மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

நாடாளுமன்றமோ ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் நடத்தும் ‘நீயா, நானா’ கூச்சல் மன்றமாகிவிட்டது. கார்ப்பரேட் முதலாளிகளின் அடிவருடியான மோடி அமித்ஷா காவி கும்பல் தன்னிச்சையாக அந்த மன்றங்களில் மக்கள் விரோத  சட்டங்களை  நிறைவேற்றி வருவதன் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகம் தனது ஒட்டுக் கோவணத்தையும் இழந்து நிர்வாணமாக நிற்கிறது

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் கலவரம் பற்றி  விவாதம் நடத்த பாஜக மறுத்து வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூச்சல், குழப்பம், அமளியில் பல நாட்களாக முடங்கிப் போயிருக்கிறது.

பிரதமர் மோடி, அவையை தொடர்ந்து புறக்கணிப்பதை கைவிட வேண்டும் இல்லையெனில், நாடாளுமன்ற ஆட்சிமுறை, அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என ஒப்பாரி வைக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். நாட்டின் பிரதமரான மோடியை அவைக்கு வரவழைத்து,  பேச வைப்பதற்கே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற வரலாற்று சாதனையை புரிந்திருக்கின்றது இந்திய நாடாளுமன்றம்.

மோடி அவையில் வந்து பேசினால் ஏதோ மணிப்பூர் கலவரம் போன்ற நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணமுடியும் என்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. ஆனால் ஓட்டுக்கட்சிகள்  புனிதமாக முன்னிறுத்தும் நாடாளுமன்றத்தை மோடி மதிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

 

 

இதற்கிடையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதைப் பயன்படுத்தி, காவி பாசிஸ்டுகள் பல மசோதாக்களை விவாதங்கள் ஏதுமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறு நிறைவேறிய  மசோதாக்கள் பா.ஜ.கவிற்கே உரிய கபடத்தனங்களை கொண்டுள்ளன.

பாஜக அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்ப்பதில் ஒருங்கிணைந்த கண்ணோட்டம்  இல்லாமல் அவையை விட்டு வெளிநடப்பு செய்கின்றன எதிர்க்கட்சிகள். இதை சாதகமாக்கிக் கொண்டு, பீற்றிக் கொள்ளப்படும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியிருக்கிறது மோடி கும்பல். எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்த பிறகே பல  மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா:

இவ்வாறு பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் ஒன்று வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா.  எந்த மணிப்பூர் மக்களுக்காக எதிர்க்கட்சிகள்  அமளியில் ஈடுபடுகிறார்களோ அதே மணிப்பூரின் குக்கி இன மக்களை தேசப் பாதுகாப்பு என்ற பெயரில்  காடுகளிலிருந்து  விரட்டியடிக்க  சட்டப்படி வழிவகை செய்கிறது இம்மசோதா.

மணிப்பூர் கலவரத்திற்கு பாராளுமன்றத்தில் நியாயம் கேட்கப்போகிறோம் என புறப்பட்ட எதிர்க்கட்சிகளினால் இதுவரையில் இந்த நாடாளுமன்ற அமைப்பு முறையைப் பயன்படுத்தி, மணிப்பூர் கலவரத்தின் ஒரு கிரிமினல் குற்றவாளியை கூட தண்டிக்க முடியவில்லை.  மணிப்பூரில் நடக்கும் கலவரங்களை  தடுக்க  வக்கற்ற இந்த ஒன்றிய அரசோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்  கொண்டு இருப்பதால்,  இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் கூச்சல் மட்டுமே போடக்கூடிய செல்லாக்காசாகிவிட்டது.

ஜம்மு காஷ்மீர் பழங்குடியின சட்ட திருத்த மசோதா

மணிப்பூரில் மெய்தி இனமக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பகாரி இனக்குழு, கடாரி பார்ப்பனர், கோலி, பத்தாரி போன்ற சமூகங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

தில்லி நிர்வாக மசோதா

தில்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளதாக உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையிலும், அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் நோக்கிலும் ’தில்லி நிர்வாக அவசரச் சட்டத்தை’ இயற்றியுள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறை திருத்தம்) மசோதா 2023:

லித்தியம் மற்றும் பெரிலியம், டைட்டானியம், நியோபியம், டான்டலம் மற்றும் சிர்கோனியம் உள்ளிட்ட முக்கியமான கனிமங்களை தனியார் நிறுவனங்கள் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டு  இருக்கின்றது. இத்தனிமங்கள் அலைபேசிகள், பேட்டரிகள், மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், குறைக்கடத்திகள் தயாரிப்புக்கு முக்கியமான மூலப் பொருளாகும். ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள 5.9 மில்லியன் டன் அளவுள்ள லித்தியம் தனிமத்தை வெட்டியெடுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அனுமதி வழங்க வழிவகை செய்கிறது இம்மசோதா.

கிரிமினல் குற்றங்களை அணுகும் ஜன் விஸ்வாச மசோதா:

இந்தச் சட்டத்திருத்தத்தின் படி, தவறு செய்யும் தொழில்முனைவோர்கள் சிறைக்குச் செல்லாமல், அபராதம் மட்டும் கட்டிக்கொள்ளலாம் என்று தனியார் முதலாளிகளை காப்பாற்றும் நோக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவைகள் மட்டுமின்றி பிறப்பு -இறப்பு மசோதா, திரைப்பட திருட்டு தடுப்பு மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா, மத்தியஸ்த மசோதா போன்ற பல மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றன பாஜக அரசு. இன்னும் பல மசோதாக்கள் நிறைவேற காத்திருக்கின்றன.

 

 

காவி பாசிஸ்டுகள் நடத்தும் இம்மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்திற்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்து விட்டதை தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.

நாடாளுமன்றமோ ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் நடத்தும் ‘நீயா, நானா’ கூச்சல் மன்றமாகிவிட்டது. கார்ப்பரேட் முதலாளிகளின் அடிவருடியான மோடி அமித்ஷா காவி கும்பல் தன்னிச்சையாக அந்த மன்றங்களில் மக்கள் விரோத  சட்டங்களை  நிறைவேற்றி வருவதன் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகம் தனது ஒட்டுக் கோவணத்தையும் இழந்து நிர்வாணமாக நிற்கிறது.

கார்ப்பரேட் நலனுக்கான ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், அதற்கு துணைப் போகும் எதிர்க்கட்சிகள்-இவை பற்றிய உண்மையை மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதற்காக நடப்பது தான் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற நாடாளுமன்ற கூத்து! இக்கூத்துக்களை மீண்டும்  மீண்டும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

  • தாமிரபரணி

தகவல் ஆதாரம்:

https://www.thehindu.com/news/national/if-you-have-the-numbers-defeat-our-bills-parliamentary-affairs-minister-dares-opposition-in-lok-sabha/article67131714.ece

https://www.thehindu.com/news/national/travesty-to-pass-bills-when-no-confidence-motion-is-still-pending-says-congress-citing-rules/article67127551.ece

https://www.outlookindia.com/national/monsoon-session-which-bills-will-be-introduced-in-parliament-today–news-306908

https://liberation.org.in/liberation-2022-january/modi-regime-undermining-parliamentary-democracy

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன