காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. பயங்கரவாத கும்பல். கட்சி அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளை இடித்து  தரைமட்டமாக்கியதோடு, தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளது இந்த வெறிபிடித்த வானரப் குமபல்.

வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த இரப்பர் தோட்டங்களை எரித்ததோடு, விவசாயப் பயிர்களையும் மதம் பிடித்த யானையைப் போல துவம்சம் செய்துவிட்டன. வயிற்றுப் பிழைப்புக்கான இ.ரிக்‌ஷாக்களையும் வாகனங்களையும் நாசப்படுத்தி, தீயிட்டு எரித்துள்ளன பொறுக்கி லும்பன் கும்பல்கள்.

இத்தாக்குதல்கள் அனைத்தையுமே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மார்ச் 2 முதல் பதவியேற்ற மார்ச் 8 வரையிலான ஆறு நாட்களில் நடத்தியுள்ளன இந்த வானரப்படைகள்.

 

 

இவற்றை ஓரிரு பத்திரிக்கைகளைத் தவிர பிரபலமான பத்திரிக்கைகள், ஊடகங்கள் எதுவும் வெளிக்கொண்டு வராமல், ஊத்தி மூடி தாங்கள் மோடியின் அடியாட்படைகள் என்பதை  மீண்டும் நிருபித்துள்ளன.

பாசிச மோடி அரசோ, எதிர்க்கட்சிகளை தனது அடியாட்பிரிவுகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஊழல் ஒழிப்புத் துறைகளை ஏவியும் வழக்குகளில் சிக்க வைத்தும், அச்சுறுத்திப் பணிய வைக்கிறது. அரசுக்கு இணையான நிழல் இராணுவங்களான பஜ்ரங்தள், வி.எச்.பி. இந்து முன்னணி, சனாதன் சன்ஸ்தா போன்றவைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் வீடுகளை, தொழில்களை, வியாபாரங்களை, விவசாயங்களை அழித்து ஒழிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி வருகிறது. இவையிரண்டும் நாடறிந்த உண்மை. அதுவும் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை.

சட்டத்திற்குட்பட்டும், சட்ட விரோதமாகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை கட்சிகள் மீதும், குறிப்பாக வலது மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீதும் நடத்திவரும் பாசிச ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடம் புகார் அளிப்பதும், நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பப் போவதாகவும் வலது கம்யுனிஸ்ட் கட்சி கூறுகிறது. இந்நடவடிக்கை ஒரு சடங்கு என்பதைத் தாண்டி பெரிய பயனேதும் அளிக்கப்போவதில்லை.

 

 

வலது கம்யுனிஸ்ட் கட்சியின் கையாலாகத தன்மையை புரிந்து கொண்ட பாசிச ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் எதிர்கட்சியினர் மீது மிகக் கொடுரமானத் தக்குதலை நடத்தி வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் ஒழித்து பாசிசத்தைக் கொண்டுவரவும் துடிக்கிறது. இதற்கேற்ப அரசியல் சாசனத்தை வளைத்துப் போடவும், ஜனநாயகத் தூண்கள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தனது சித்தாந்த அடியாட்களை நிறுவி, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்து இராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது, மோடி-அமித் ஷா தலைமையிலான காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல்.

இவை அனைத்தையும் உணர்ந்த பின்பும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத் தூண்களை வவ்வால்களைப் போலப் பிடித்துக் கொண்டு தொங்குவதும், இதன் மூலம் தனது அணிகள் மற்றும் ஆதரவாளர்களின் அரசியல் அறிவை மலுங்கடிக்கச் செய்வதென்பது தனது அணிகளை பாசிச ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பயங்கரவாதிகளுக்கு பலிகொடுக்கவே உதவும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

நிலவுகின்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் நிதிமூலதன/கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று நம்புவது அடிமுட்டாள்தனம், கோழைத்தனம் என்பதை எதிர்மறையில் இட்லரின் நாசிசம் நமக்கு உணர்த்திவிட்டது. பாசிஸ்டுகளான முசோலினி, இட்லரின் வாரிசுகளான பாசிச ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பயங்கரவாதிகளை நாடாளுமன்ற ஜனநாயகத்தால் வீழ்த்த முடியாது.

‘எல்லோருக்கும் பொதுவானது என்று நம்பப்படும் ஜனநாயக அரசை’ பாசிச மோடி-அமித் ஷா கும்பல் காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கான அரசாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. இதற்குத் தடையாக உள்ள ஜனநாயக சக்திகள், புரட்சிகர சக்திகள் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வருவதோடு, இதற்கு இணையாக ஆர்.எஸ்.எஸ்.இன் பஜ்ரங்தள், வி.எச்.பி., இந்து முன்னணி, சனாதன் சன்ஸ்தா போன்ற நிழல் இராணுவப் படைகளை களத்தில் இறக்கி, ஜனநாயக-புரட்சிகர சக்திகளைக் கொன்று குவிப்பதையும், எதிர்க்கட்சிகளின் வீட்டையும் சொத்துக்களையும் அவர்களின் பிழைப்புச் சாதனங்களையும் அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தி சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி வருகிறது. இதே நிலைமை நாளை மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்திலும் திமுக ஆளும் தமிழ்நாட்டிலும் வரலாம்.

வருமுன் காப்போம் என்பதுபோல, இனியும் நாடாளுமன்றம் மட்டுமே தீர்வு என்ற மாயையை நம்பாமல், மக்களைத் திரட்டி களம் காணுவது மூலம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அடித்து வீழ்த்துவோம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன