பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள்  மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட நாளினை ‘இந்தியா – ஜனநாயகத்தின் தாய்’ என்ற தலைப்பில் கொண்டாட வேண்டுமென்றும், அதையொட்டி பல்கலைக்கழகங்களில் சிறப்புரைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் யுஜிசி வழிகாட்டியிருந்தது. கூடவே, நடத்தப்படகூடிய சிறப்புரைகளுக்கு உதவியாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள, “இந்தியா – ஜனநாயகத்தின் தாய்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உரைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அதில் வழிகாட்டப்பட்டிருந்தது.

இந்தியா “ஜனநாயகத்தின் தாய்” என்ற வரலாற்றுப் புரட்டை பல்கலைக்கழக மானியக்குழு புளுகுவதற்கு முன்பே, முதலில் புளுகிய பெருமை பார்ப்பனிய கட்டமைப்பை (அயோக்கியத்தனத்தை) மீட்பதற்கு புதிய அவதாரம் எடுத்துள்ள திருவாளர் மோடியையே சாரும்.

 

 

76 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் பேசிய மோடி “இந்தியா உலகின் பழைய ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாயும் கூட” என்று பேசினார். தனது பீகார் சட்டப்பேரவை தின உரையில், பல தசாப்தங்களாக, அந்நிய ஆட்சியால் தான் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைத்தது என்று கூற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உலகின் பெரும் பகுதிகள் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கும் போது, வைஷாலியில் ஒரு அதிநவீன ஜனநாயகம் இயங்கிக் கொண்டிருந்தது. உலகின் பிற பகுதிகளில் ஜனநாயக உரிமைகள் பற்றிய புரிதல் உருவாகத் தொடங்கியபோது, பீகாரின் சில இடங்களில் இருந்த குடியரசுகள் உச்சத்தில் இருந்தன. இந்தியாவில் ஜனநாயகம் என்ற கருத்து இந்த தேசத்தைப் போலவே பழமையானது” என்றார். பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கி  ஜெர்மன் வாழ் இந்தியர்கள் வரை  மோடியின்  ‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்’ என்ற பிரசங்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சொத்துரிமை, போன்ற தனிமனித உரிமைகளும் சுகந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை போன்ற உரிமைகளும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கு முன்பு அனைவரும் சமம் என்பதையோ அல்லது அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு என்பதையோ வலியுறுத்தும் சட்ட விதிகளோ அல்லது நடைமுறைகளோ இந்தியாவில் கிடையாது. பல நூற்றாண்டுகளாக இந்திய நிலப்பரப்பில் ஆட்சி செய்தது வர்ண-சாதி அடிப்படையிலான விதிமுறைகளே. இதனை பல வரலாற்று ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். சமகாலத்திலேயே ஜனநாயகத்தை அறவே வெறுக்கும் பாசிச கட்சியான பிஜேபிக்கும்,  அதன் தலைவர் மோடிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இல்லாத  ஜனநாயகத்தின் மீது தற்போது பாசம் வந்துள்ளது தான் நகைப்புக்குரியது.

 

 

பல்கலைக்கழகங்களில் அரசியலைமைப்பு நாள் கொண்டாட்டத்தில், பார்ப்பனியத்தின்   வடிவங்களாக உள்ள கீழ்க்கண்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டியிருந்தது காவி பாசிஸ்டு கும்பல். அவை,

  1. “அசோகரின் படை யெடுப்பின் போது கலிங்கத்தில் ‘கண இராஜ்யம் (மக்களாட்சி)
  2. “ஸ்ருதி, ஸ்மிதி, இதிஹாசா மற்றும் மஹாகாவ்யா நூல்களின் அடிப்படையில்  “பண்டைய சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ஜனநாயகத்தின் ஆட்சிக் கோட்பாடுகள்”
  3. சமஸ்கிருத இலக்கியத்தின்- “அரசர்களின் ஜனநாயகம்: ஆதிகால இந்திய ஜனநாயகங்கள்”,
  4. பண்டைய மற்றும் இடைக்காலத் தமிழ்நாட்டின் கிராம சுயராஜ்ய பாரம்பரியம்”
  5. “அர்த்தசாஸ்திரத்தில் பிரதிபலிக்கும் ஜனநாயக சிந்தனைகள் மற்றும் மரபுகள்” & கௌடில்யம் (சாணக்கிய நீதி)
  6. பகவத் கீதையின் படி “இலட்சிய அரசன் (ராஜர்சி அல்லது சீர் ராஜா அல்லது தத்துவ மன்னன்)
  7. ‘லோக்தந்த்ரா’ (சுய-ஆட்சி),
  8. உலக ஜனநாயக அமைப்பின் முன்னோடி சிற்பிகளான ஹரப்பன்கள், காப் (கிராம) பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றின் ‘ஜனநாயக மரபுகள்’

மேற்கண்ட கருதுகோள்கள் எவ்வகையில் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பு, அரசியலமைப்பு நாளான நவம்பர் 26 அன்று பார்ப்பனியத்தின் கொடூர ஒடுக்குமுறை வடிவங்கள்/வெளிப்பாடுகளை ஜனநாயகத்தின் கூறுகளாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் முன்வைப்பதற்கு பின்னால் RSS-BJP கும்பலின் இந்துத்துவமயமாக்கல் நோக்கம் உள்ளதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இல்லாத ஜனநாயகத்தை இருப்பதாக உலங்கெங்கும் புழுகி வரும் மோடியிடமோ அல்லது RSS-BJP அடிவருடிகளான ஜெகதீஸ்குமாரிடமோ அல்லது ஆளுநர் ரவியிடமோ அல்லது பிஜேபியை ஆதரிக்கின்ற ‘மெத்தப்படித்த’ துணைவேந்தர்களிடமோ மேலே சொல்லப்பட்டுள்ள எட்டு கருப்பொருள்களும் ஜனநாயகத்தின் வெளிப்பாடுகள் தானா என்பதை வரலாற்று ஆதாரங்களோடு விளக்கச் சொல்லி கேட்டால், வக்கீல் வண்டுமுருகனைப் பொலவே பதிலளிப்பார்கள்.

காரணம், இவர்கள் பேசுவதனைத்துமே மண்டபத்தில் எழுதித்தரப்பட்டவை. இந்த மண்டபங்கள் நாக்பூர் அரைடவுசர் கோஷ்டிகளால் நிரம்பியுள்ளது. கல்வித்துறையின் உயர்பதவிகள், பள்ளி-கல்லூரிகளின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது, இந்திய வரலாற்று/பண்பாட்டு ஆராய்ச்சி கழகங்களின் உயர்பதவிகள், மொழித்துறையின் உயர்பதவிகள் ஆகியவற்றில் அமர்ந்து கொண்டு பாடத்திட்டத்தினை காவிமயமாக்குவது, பார்ப்பனிய ஒடுக்குறை சரி என்ற வகையிலே இந்திய வரலாற்றை மாற்றியமைப்பது, புராணக்கதைகளை வரலாறாகவும் அறிவியலாகவும் பரப்புவது, பிற்போக்கான பழக்கவழக்கங்கள் மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்து முன்னோர்கள் முட்டாள்களல்ல என்ற நம்பிக்கையை பரப்புவது, ஹிந்தி-சமஸ்கிருதத்தினை முதன்மைப்படுத்துவது/திணிப்பது போன்ற வேலைகளை ஒருங்கிணைந்த வகையில் இந்த அரை டவுசர் கோஷ்டி செய்துவருகிறது. யுஜிசி தனது சுற்றறிக்கையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம்(ICHR) வெளியிட்டுள்ள ‘இந்தியா-ஜனநாயகத்தின் தாய்’ என்ற புத்தகத்தைத்தான் சாண்றாக பயன்படுத்துமாறு கூறியிருந்தது.

மோடியோ அல்லது யுஜிசியோ இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று கூறிக்கொள்வது ஆகாசப் புளுகாக இருக்கும் போது, பொய்யென்று தெரிந்தே திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் அதனை உண்மையாக்கும் கோயபல்ஸ் வேலைகளுக்குப் பின்னால் RSS-BJP கும்பலின் பாசிசத்திட்டம் உள்ளது.

— தொடரும்

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன