வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

கடந்த எட்டு நிதியாண்டுகளில் 12.01 லட்சம் கோடி அளவிலான வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது மோடி கும்பல். இது தோராயமாக கடந்த நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கிய மொத்த தொகைக்குச் சமமாகும்.

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை.  அதற்கான சமீபத்திய உதாரணம் முதலாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள 12.01 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் கிராமப்புற மக்களின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை பாதியாகக் குறைத்திருப்பதும்.  

மோடியின் எட்டு ஆண்டுகாலத்தில், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (scheduled commercial Bank-SCB) (இது பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள்) முதலாளிகளுக்கு கொடுத்துள்ள கடனில் அவர்கள் திருப்பி செலுத்தாமல் வாராக் கடன்(NPA) மாறியது மட்டும் 67.66 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் பொதுத்துறை வங்கியின் வாரக்கடன் 54.33 லட்சம் கோடி ரூபாய். மீதமுள்ள 13.33 கோடி தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் கொடுத்த வாராக்கடனாகும். இந்த மொத்த வாராக்கடனில் 17.8 சதவிகிதத்தை (12.10 லட்சம் கோடி), 2014-2015 லிருந்து 2022 டிசம்பர் முடிய, தள்ளுபடி செய்துள்ளது இக்கும்பல். முதலாம் உலக நாடுகள் கூட இவ்வளவு சதவிகிதம் வாராக்கடங்களை  தள்ளுபடி செய்வதில்லை. ஆனால் மோடி அரசோ, இந்திய தரகு முதலாளிகளுக்காக அதிக அளவிலான வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி செய்துள்ள மிகப்பெரிய சாதனை இதுதான்.              

 

        

இது குறித்து மேலும் பார்ப்பதற்கு முன், வாரக்கடன் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். பெரும் முதலாளிகள் புதியத் தொழில் தொடங்குவதற்கோ அல்லது தொழில்/தொழிற்சாலை விரிவாக்கத்திற்கோ பெரும் அளவிலான நிதியை வங்கிகள் கடனாக வழங்குகின்றன. கடன் வழங்கும் வங்கிகளோ, அப்புதியத் தொழிலைக் குறித்தும் நிறுவனத்தைக் குறித்தும் ஆய்வு செய்து கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்யும். ஆனால் மத்திய அரசோடு நெருக்கமாக உள்ள பெரும் முதலாளிகளுக்கு கடன் உடனடியாக கிடைத்து விடும். மோடி-அமித் ஷா கும்பலோ ஒருபடி மேலே முதலாளிகளுக்கான கடனை ஏற்பாடு செய்யும் அளவிற்கு முதலாளிகளுக்கு விசுவாசமாக உள்ளனர். அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்கு கடன் கொடுப்பதற்காக SBI வங்கி தலைமை அதிகாரியையே கையோடு மோடி ஆஸ்திரேலியா கூட்டிபோனதையெல்லாம் நாம் பார்த்துள்ளோம்.

 

 

முதலாளிகள் கடனுக்கான வட்டியையோ அல்லது கடனையோ 90 நாட்களுக்கும் மேலாக செலுத்தாமல் இருந்தால் அந்தக் கடனை வாரக்கடன்(Non Performing Asset-NPA) என்று வங்கிகள் வரையறுக்கும். 90 நாட்கள் மிகக்குறுகிய கால அளவாகத் தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வங்கிகள் உடனே எந்த நடவடிக்கையையும் எடுக்காது. வங்கிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் பல நிலைகளை கடக்கவேண்டும். எனவே தொழில் நிறுவனகள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுப்பதற்கு சராசரியாக மூன்றிலிருந்து நான்கு வருடமாவது ஆகும். பெரும் நிறுவனங்களுக்கு தான் கொடுக்கும் அனைத்துக் கடனும் திரும்பி வந்துவிடும் என்று வங்கிகளும் எதிர்பார்ப்பதில்லை. மொத்தக்கடனில் 1-2% வாராக்கடனாக மாறலாம் என்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுதான். ஆனால் இந்திய வங்கிகளின் 9-11 சதவிகித வாராக்கடன் அளவை ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளே விமர்சிக்கின்றனர். வாராக்கடன் பற்றிய கேள்விகள் வரும் போதெல்லாம் மழுப்பலான பதில்களை நிதி அமைச்சர் சொல்லிவிடுவார்.

டிசம்பர் 13, 2022 அன்று ராஜ்யசபாவில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளின் (SCB), மொத்த வாராக்கடனின் அளவு 31.3.2014 அன்று 4.1% என்ற விகிதத்தில் இருந்து 31.3.2018 இல் 11.46% ஆக உயர்ந்தது படிப்படியாக குறைந்துள்ளது என்றார். ஆனால் டிசம்பர் 29, 2022 அன்று ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில் (Financial Stabiliy Report), வங்கிகளின் வாரக்கடன் பிரச்சனை இன்னும் முடியவில்லை என்று கூறியுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதங்கள் செப்டம்பர் 2023 இல் 9.4% ஆக உயரக்கூடும் என்றும் கணித்துள்ளது.

வங்கிகளில் உள்ள பணம் என்பது மக்களின் சேமிப்பு பணம். இந்த சேமிப்பைதான்(14 லட்சம் கோடி) தொழில் வளர்ச்சி என்ற பெயரில் முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்துள்ளது மோடி-அமித் ஷா கும்பல். இதனால் பொதுத்துறை வங்கிகளும் பாதிப்படைந்துள்ளன. லாபமீட்டக்கூடிய பொதுத்துறை வங்கிகள், தங்களுடைய உபரியைக் கொண்டு வாராக்கடன் தள்ளுபடியினால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முயற்சிக்கின்றன. 2009 லிருந்து -2014 வரை ஆண்டுக்கு ரூ.35,000 கோடி முதல் ரூ.50,000 கோடி வரை லாபம் ஈட்டிய பொதுத்துறை வங்கிகள் தற்போது (2015-16 முதல் 2019-20 வரை) மொத்தமாக ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்துள்ளன.

தள்ளுபடி செய்யப்பட்ட 12 லட்சம் கோடி என்பது கடந்த நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கிய மொத்த தொகைக்கு அருகில் உள்ளது. இதைக் கொண்டு ஓரளவிற்கு தரமானக் கல்வியையும் சுகாதாரத்தையும் மக்களுக்கு வழங்கியிருக்க முடியும். ஆனால் இந்த பாசிச கும்பலோ கல்வியையும் சுகாதாரத்தையும் மேலும் தீவிரமாக தனியார்மயப்படுத்தி மக்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வதொடு மட்டுமில்லாமல், மக்களின் சேமிப்பான 12 லட்சம் கோடியை ஊதாரித்தனமாக முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது.  

மேலும், மோடி ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.34% ஆக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அளித்த நிவாரணம் என்பது ஒட்டுமொத்த கல்வித் துறைக்காக மோடி செலவழிக்கும் அதிகபட்ச தொகையாகும்.

 

 

பாஜக ஏழைகளுக்காக சிந்திக்கிறது என்கிறார் மோடி. மோடி ஏழைகளுக்காக சிந்திக்கும் லட்சணத்திற்கு இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இருந்து உதாரணத்தை தருகிறோம்.   

“2023-24 பட்ஜெட்டில் சமூக-பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நூறு நாள் வேலைத் திட்டம் (MGNREGA), சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் மகப்பேறு நலன் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் கூட்டினால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கியுள்ளது மோடி அரசு. இந்தத் திட்டங்களுக்கான மொத்தச் செலவினை உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கையில் இருபது ஆண்டுகளுக்குப் முன்பு எந்த விகிதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததோ (0.20%) ஏறத்தாழ அதே விகித அளவே (0.36%) தற்போதைய பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

உதாரணமாக, வேலைவாய்ப்பு உத்தரவாதத்திற்கான மக்கள் நடவடிக்கை (PAEG) கணக்கீட்டின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், MGNREGA திட்டத்தில் பதிந்துள்ள அனைவருக்கும், நூறு நாட்கள் வேலைக்காக  2,71,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் MGNREGA-வுக்கு 60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட 89,400 கோடியுடன் ஒப்பிடும் போது  (Revised Estimate) 33% குறைவாகும். விவசாயம், மதிய உணவுத் திட்டம், முதியோர் பென்சன் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் இதே கதிதான்.”

கேஸ் விலை உயர்வு, மின்சார கட்டண விலை உயர்வு, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கல்வி/மருத்துவத்திற்கான தனிநபர் செலவுகள் அதிகரிப்பு, புதிய வரி விதிப்புகள் என நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்க பிரிவினர் மீது அதிகமான பொருளாதாரச் சுமையை ஏற்றியும் முதலாளிகளுக்கு வாரி வழங்கியும் வருகிற  இப்பாசிச கும்பலை ஒழிக்காமல் நமக்கு விடிவு இல்லை.  

  • அழகு 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன