மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

‘சுதந்திர’ இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாகவும், பார்ப்பனர்களின் அடையாளங்களை இந்தியாவின் அடையாளமாகவும், ஆளும் வர்க்கத்தினரால் இன்றுவரை முன்னிறுத்தப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த இந்(து)திய தேசிய கட்டமைப்பு இயல்பாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை தாயாரித்த உரையை, ஆளுநரால் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டதை ஆர்.என். ரவி சட்டசபையில் முழுவதையும் வாசிக்காமல் சில வார்த்தைகள்/பத்திகளை தவிர்த்து விட்டு (சமூக நீதி, மத நல்லிணக்கம், தமிழ்நாடு ஆகிய வார்த்தைகளையும் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் பெயர்கள்) வாசித்ததாகவும் இது அரசியலமைப்பு சட்ட விதிகள் மற்றும் மரபிற்கு மாறானது என திமுக அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டியது. இதற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமான மறுப்புகள் எதுவும் வராத நிலையில், ஆளுநர் மாளிகையின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர்களாக வலம்வரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக வினர் ‘அரசு எழுதித் தருவதையெல்லாம் ஆளுநர் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்தால் அதை அவர் நிராகரிக்க உரிமை உண்டு’ என ஆளுநருக்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர். மோடி அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை அப்படியே குடியரசு தலைவர் மக்களவையில் வாசிக்கிராரே என்று கேள்வி கேட்டால் சங்கிகள் வாய்திறப்பதில்லை.

 

 

இந்தியாவில் பின்பற்றப்படும் நாடாளுமன்ற முறையும் அரசியலமைப்புச் சட்டமும் இங்கிலாந்தில் பின்பற்றப்படும் முதலாளித்துவ ஜனநாயக முறையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. அதன்படி புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பும் அல்லது ஒவ்வொரு ஆண்டு நாடாளுமன்ற தொடங்கத்தின் போதும் அரசர்/அரசியின் உரையுடன் தொடங்குவதென்பது இங்கிலாந்தில் பின்பற்றப்படும் மரபு. அரசர் பேச வேண்டிய உரையை அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும். இதைப் பின்பற்றியே இந்தியாவிலும் அரசியல் சட்டப்பிரிவு 87 ன் படி குடியரத் தலைவரும் சட்டபிரிவு 176 ன் படி ஆளுநரும் புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பும் அல்லது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாடாளுமன்றம்/சட்டசபையில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றுவர். அவ்வுரையை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும். இதில் குடியரசு தலைவரோ/ஆளுநரோ தங்களுடையக் கருத்தைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ அதிகாரம் கிடையாது. அரசியல் நிர்ணய சபை விவாதத்தில், குடியரசு தலைவர் தன்னுடைய உரையில் அரசின் கொள்கை குறித்து பொருத்தமான கருத்துக்களை சேர்த்துக் கொள்வதற்கான திருத்தத்தை சட்டப்பிரிவு 87 ல் சேர்க்க வேண்டும் என்று பேரா. ஷா கோரியபோது அம்பேத்கர் அதனை நிராகரித்து விட்டார்.  

ஆளுநர் உரையை அமைச்சரவையே முடிவுசெய்ய வேண்டும் என்பதால் இதில் ஆளுநருக்கு பெரிய பங்கு கிடையாது. மேலும் தமிழ்நாடு, சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகள் நூறு வருடகால இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாதபடி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவை. அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டதும் கூட. ஆளுநர் தனது உரையில் இவற்றை வாசிக்காமல் தவிர்த்தது ஏன்? ‘தேசபக்தரான’ ஐ.பி.எஸ். ரவி, ‘பாரதத்தின்’ தேசிய கீதத்தைப் புறக்கணித்தது ஏன்?

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஆர்.என். ரவி தொடர்ச்சியாகச் செய்து வரும் சனாதன அடாவடிகளை திமுக பெரிதாகக் கண்டித்ததில்லை. ரவி, சனாதனத்தை தொடர்ந்து முன்னிறுத்தி வந்த போதும் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் பொருத்தமானது என்று பேசிய போதும் கூட திமுக தனது எதிர்ப்பை வெறும் அறிக்கை அளவிலேயே நிறுத்திக் கொண்டது. தற்போது கூட, திமுக உறுப்பினர்கள் யாரும் சட்டசபை விவாதங்களில் ஆளுநரை விமர்சித்துப் பேச வேண்டாம் என்றும் ஆளுநரை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறி குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர் திமுவினர். ஆட்சிக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் திமுக வின் கவலை. அடிமை அதிமுகவினரோ, சிறிதும் தன்மானமின்றி ஆளுநர் மாளிகை சர்க்கரைப் பொங்கலுக்கு கையேந்தி நிற்கின்றனர். கட்டியிருக்கும் அரைகுறைக் கோவணமும் காற்றில் பறந்த போதும், எங்களுக்கு மோடியே கடவுள் என்று கூறி ஆளுநருக்கு கூஜா தூக்குகின்றனர்.

தமிழ் மொழி உரிமை, பார்ப்பனிய எதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சனாதனத்தை முன்னிறுத்துவது மற்றும் தமிழகத்தில் பாஜக வளர்சிக்கு ஆதரவாக இருப்பது என்ற திட்டத்தோடு மோடி-அமித்ஷா கும்பலால் களமிறக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதற்கும் பெரியார், அம்பேத்கர் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்ததர்க்கும் இந்துத்துவ அரசியலே காரணமாகும். சட்டசபை நிகழ்வுகளுக்கு முன்பும் பின்பும் ஆளுநர் ரவி பேசியுள்ளவற்றை கேட்டாலே இதை நாம் எளிமையாகப் புரிந்துக் கொள்ளலாம்.

கடந்த வாரம் புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடந்த காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. அது நாம் திராவிடர்கள் என்று பிரபலப்படுத்துகிறது.  எந்தவொரு விசயத்தையும் தேசம் முழுவதும் கொண்டுசெல்ல முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது. இவற்றை உடைக்க வேண்டும். சொல்லப்போனால் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று பேசினார். சில தினங்களுக்கு முன்பு தியாகராஜ ஆராதனை விழாவில் “இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன் எனவும்; ‘சனாதனம்’ தமிழ்நாட்டிலிருந்து நாடு முழுவதும் பரவியது” என்றும் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

“இந்தியா என்ற பெயர் புழக்கத்திற்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்நாடு என்ற பெயர் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்றுதான் சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்துள்ளார். இதேபோல பரிபாடலிலும் தமிழ்நாடு என்ற சொல் உள்ளது” 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் எழுத்து வடிவம் இருந்தது என்று கீழடி ஆய்வுகள் நிருபித்துள்ளன. சமஸ்கிருதம் இந்தோ-ஜெர்மன் மொழிக் குடும்பத்தை சேர்ந்ததென்றும் தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்ததென்றும் மொழியியல் ஆய்வுகள் நிருபித்துள்ளன.

சனாதன சர்ச்சையை ஒட்டி நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு பிராமண சங்கத்தின் தலைவர் நாராயணன் “சனாதனம் என்பது வாழ்க்கை முறை, அது மூன்று லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. வர்ணம் என்பது குணம் அடிப்படையிலானது” என்றார். நவீன மனிதர்களின் தோற்றம் ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என தொல்லியல் ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் நாராயணனோ மூன்று லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே சனாதனம் இருந்தாகக் கூறுகிறார்.

இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் உருவாக்கியது. இது பல தேசிய இனங்களின் தொகுப்பு. காலனிய இந்தியாவை சுரண்டுவது மட்டுமே பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக இருந்ததால் அவர்கள் இங்குள்ள தேசிய இனங்களின் உரிமைகள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுடைய வர்த்தகத்திற்கு காலனிய இந்திய கட்டமைப்பே போதுமானதாக இருந்தது. இதோடு, பார்ப்பனிய விழுமியங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் ஆகியவையே இந்தியாவின் அடையாளம் என்ற கருத்து ஆங்கிலக் கல்வி பயின்ற உயர் சாதியினரால் முன்னெடுக்கப்பட்டது. இதனை ஆங்கிலேயர்களும் அங்கீகரித்தனர்.

காலனிய இந்தியாவை நிர்வகிக்க இங்கிலாந்தில் பின்பற்றப்பட்ட இரட்டையாட்சி முறையை இங்கேயும் புகுத்தினர். காலனிய இந்தியாவின் தலைவராக வைஸ்ராயையும் மாகாணங்களின் தலைவராக கவர்னர் ஜெனரல்களையும் நியமித்தனர். மொத்த அதிகாரமும் இவர்களிடமே இருந்தது. தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாகாணப் பிரதிநிகளுக்கு குறைந்த அதிகாரங்களே கொடுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக 1935 இந்திய அரசின் சட்டத்தின் படி மாகாண ஆளுநர்களுக்கு மாகாண அமைச்சரவையைக் கட்டுப்படுத்தும் ஆதிகாரங்கள் இருந்தன. 1937-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆறு மாகாணங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 1935 இந்திய அரசின் சட்டத்தின் கீழ் மாகாண ஆளுநர்களுக்கு  வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற உறுதிமொழியை வைஸ்ராயிடமிருந்து பெற்ற பிறகே ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டனர்.

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை மற்றும் அதன் அமைச்சரவைக்கும் அதிக அதிகாரம் இருந்த போதிலும் ஆளுநர் பதவியை அப்படியே வைத்துக்கொண்டனர். மாநிலங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆளுநரை வைத்துக்கொண்டனர். அந்தந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஒன்றிய அரசுக்கு செய்தி அனுப்புவதே ஆளுநர் மாளிகையின் பிரதான கடமை.

‘சுதந்திர’ இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதே ஒழிய அவைகளை தேசிய இனங்களாக அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களும் பழக்கவழக்கங்களும் இருந்தாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாகவும் பார்ப்பனர்களின் அடையாளங்களை இந்தியாவின் அடையாளமாகவும் ஆளும் வர்க்கத்தினரால் இன்றுவரை  முன்னிறுத்தப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த இந்(து)திய தேசிய கட்டமைப்பு இயல்பாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.

இந்தியா என்பது பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்டது என்பதையோ; இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு என்பதையோ காவிகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தியா (பாரதம்) பன்னெடுங்காலமாகவே உள்ளது; சனாதனமே அனைத்திற்கும் மூலம்; வேதக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழ் கலாச்சாரம்; ரிஷிகளால் கட்டமைக்கப்பட்டதே பாரதநாடு அதன் ஒரு பகுதியே தமிழகம்; வருண-சாதி அமைப்பே சிறந்தது; தமிழ் இலக்கியங்களை விட சமஸ்கிருத இலக்கியமே உயர்ந்தது போன்ற கருத்துக்களே ஆர்.எஸ்.எஸ்.ன் அடிப்படை. இதையே ரவியும் பிரச்சாரம் செய்கிறார்.

பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு இந்து தேசியவாதியின் நம்பிக்கை என்பதைத் தவிர ரவியின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழ்நாட்டில் காவிகளின் ஒற்றைக் கலாச்சாரக் கருத்திற்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதே எதார்த்தம். இப்போக்குதான் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கும் ஆர்.என். ரவிக்கும் கடுமையான கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் “திராவிடம் என்பது நம்மை பின்னோக்கி இழுக்கும் அரசியல் என்றும் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதே பொருத்தமானது என்றும்” உளருகிறார். பன்னெடுங்காலமாக தனது சமூக மேலாதிக்கத்திற்காக பல வடிவங்களை எடுத்து, சூழ்ச்சிகளாலும் நயவஞ்சகங்களினாலும் வெற்றிகண்டுள்ள பார்ப்பனியம் தற்போது காவி-கார்ப்பரேட் பாசிசமாக நம் முன்னே நிற்கிறது.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர்களின் அடாவடித்தனங்களின் வாயிலாக கட்டுப்படுத்தி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். இதில் ரவியோ அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். காரராகவே செயல்படுகிறார். குறைந்தபட்சம் தான் ஒப்புக்கொண்ட அரசியல் சாசனத்திற்குக் கூட நேர்மையாக இல்லை. எனவே ரவி, ஆளுநர் பதவியிலிருந்து வெளியேறுவதே சரியானது. ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து கொண்டு மாநிலங்களின் செயல்பாடுகள்/உரிமைகளில் தலையிடுகின்ற அதிகாரம் படைத்த ஆளுநர் என்ற பதவியே மக்களாட்சிக்கு விரோதமானது.

இந்திய ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக தேசிய இன உரிமையை திட்டமிட்டு பறித்துவரும் தரகு அதிகார வர்க்க கூட்டத்திடம் இவற்றை நாம் கோரிக்கையின் மூலம் பெறமுடியாது. இதற்கான தீர்வு அரசியல் களத்தில், மக்கள் போராட்டத்தின் மூலமே பெறமுடியும். ஆம், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கான போராட்டத்தின் மூலமே இவற்றை நாம் பெறமுடியும்.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன