் நிலக்கரி வயல்களை ஏலம் எடுக்கும் போது தன் துணை நிறுவனங்களை சகபோட்டியாளர்களாக நிறுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கிய அதானி, ஹைஃபா துறைமுக ஏலத்தில் தனது இரண்டாவது போட்ட்டியாளரை விட 55 % அதிக தொகை கொடுத்து (சுமார் 6400 கோடி ரூபாய்) இத்துறைமுகத்தை கைப்பற்றியிருக்கிறார்.

அதானி இஸ்ரேலின் கேடாட் நிறுவனத்துடன் இணைந்து 70:30 விழுக்காடு என்ற அடிப்படையில் சுமார் 15,000 கோடி ரூபாய் கொடுத்து இத்துறைமுகத்தை கைப்பற்றியுள்ளார்.இந்தியாவிற்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ரொன் மல்கா என்பவர் தான் அதானியின் ஹைஃபா துறைமுகத்திற்கு நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

சீனாவின் புவிசார் அரசியலின் கடல், இரயில், தரை வழி மார்க்கத்திற்கு  மாற்றாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான ஒரு முக்கிய வர்த்தகப் பாதையாக இஸ்ரேலின் இந்த ஹைஃபா துறைமுகம் பார்க்கப்படுகிறது. மத்தியதரைக்கடல் மற்றும் வளைகுடா நாடுகளை இணைக்கும் வர்த்தகப் பாதையில் சூயஸ் கால்வாயை சுற்றி செல்லாமல் ஒரு புதிய வர்த்தகப் பாதையை  நிறுவ இஸ்ரேலுக்கு  இத்துறைமுகம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் என்பது ஒரு வெற்று இடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அடையாளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையின் குறியீடு.  இத்துறைமுகம் வாயிலாகவே அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய முதலாளிகளின் சரக்குகள் கையாளப்படும். இதற்காக இந்திய கார்ப்பரேட் முதலாளியான அதானியும், நாட்டின் பிரதமர் மோடியும்  கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்

அதானிக்கு ஹிண்டர்பர்க் அறிக்கையினால் வந்த நெருக்கடியை தொடர்ந்து, GQG பார்ட்னர்ஸ் இன்க் என்ற அமெரிக்க நிறுவனம், அதானி நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு அதானி குழுமத்தில் 15000 கோடி ரூபாய் ( இதில் அதானி போர்ட் பங்கு  சுமார் 500 கோடி ரூபாய் சேர்த்து ) முதலீடு செய்வதாக அறிவித்தது. இதன் விளைவாகவே உடனே நான்கு அதானி நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 10% வரை உயர்ந்தன. அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது.

இஸ்ரேல் அமெரிக்காவின் மேற்காசியப் பகுதியின் பேட்டை ரவுடியெனில், தெற்காசிய பேட்டை ரவுடியான இந்தியா, அமெரிக்கா எள் என்றால் எண்ணெயாக நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையை நிறுவுவதற்கும் தன் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கும் ஏற்ப நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் உறவுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனிருந்து ஒரு போதும் அமையப் போவதில்லை என்பதற்கு சாட்சியாகவே மதவெறி இஸ்ரேலின் ஆயுத தொழிற்சாலைகள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து அதி நவீன ஆயுதங்கள் உற்பத்தியை தொடங்குவதும், தனது அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடித்தனத்துக்காக தன் நண்பரை கொண்டு இஸ்ரேலின் துறைமுகத்தை கைப்பற்ற வைப்பதுமே சாட்சியாக உள்ளன.

இஸ்ரேல் பாலஸ்தீனர்களை தேசமின்றி துரத்திய ஆக்கிரமிப்பாளன் என்றால் , இந்தியாவோ சொந்த இனங்களை நசுக்கி  ஒடுக்கும் சிறைக்கூடம்; பாலஸ்தீன போராட்டங்களில் ஊடுருவி ஒடுக்க இஸ்ரேலுக்கு மொசாத் என்றால் இந்தியாவுக்கு ரா. இருநாடுகளும் அரசு பயங்கரவாதத்தின் எடுப்பான உதாரணங்கள். ஆனால் இருநாடுகளும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என கூறுவது சர்வதேச உழைக்கும் மக்களை ஏமாற்றுவதை தவிர வேறில்லை.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன