செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு!

“தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல பாஜக தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் தமிழ் மொழியின் புகழ்பாடாமல் இருப்பதில்லை. மாறாக இவர்களது நிலைப்பாடு என்னவென்றால் சமஸ்கிருதம்/இந்தி மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்குவதேயாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து இந்திய அலுவலக மொழிகளின் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா “மொழிகளின் சகவாழ்வை நாம் ஏற்றுக்கொள்ளாத வரை, நம் சொந்த மொழியில் நாட்டை நடத்தும் கனவை நம்மால் நனவாக்க முடியாது. மேலும் அனைத்து மொழிகளையும் தாய்மொழிகளையும் வாழ வைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மனப்பூர்வமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த அனைத்து மொழிகளும் செழுமையாக இருந்தால் மட்டுமே இந்தி செழிக்கும்” என்றார். அதாவது மற்ற மொழிகளின் பெருமையைப் படிக்கொண்டே இந்தி மொழியை வளர்ப்பது என்பதுதான் அமித் ஷா – வின் வாதம். எனவேதான் இவர்களின் செயல்பாடுகளும் அதையொட்டியே உள்ளது.

கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில், செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம் 2020-21 ஆண்டில் மட்டும் 19.9 கோடியை சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும், 1.18 கோடியை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கும் செலவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

வருடம்CICT (லட்சத்தில்)CSU (லட்சத்தில்)
2014-15827.3612,580.00
2015-161,199.6816,147.36
2016-17510.4414,919.74
2017-181,067.6319,831.06
2018-19465.2521,437.99
2019-20980.7824,699.28
2020-211,173.0019,285.07
2021-221,186.1519,883.16

CICT- Central Institute of Classical Tamil-மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.
CSU- Central Sanskrit University – மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம்.

மோடி தலைமையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்த எட்டாண்டுகளில் (2014 -15 முதல் 2021-22 வரை) மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விவரங்களையும் கல்வி அமைச்சகம் கொடுத்துள்ளது. அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு 74.1 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேநேரத்தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,487.9 கோடியை இரைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் (24821) மட்டுமே. ஆனால் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய செம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை பல கோடிகளாகும். குறிப்பாக 6,90,26,881 பேர் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். பார்ப்பன புரோகிதர்கள் மட்டுமே அறைகுறையாக ஒப்பிக்கின்ற ஒரு செத்த மொழிக்கு (சமஸ்கிருதத்தை) பலவிதங்களில் முட்டு கொடுத்தும் புனிதம் கற்பித்தும் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. அதே வேளையில் சமஸ்கிருதத்தைவிட பழமையான, இலக்கியத்தையும் வரலாற்றையும் கொண்ட தமிழை திட்டமிட்டே புறக்கணிக்கிறது.

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன