தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

இச்சட்டத்திருத்தத்தின் மூலம், எது சரி எது போலியானது என்பதை தீர்மனிக்கும் முழு அதிகாரத்தையும் மோடி அரசு தனக்குத் தானே கொடுத்துள்ளது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதே சட்டப்படியே குற்றமாகலாம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தனது அரசியல் லாபத்திற்காக கட்டவிழ்த்து விடும் பொய்களை இனி, சட்ட ரீதியாகவே உண்மையென மக்களிடம் பரப்ப முடியும்.

சிலமாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிகார் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டக் காணொளி இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாகியது. இப்பிரச்சனையில், தேசிய ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி போன்ற மோடியின் ஜால்ரா செய்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான வன்மத்தையே செய்திகளாகப் பரப்பினர். பின்னர், இந்தக் காணொளி போலியானதென்று ஆல்ட் நீயுஸ் இணையதளம் கண்டறிந்து செய்தி வெளியிட்டது. இக்காணொளியைப் பரப்பியதே பிகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் என்று தமிழக போலீஸ் உறுதிசெய்தது. பாஜக தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு இந்த பொய்யானக் காணொளியைப் பரப்பியது, பிறகு  ஆதாரங்களோடு அம்பலமானது.

“நாங்கள் விரும்புகின்ற எந்த செய்தியையும், அது உண்மையோ அல்லது பொய்யோ, எங்களால் பரப்ப முடியும். ஏறத்தாழ 32 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களை நாங்கள் வைத்துள்ளோம்.” இது அமித் ஷா 2018 ல் ஒரு நேர்காணலில் பேசியது. தங்களுடைய வலுவான சமூக வலைதளக் கட்டமைப்புகளின் உதவியுடன் பொய்யானத் தகவல்களை பரப்புவதன் மூலம் மதக்கலவரங்களை உருவாக்குவதும் தேசவெறியைத் தூண்டுவதும் மக்கள் போராட்டங்களை இழிவுப்படுத்துவதும் கார்பரேட்களின் பகற்க்கொள்ளையை வளர்ச்சி என்று பொய்யுரைப்பதுமான வேலைகளை பாஜக செய்து வருகிறது. மேற்சொன்ன நிகழ்வு ஒரு உதாரணம் மட்டுமே. உண்மையில் பாஜக என்பது பொய்களை உற்பத்திச் செய்கின்ற சட்டவிரோதக் கம்பெனி. ஆனால் இந்த பிராடு கம்பெனிதான் இணையதளங்களில் பொய்யான செய்திகள் பரவுவதை கண்காணிப்பதற்காகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்காவும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தத்தைக் கடந்த மாதம் கொண்டுவந்துள்ளது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டக் கதைதான்!

 

 

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் [Information Technology (Intermediatiers Guidelines and Social Media Ethical Code) Rules 2023]  செய்து கடந்த மாதம் வெளியிட்டது மோடி அரசு. ஆரம்பத்தில் இணையவழி விளையாட்டுகளை (ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கிரிகெட்) ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தத்திற்கான நகலை ஜனவரியில் 2 ம் தேதி வெளியிட்டு 17 க்குள் கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு கூறியிருந்தனர். ஆனால் கருத்துக்கள் அனுப்புவதற்கான கடைசி தேதியன்று உண்மை சோதித்தறியும் குழு(Fact Checking Unit) அமைப்பதற்கான சட்டத்திருத்தத்தை வெளியிட்டு ஜனவரி 25 க்குள் கருத்துக்களை அனுப்புமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பொய் செய்திகளை கண்காணிப்பதற்கான சட்டத்திருத்தத்தை வெளியிட்டது உள்நோக்கம் கொண்டதே.

“இந்தியாவில் இணையப் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இணையத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுவதினால் சமூக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால், யூடூப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் பல வலைப்பூக்களில்(www.) பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக இரண்டாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக” தகவல் தொழில் நுட்ப அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். என்ன ஒரு சமூக அக்கறை!

இச்சட்டத்திருத்தத்தில், “பொய் அல்லது தவறான அல்லது தவறான புரிதல் தரக்கூடிய செய்திகளை, அது மத்திய அரசின் விவகாரங்கள் தொடர்பானதாக் கூட இருக்கலாம்” சோதித்தறிவதற்கான அதிகாரத்தை இச்சட்டம் உண்மை சோதித்தறியும் குழுவுக்கு வழங்கியுள்ளது. மேலும் வாட்ஸ் அப், வலைப்பூக்களில் பகிரப்பட்ட செய்திகள் பொய் அல்லது தவறான அல்லது தவறான புரிதல் தரக்கூடியவை என்று கருதினால் சம்மந்தப்பட்ட இணையத்தளத்தை விசாரிக்காமலே            அச்செய்தியை நீக்குவதற்குகான அதிகாரத்தையும் இச்சட்டம் அக்குழுவுக்கு கொடுத்துள்ளது. இப்புதியச் சட்டத்திருத்தத்தின் படி அரசு(மோடி அரசு) எது தவறான செய்தி என்று கருதுகிறதோ அல்லது அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரானது என்று கருதுகிறதோ அல்லது தன்னை அம்பலப்படுத்தக்கூடிய செய்தி என்று நினைக்கிறதோ அச்செய்திகளை இனி மக்களிடம் பரவாமல் சட்டப்படியே தடுக்கமுடியும்.

உதாரணமாக ஸ்டெர்லைட்-வேதாந்தாவிற்கு எதிராக பேசுவது நாட்டின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று கூறி ஸ்டெர்லைட்-அகர்வால் பற்றிய செய்தியையே ஒளிபரப்பாமல் தடுக்கமுடியும். ஹிடன்பர்க் அறிக்கை பற்றிய விவாதம் பங்குச்சந்தையை பாதிக்கும் என்று சொல்லி மோடி-அதானி பற்றிய அம்பலப்படுத்தலை சட்டப்படியே  கட்டுப்படுத்த முடியும். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதே சட்டப்படியே குற்றமாகலாம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தனது அரசியல் லாபத்திற்காக கட்டவிழ்த்து விடும் பொய்களை இனி சட்ட ரீதியாகவே உண்மையென மக்களிடம் பரப்ப முடியும்.

இச்சட்டத்திருத்தத்தினை  பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம் தனது அறிக்கையில், “இச்சட்டத்திருத்தத்தின் மூலம், எது சரி எது போலியானது என்பதை தீர்மனிக்கும் முழு அதிகாரத்தையும் மோடி அரசாங்கம் தனக்குத் தானே கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் மூலம் பொய் தகவல்கள் இணையத்தில் பரவுவதை தடுக்கவும் அவ்வாறு செய்தி பரப்புபவர்களை தண்டிக்கவும் முடியும். கூடவே இணையத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை சோதித்தறிவதற்கான குழுவை ஒன்றிய அரசின் பத்திரிக்கை செய்தி பிரிவின் கீழ் 2019 ல் உருவாக்கியது. அது செயல்பட்டும் வருகிறது. தற்போது செய்திகளின் உண்மைத் தன்மையை சோதித்தறிய ஒரு தனிக்குழுவையும் கூடுதலாக செய்திகளின் உண்மை தன்மையின் சரி தவறைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனக்குத் தானே அளித்துக்கொள்வதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன? இக்கேள்வியை பல பத்திரிக்கையாளர்கள் எழுப்பியும் அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கையே இச்சட்டத்திருத்தத்திற்கு பின்னால் இருப்பதை காவிகும்பலின் எட்டாண்டுகால நடவடிக்கைகளிலிருந்து இருந்து நாம் உறுதியாகக் கூற முடியும்.

தொடரும்…..                                                           

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன