நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

நீதிமன்றங்களின் துணைகொண்டு 2047க்குள் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தினை இரண்டு பகுதிகளாக பாஜக அரசு செய்துவருகிறது. முதல் பகுதியில், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதும் இரண்டாவது பகுதியில் அந்நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகளை பழங்கால இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் தருவது இறுதியில் இது போன்ற பல தீர்ப்புகளின் வாயிலாக அரசியல் சாசனத்தை இந்துத்துவா கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை அதிகாரப்பூர்வமாக்குவது.

 

 

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” குறித்த கருத்தரங்கு நடந்தது. அரசின் தலையீடு நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்பதாக கருத்தரங்கம் இருந்தது. “செயல்பாட்டாளர்களாகவும் இந்திய எதிர்ப்புக் கும்பலின் ஒரு பகுதியாகவும் செயற்படும் சில நீதிபதிகள், நீதித்துறையை அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளைப் போல மாற்ற முயற்சிக்கின்றனர்”.……”ஏஜென்சிகள் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும். யாரும் தப்பிக்க முடியாது.”, “நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும்.” என்று ரிஜிஜு நீதிபதிகளை மிரட்டியிருந்தார். 

கிரண் ரிஜிஜு குறிப்பிடுவது, மூன்று வாரங்களுக்கு முன்பு மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் தனது என்ஜிஓ மூலமாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தைப் பற்றித்தான். “நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முன்னாள் நீதிபதிகளான லலித், எ.பி. ஷா, மதன் லோகூர், தீபக் குப்தா, பேரா. முஸ்தபா, பேரா. மோகன், துஸ்வந் தவே மற்றும் பல மூத்த வழக்குரைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசின் தலையீட்டை விமர்சனம் செய்தே பேசினர். குறிப்பாக முன்னாள் நீதிபதிகளான ஷா, மதன் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் நீதித்துறையில் மோடி அரசின் தலையீடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்கள். கிரண் ரிஜிஜு குறிப்பிட்ட “ஆன்டி இந்தியன் குருப்” இவர்கள் என்று நாம் யூகிக்கலாம்.  

மோடி-அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த சமயத்தில் மாணவர் அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்களை ஆன்டி இந்தியன் என்று பட்டம் கட்டி மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளை ஒடுக்கியது. பிறகு சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள், பேராசிரியர்களை  நக்சல்கள்/ஆன்டி இந்தியன் என்று குற்றம் சாட்டி ஊபா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக CBI, ED, IT, NIA வை கொண்டு அரசியல் கட்சிகளை முடக்குகின்ற வேலையை செய்து வருகிறது. தற்போது நீதித்துறையில் மோடி அரசின் தலையீட்டை விமர்சிக்கின்ற முன்னாள் நீதிபதிகளை ஆன்டி இந்தியன் என்பதோடு மட்டுமில்லாமல் ஒரு படி மேலே சென்று அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தனது எடுபிடியைக் கொண்டு எச்சரிக்கை செய்கிறது.

2014 ல் மோடி ஆட்சிக்குப் பிறகு நீதிபதிகளின் நியமனங்களிலிருந்து உச்ச/உயர் நீதிமன்ற தீர்ப்புகள் வரை நீதித்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சமீபகாலமாக ஏறத்தாழ மொத்த நீதித்துறையும் பாஜக/ஆர்எஸ்எஸ் பாசிச கும்பலின் திட்டத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. எனவே பொதுவான அர்த்தத்தில் நீதித்துறை இந்துத்துவா மயமாகி வருகின்றது என்பது நாம் அறிந்ததே. உதாரணமாக அப்போதைய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அகில் குரோஷியை உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பலமுறை பரிந்துரைத்தும் மோடியின் சட்ட அமைச்சகம் அதற்கு ஒப்புதல் வழங்கவே இல்லை. இதற்கு காரணம், சோரபுதின் ஷேக் கொலை வழக்கில் அமித்ஷாவை விசாரிக்க நீதிபதி குரோஷி போலீசுக்கு அனுமதி கொடுத்தது தான் என்று பத்திரிக்கைகள் எழுதின. இதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வு பெற்ற உடனே கேரள மாநிலத்தின் ஆளுநராக மோடி-அமித்ஷா கும்பலால் நியமிக்கப்பட்டார். முத்தலாக் வழக்கு, பாபர் மசூதி வழக்கு இன்னும் பிறவற்றில் மொடிக்கு ஆதரவாக நடந்து கொண்ட பல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (ரஞ்சன் கோகோய், அசோக் பூசன், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா) உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாஜக-ஆர்எஸ்எஸ்-ல் இருபதினாலேயே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கௌரி நியமிக்கப்பட்ட கதையை நாம் சமீபத்தில் பார்த்தோம்.

ஆனால், அக்கருத்தரங்கில் பேசிய பேரா. மோகன் கோபால், 2047 க்குள் நீதிமன்றத்தின் துணையோடு ஹிந்து ராஷ்ட்ரத்தினை நிறுவதற்காக நீதித்துறைக்குள் ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் செயல்படுத்தி வரும் திட்டம் குறித்து அம்பல்படுத்தி இருந்தார். கடந்த இருபது வருடங்களில் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஆய்வு செய்ததிலிருந்து மோடி ஆட்சியில் கடந்த எட்டு வருடத்தில் நீதித்துறை காவிமயமாகிவருவதையும் அவர்களது இந்துராஷ்ட்ரா திட்டத்திற்காக எவ்வாறு நீதித்துறைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் விளக்கியிருந்தார்.          

அக்கருத்தரங்கில் பேராசிரியர் கோபால் பேசியது,

2004 மேயிலிருந்து இன்றுவரை 111 நீதிபதிகள் உச்ச நீதிமன்றதில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் 56 நீதிபதிகள் UPA ஆட்சிகாலத்திலும்(2004-2014) 55 நீதிபதிகள் NDA காலத்திலும் (2014-இதுவரை) பொறுப்பேற்றுள்ளனர். இவர்களை அரசியலமைப்பு சட்ட நீதிபதிகள்(Constitutionalist judges) மற்றும் இறையியல் நீதிபதிகள்(Theocratic judges) என்று இருவகையாகப் பிரிக்கலாம். அரசியலமைப்பு சட்ட நீதிபதிகள் என்பவர்கள் தங்களுடைய வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்புகளுக்காக முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள். இறையியல் நீதிபதிகள் என்பவர்கள் தங்களுடைய வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்புகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தினையும் தாண்டி பழங்கால இலக்கியங்கள், புராணங்கள் வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் கொடுப்பவர்கள். கடந்த இருபது வருடங்களில் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஆய்வு செய்ததிலிருந்து UPA ஆட்சியில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 6 பேர் அரசியலமைப்பு சட்ட நீதிபதிகள். இந்த எண்ணிக்கை NDA ஆட்சியில்  9. அதேவேளையில் இறையியல் நீதிபதிகளின் எண்ணிக்கை UPA காலகட்டத்தில் பூஜ்யம், NDA ஆட்சியில் இது 9, இதில் 5 பேர் உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ளனர் என்று கூறுகிறார்.

நீதிமன்றங்களின் துணைகொண்டு 2047க்குள் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தினை இரண்டு பகுதிகளாக பாஜக அரசு செய்துவருகிறது. முதல் பகுதியில், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதும் இரண்டாவது பகுதியில் அந்நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகளை பழங்கால இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் தருவது இறுதியில் இது போன்ற பல தீர்ப்புகளின் வாயிலாக அரசியல் சாசனத்தை இந்துத்துவா கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை அதிகாரப்பூர்வமாக்குவது. முதல் கட்டம் ஏறத்தாழ முடிந்து இரண்டாவது கட்டத்தில் நாம் அடியெடுத்து வைப்பதாகவும் பேசினார். இதற்கு உதாரணமாக ஹிஜாப் மற்றும் அயோத்தியா வழக்கின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஹிஜாப் தீர்ப்பில் நீதிபதி ஹேமந்த் குப்தா, “இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்பது, மேற்கத்திய நாடுகளை போல் இல்லாமல், இந்திய வரலாற்றுப் பின்புலத்தில் அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல் என்றே பொருளாகும். இங்கே மதம் என்பது வேறு தர்மம் என்பது வேறு. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது. ஆனால் தர்மம் என்பது சமுகத்தை உயர்த்துவது. ஒரு நாட்டுக்கான தர்மம் என்பது ராஜதர்மம் என்று அழைக்கப்படும். அரசியல் சாசனம் ஒரு ராஜதர்மமாகும். இந்த பின்புலத்திலிருந்தே அரசியல் சாசனப்பிரிவு 25 மற்றும் 26 ஐ பார்க்க வேண்டும்” என்று பொது விளக்கத்தைக் கொடுத்த பின்னரே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். நீதிபதி ஹேமந்த் குப்தாவின் குடும்பம் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பின் இறுதிப் பக்கத்தில் (ப.எண்:1045)

“மேலே குறிப்பிட்டுள்ள தொடர்ச்சியான நிகழ்வுகளிலிருந்து இந்துக்களின் நம்பிக்கையானது(faith and belief) மூன்று கோபுர அமைப்பில் உள்ள மசூதி கட்டப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த ஜனமஸ்தானம்.….. இதிலிருந்து வரக்கூடிய முடிவு என்னவென்றால் மசூதி கட்டுவதற்கு முன்பே இது ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. இது ஆவணங்கள் மற்றும் வாய்வழி சான்றுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது” என்று உள்ளது.

* * * * * *

ராமன் இங்குதான் பிறந்தான் என்பதற்கு என்ன வரலாற்று ஆதாரம்? வெறும் நம்பிக்கையை சாட்சியமாகக் கொள்ளலாம் என சட்டத்தின் எந்த பிரிவு சொல்லுகிறது? அரசியல்சாசனத்தில் எந்தப் பகுதி தர்மத்தைப் பற்றி பேசுகிறது? ஹேமந்தின் விளக்கத்தின் படி, இஸ்லாம் என்பது ஒரு மதம் ஆனால் இந்து என்பது மதமல்ல அது ஒரு தர்மம்(சனாதன தர்மம்). அது அனைவருக்குமானது. இவைகளே தீர்ப்புகளாகவும் அமைகின்றன. நூற்றுக்கனக்கான பக்கங்களில் இவர்கள் தீர்ப்புகள் எழுதுகிறார்கள். இவற்றை வழக்குரைஞர்கள் படிப்பது கூட சாத்தியமில்லாதது. இத்தீர்ப்புகளில் அரசியல்சாசனப் பிரிவுகளுக்கு மிகவும் நைச்சியமான வகையில் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். இத்தீர்ப்புகளே அடுத்தடுத்த வழக்குகளுக்கான ஆதாரமாகவும் அமைந்து விடுகின்றன.    

இந்திய அரசியல் சாசனத்தின் படி, சாதித் தீண்டாமை என்பது ஒரு குற்றம். அதேபோல் அனைருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, சொத்து சேர்க்கும் உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை அது உத்திரவாதப்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை முற்போக்கானது என்று பலர் பெருமைபட்டுக் கொண்டாலும் அது அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயகத்தையே முன்னிறுத்துகிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் சட்டங்களிலிருந்தும் அப்போது உருவாக்கியிருந்த மக்கள்நல அரசு என்ற கருத்தாகத்திலிருந்துமே அதன் கூறுகள் உருவாக்கப்பட்டது. அதேவேளையில், பார்ப்பன மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக அப்போதைய ஆட்சியாளர்களால்(பார்பனர்கள்) சில சட்டப்பிரிவுகள் திட்டமிட்டு அரசியல் சாசனத்திற்குள் புகுத்தப்பட்டது (இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடுவது, பிரிவு 25-கோவில்களில் பார்பனர்களின் அதிகாரத்தைப பாதுகாப்பது, பிரிவு 48-பசுவதை தடை, பிரிவு 343-அலுவல் மொழி குறித்து மற்றும் தேசிய இனங்களை அங்கீகரிக்க மறுப்பது). இப்பிரிவுகள் தான் இந்துத்துவா கும்பல்களின் வளர்ச்சிக்கும் பார்பனர்களின் சமூக மேலதிகாரத்திற்கும் அடிப்படையாகவும் சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குபவை. இதன் வளர்ச்சிப் போக்கில்தான் தற்போது இந்துராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான திட்டதோடு செயல்படுகின்றனர் காவி-பாசிஸ்டுகள். இவர்களின் திட்டத்தினை முறியடிப்பது உடனடித் தேவையாகும். அதோடு கூடவே பெரும்பான்மை மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தையும் உரிமையையும் வழங்குவதற்கான போராட்டமும் அவசியமாகும்.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன