ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பேசினார் என்பதற்காக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறிக்கலாம் என்றால் இஸ்லாமிய சமூகத்தின் மீது தொடர்ந்து வன்மத்துடன், அவதூறாக பேசி வரும் அமித்ஷா முதற்கொண்டு பல பாஜக தலைவர்களது பதவி இந்நேரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.”

 

 

தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன. அவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

என்னதான் தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்திருந்தாலும் பாசிஸ்டுகளுக்கு அதன் மீது சிறிதளவும் நம்பிக்கை கிடையாது என்பதுடன் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதை நோக்கி நகர்வதையே அவர்கள் என்றைக்கும் செய்திருக்கிறார்கள். இந்தியாவினைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் காவி கார்ப்பரேட் பாசிசமும் தற்போது அதனையே செய்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதை வைத்துக் கொண்டு, அவர் மோடி என்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவதூறாக பேசிவிட்டார் என குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் 23ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு மறுநாளே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதாக மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இது நாடு முழுவதும் பரபரப்பாகி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒன்று திரண்டு பாஜகவைக் கண்டித்து வருகின்றன. ஆனால் பாஜக தனக்கும் இந்த தகுதிநீக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நடிக்கிறது. ஒரு குற்ற வழக்கில் 2 ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைத்தண்டனை பெற்றவர்களது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டம் என கூறி சட்டத்தின்படியே எல்லாம் நடக்கிறது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் எனக் கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பேசினார் என்பதற்காக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறிக்கலாம் என்றால் இஸ்லாமிய சமூகத்தின் மீது தொடர்ந்து வன்மத்துடன், அவதூறாக பேசி வரும் அமித்ஷா முதற்கொண்டு பல பாஜக தலைவர்களது பதவி இந்நேரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்பதெல்லாம் பம்மாத்து என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும்.

2013ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கொண்டுவரப்பட்ட  திருத்தத்தின் மூலமே இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதல் இதற்கு முன்பு வரை இந்தச் சட்டத்தினைப் பயன்படுத்தி பலரது எம்.எல்.ஏ. எம்.பி. பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா, லல்லுபிரசாத் போன்றவர்களுக்கு ஊழல், சொத்துக்குவிப்பு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையிலும், கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல்வேறு பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது பதவியை இழந்துள்ளனர். சமீப காலம் வரை இப்படித்தான் இது இருந்தது.

ஆனால் தற்போது காவிக் கும்பல் தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் உத்திரபிரதேச சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ஆஜம் கான், நரேந்திர மோடியையும், யோகி ஆதித்யநாத்தையும் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் (பிப்ரவரி 2023) அவரது மகன் அப்துல்லா ஆதம் கானின் எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஒரு சாலை மறியல் நடத்தி அரசு அதிகாரிகளைத் தங்களது வேலையைச் செய்ய விடாமல் தடுத்தார் என்ற வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதை வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் தற்போதைக்கு எம்.பி.க்களாக இருப்பவர்களில் 233 பேர் (மொத்த எம்.பி.க்களில் 43 சதவீதம்) மீது, ஏதாவது  ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. இதில் 116 பேர் (சரிபாதி) பாஜக எம்.பி.க்கள். பலர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 233 பேரில் 159 பேரின் மீது வன்புணர்வு, கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற மிகத் தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களது வழக்குகள் எல்லாம் இன்னமும் முடிவடையாமல் விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எடியுரப்பா, ரெட்டி சகோதரர்கள் தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் கிடக்கிறது. ஆனால் அவர்கள் எம்.எல்.ஏ. எம்.பி.க்களாக, மத்திய மாநில அமைச்சர்களாக வளம் வருகிறார்கள். மலேகானில் குண்டுவைத்து 6 பேரைக் கொன்ற பிரக்யா சிங் பாஜக மக்களவை எம்.பி.யாக உள்ளார். இவர்கள் மீதெல்லாம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்றைக்கும் பாயாது.

ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக மிகத் தீவிரமாக மோடி அதானி உறவை அம்பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். குறிப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் அதானியின் குற்றங்கள் குறித்தும், காவி கும்பலுக்கும் அதானிக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பற்றியும் ராகுல் காந்தி பேசியது, சர்வதேச ஊடகங்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அது மட்டுமன்றி தற்போது நடந்து வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அதானி பிரச்சனையைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாஜகவிற்கு தொல்லை கொடுத்து வருகின்றன. இவை எல்லாவற்றையும் சரிகட்டி வழிக்கு கொண்டுவருவதற்கே ராகுல் காந்தி மீதான இந்தத் தாக்குதல்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, அதுவும் ஒரு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரை ஒரு சாதாரண அவதூறு வழக்கை வைத்து தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பது, இந்த ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்தினை காவி பாசிச கும்பல் எந்த அளவிற்கு மதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதன் மூலம், தன்னை எதிர்த்தால் அது யாராக இருந்தாலும் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்திக்க வேண்டும் என பாசிசம் மிரட்டல் விடுக்கிறது. ராகுல் காந்தி மீதான தாக்குதலை, ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலின் அடுத்த கட்ட நகர்வாகவே பார்க்கவேண்டும்.

  • அறிவு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன