ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமும், நயாரா நிறுவனமும் கொள்ளை லாபத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

 

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி மோடியின் இராஜ தந்திரத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மை ஏற்பட்டிருப்பதாகவும் காவிக்கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக அம்பானி உள்ளிட்ட தரகு முதலாளிகளே பலனடைந்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.

முதலில் மேற்கத்திய நாடுகளின் தடையை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதாகக் கூறுவதே வடிகட்டிய பொய். உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவை பொருளாதார ரீதியில் முடக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அவற்றில் முக்கியமானது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான தடையாகும். அதே சமயம் ரஷ்யாவின் எண்ணெய் வளத்தை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்பதாலும், ஐரோப்பிய கப்பல்களும், இதர வணிக நிறுவனங்களும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளதால் பாதிக்கப்படும் என்பதாலும் மற்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பேரல் ஒன்றிற்கு 60 டாலருக்கும் மிகாமல் எண்ணெய்யை வாங்கிக் கொள்வதற்கு அனுமதித்துள்ளன.

இதன் பொருள் இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த நாடும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன. அதுவும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், ரஷ்யாவின் மீதான தடையினால் ஏற்படவிருக்கும் பற்றாக்குறையை சரிக்கட்ட உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட சூழலில், இந்தியா போன்ற பெரிய இறக்குமதியாளர்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருவதை அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க மோடியின் இராஜ தந்திரம் தான் ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்கு வரக் காரணம் என காவிக்கும்பல் வழக்கம் போலத் தங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறது.

அடுத்ததாக ரஷ்ய எண்ணெய்யை இந்தியாவிற்கு கொண்டுவருவதால் யாருக்கு லாபம் என்ற கேள்வி எழுகிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மேலும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த பத்து ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அளவைக் காட்டிலும் இது அதிகமாகும்.

 

 

காவிக்கும்பல் கூறுவது போல இவ்வளவு ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்கு குறைந்த விலையில் வந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கிறதே ஒழிய குறையவேயில்லை. பெட்ரோல் விலை குறையாவிட்டாலும், அது மிகவும் அதிகமாக ஏறாமல் இருப்பதற்கு ரஷ்ய எண்ணெய்தான் காரணம் என காவிகள் சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெரிய அளவில் மாற்றமின்றி தொடர்வதால் இந்த வாதம் எடுபடாது.

அப்படியென்றால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததால் உண்மையில் லாபமடைந்தது யார்?

இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்காக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதனை சுத்தீகரித்து விநியோகம் செய்வது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களாகும். இந்த பொதுத்துறை நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து மிகக் குறைவான அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கின்றன.

அதேசமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ரஷ்ய நிதிமூலதனக் கும்பலால் இயக்கப்படும் நயாரா என்ற எண்ணெய் நிறுவனமும் தான் ஒட்டுமொத்த ரஷ்ய இறக்குமதியையும் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இப்படி இறக்குமதி செய்த எண்ணெய்யைச் சுத்திகரித்து அவை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யவில்லை. உள்நாட்டுச் சந்தையில் 10 சதவீதமாக இருந்த தனியார் சுத்தீகரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு கடந்த 6 மாதங்களில் 7 சதவீதமாக குறைந்திருப்பதில் இருந்தே இதனைப் புரிந்துகொள்ளலாம்.

 

 

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமும், நயாரா நிறுவனமும் கொள்ளை லாபத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளன. உக்ரைன் போரை ஒட்டி ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மறுத்துவிட்ட சூழலில் இதனைப் பயன்படுத்திக் கொண்டு கொல்லைப்புற வழியாக இந்த நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய்யை விற்பனை செய்துள்ளன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் போது தனியார் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையங்கள் மட்டும் ரஷ்ய எண்ணெய்யின் உதவியுடன் லாபத்தில் கொழித்துள்ளன. 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 1.6 லட்சம் கோடி அளவிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

இந்தக் கொள்ளை லாபம் வெளியே தெரிந்ததால் தங்களது தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள அடுத்த காலாண்டில் மோடி அரசு அறிமுகப்படுத்திய வரிவிதிப்பில் (windfall tax) மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் 4000 கோடி ருபாய் கூடுதல் வரியாகச் செலுத்தியுள்ளதை வைத்து இவர்களின் லாபத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். இந்த கண்துடைப்பு வரிவிதிப்பையும் கூட அம்பானியின் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது நீக்கிவிட்டுள்ளது மோடி அரசு.

அது மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, தற்போது அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துள்ளன, அதே சமயம் அமெரிக்கா விதித்துள்ள 60 டாலர் விலைக் கட்டுப்பாட்டிற்கும் கீழ் இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடிக்கப்போகிறது.

ஆனால் இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு நாட்டின் நலனுக்காக ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குவதாக பாசிசக்கும்பல் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது.

  • அறிவு

தகவல் உதவி

https://theprint.in/opinion/who-in-india-is-profitting-from-russian-oil-not-the-common-man-but-private-companies/1248999/

https://economictimes.indiatimes.com/industry/energy/oil-gas/indian-private-refiners-profit-from-cheap-russian-crude-as-state-refiners-suffer/articleshow/91935534.cms?from=mdr

https://www.reuters.com/business/indias-reliance-second-quarter-profit-hit-by-weak-refining-margins-2022-10-21/

https://www.reuters.com/business/energy/russia-backed-indian-refiner-nayara-energys-quarterly-profit-halves-2022-11-11/

https://www.outlookindia.com/business/reliance-nayara-to-gain-from-european-energy-crisis-report-news-237054

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன