நவீன தாராளவாத கொள்கைகளை கொண்டுவந்த போது அந்நிய முதலீடுகள் பெருகும் தொழில்துறை வளர்ச்சியடையும் இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் என்று கதையளந்தார் மன்மோகன் சிங்.
அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் சொன்னது பொய் என நிரூபனமானது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகுவதோ, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றமோ ஏற்பட்டுவிடவில்லை மாறாக விவசாயம் நசிந்து, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மக்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். எஞ்சியவர்களை கிராமங்களிலிருந்து அத்துக்கூலிகளாக நகரங்களை நோக்கி விரட்டியடிக்கப்பட்டனர்.
நியாயமாகப் பார்த்தால் இதற்குக் காரணமான தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றை மாற்றியிருக்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்தால் கார்ப்பரேட் முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள். அதேசமயம் மக்கள் தொகையில் பெரும்பாண்மையினருக்கு வேலையளித்து வரும் விவசாயம் சீரழிவதால் வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்கும் அளவிற்கு தொழிற்துறையும் வளரவில்லை. இதனைச் சமாளிக்க ஒரு தற்காலிகத் தீர்வாக நூறு நாள் வேலை திட்டத்தை 2006-ல் அறிமுகப்படுத்தியது அன்றைய காங்கிரஸ் அரசு.
ஆனால் மோடி பிரதமராகப் பதவியேற்ற உடனே நூறு நாள் வேலைத்திட்டத்தை இகழ்ந்து பேசினார். “கடந்த 60 ஆண்டுகளில் மக்களின் வறுமையைச் சமாளிக்க முடியாமல் ஏற்பட்ட காங்கிரசின் தோல்விக்கு நூறுநாள் வேலை உத்திரவாத திட்டம் ஒரு நினைவுச் சின்னமாக அமைந்துவிட்டது” என்றும் “இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு, உங்களால் முடிந்ததெல்லாம், ஒரு ஏழைக்கும் மாதத்தில் சில நாட்கள் பள்ளம் தோண்டும் வேலையைக் கொடுப்பதுதான்” என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இப்படி காங்கிரஸ் அரசை விமர்சித்துவிட்டு, அதே தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளை மிகத் தீவிரமாக அமுல்படுத்தினார் மோடி. அந்நிய முதலீடுகளைக் கொண்டு வந்து நாட்டில் தொழிற்துறையைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக பழைய பல்லவியையே மீண்டும் பாடினார். விளைவு 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் உயர்ந்து மக்கள் 3 ருபாய் பிஸ்கெட் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். காங்கிரசாவது பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சித்தது ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் கோவனத் துணியையும் உருவி முதலாளிகளுக்குக் கொடுக்க துடிக்கும் கார்ப்பரேட் அடிமை காவிக் கும்பலோ நூறு நாள் வேலைத்திட்டத்தையும் ஊத்தி மூட முயற்சிக்கிறது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஏழ்மை ஒழிப்பிற்கு உண்மையிலேயே உதவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஒன்றிய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர் சமீபத்தில் தங்களது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இத்திட்டம் குறித்து குழுவில் உள்ளவர்கள் முன்வைக்கும் வாதங்கள் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஒன்றிய அரசு என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதைப் காட்டுகின்றன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து ஒரு அதிகாரி தெரிவிக்கையில், உத்திரபிரதேசம், பீகார் போன்ற ஏழை மாநிலங்கள் வறுமையை ஒழிப்பதற்கு இத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடியவில்லை என்றும், அதே நேரத்தில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் கேரளா போன்ற மாநிலங்கள் சொத்துக்களை உருவாக்குவதற்கு இதனைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் தற்போதைய கட்டமைப்பின் படி ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க இயலாத அதேநேரம் பணக்கார மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என மறுக்கவும் இயலவில்லை என்று கூறுகிறார்.
இதிலிருந்து ஒரு உண்மையை அவர் வெளியிட்டுள்ளார், அதாவது இனி கேரளா போன்ற வசதி படைத்த மாநிலங்களுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இருக்காது. மிகவும் பின்தங்கிய உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற ஏழை மாநிலங்களின் வறுமையை ஒழிக்க போவதாக திட்டங்களைத் தீட்டப்போகிறார்கள்.
ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பு வசதியில்லாததால் ஒதுக்கிய பணத்தை செலவு செய்ய முடியாத நிலையில் உள்ள இத்தகைய மாநிலங்களுக்கு மேலும் அதிக நிதி ஒதுக்கப்போவதால் ஒரு பயனும் இல்லை அந்த தொகை செலவு செய்யப்படாமல் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதே சமயம் திட்டத்தை முறையாகப் அமுல்படுத்தும் மற்ற மாநிலங்களுக்கு நிதியை நிறுத்துவதன் மூலம் 100 நாள் வேலைத்திட்டத்தை மொத்தமாக முடக்கிவிடுவார்கள். இதற்காகத்தான் ஏழை மாநிலங்கள், வசதிபடைத்த மாநிலங்கள் என மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகிறார்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதன் பின்னணி இதுதான்.
மோடி அரசு பதவியேற்றது முதல் நூறு நாள் வேலை திட்டத்துக்கான ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டில் ரூ.1,10,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவே 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.72,034.64 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், ஏற்கனவே ஊதிய பாக்கியாக வழங்கவேண்டிய ரூ.18,350 கோடியை கழித்தால், மீதமுள்ள தொகையைக் கொண்டு வருகிற நிதியாண்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முடியாது.
இது தனியானதொரு நிகழ்வாகப் பார்க்க முடியாது. மக்கள் நலத் திட்டங்களை ஏதாவதொரு காரணம் சொல்லி ஒவ்வொன்றாக நிறுத்தி வருகின்றனர். வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை இதே போன்று முறைகேடு நடக்கிறது, ஆதாரோடு இணையுங்கள் வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடுகிறோம் என்றனர் ஆனால் தற்போது மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மூக்கால் அழுகும் இதே காவி கும்பல்தான், கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி ருபாய்களைக் கடன் தள்ளுபடியாக அள்ளிக் கொடுக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமும், எரிவாயு சிலிண்டரில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதின் நோக்கமும், தற்போது நூறு நாள் வேலைத்திட்டத்தின் முறைகேடுகளைக் களைவதற்கு குழு அமைத்திருப்பதன் நோக்கமும் வேறுவேறல்ல. இது மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் ஒழித்து அதன் பலன்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பாசிச மோடியின் சூழ்ச்சிதான்.
- ரவி
தகவல் ஆதாரம்:
https://www.thehindu.com/news/national/government-forms-panel-to-look-into-mgnregas-efficacy/article66183754.ece
https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/642822-privatization-6.html