தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒரே இரவில் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி வாழ்வுரிமையைப் பறித்த, ஆபத்துகாலத் தேவைக்கான சிறுசேமிப்பையும் சிறுவாடு சேகரிப்பையும் பிடுங்கிய பாசிச மோடி அரசால் என்றாவது ஒருநாள் ஒரு இரவில் முதலாளித்துவ ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டு முதலாளித்துவப் பாசிசம் நிறுவப்படலாம்

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஐிஜு கடந்த செப்.17 அன்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ‘உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் அதிகாரம் கொண்ட கொலிஜியத்தால் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அது தனக்கு வேண்டியவர்களை, விருப்பம் உள்ளவர்களை நியமித்துக் கொள்கிறது. அண்மையில் பதவி உயர்வுக்குப் பரிந்துரைத்தவர்கள் தகுதி – திறமை அடிப்படையில் இல்லை. இதில் அரசியல் உள்ளது. அதனால் இந்த கொலிஜிய முறை ஏற்புடையதாக இல்லை’ என்று பேசியதோடு, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கும் பேட்டியளித்துள்ளார்.

இதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் ‘கொலிஜியம் நடைமுறையில் எந்தவிதக் குறைபாடும் இல்லை. தேவையெனில் நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து தரத்தை மேம்படுத்தலாம் என்று பதிலளித்துள்ளார்.

 

 

இருப்பினும் ஒன்றிய சட்ட அமைச்சரின் பிரச்சாரம் ஓயவில்லை. காரணம், இது இவருடைய விருப்பம் மட்டுமல்ல. பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் விருப்பமும் அதுவே. மேலும் இவர்கள் கூறும் அதிருப்தியுடைய மக்களும் இவர்களே. ஏனெனில், கொலிஜியம் முறை குறித்து பெரும்பான்மை மக்கள் அறிய வாய்ப்பில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் எதிர்பார்த்தபடியே தற்போது பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டும் இது தொடர்பான வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உத்திரவிட்டுள்ளார். இந்த விசாரணை முடிவு நீதிபதிகள் தாங்களே உருவாக்கிக் கொண்ட கொலிஜியக் கண்ணை தங்கள் விரல்களாலேயே குருடாக்கிக் கொள்வதும் நடக்கலாம்.

இவை நிறைவேறும் பட்சத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நீண்டகாலத் திட்டமான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) நிச்சயம் நிறுவுவார்கள். எதையெல்லாம் மக்களின் அதிருப்தி எனக் கூறி கொலிஜிய நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் நிராகரிக்கிறாரோ, அதாவது ‘ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை’ என்பது போல, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களையும், தாங்கள் விரும்பியவர்களையும் நியமித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தகுதி, திறமை இருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுடைய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே தெரிவு செய்வதற்கும், பதவி உயர்வு தருவதற்கும் ஒரே தகுதியாகும். இவர்களைக் கொண்டு தங்களுடைய பாசிச நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை.

இதற்காகத்தான் உச்சநீதிமன்றம் தலைமையில் 4 பேர் கொண்ட நீதிபதிகளை உள்ளடக்கிய கொலிஜிய முறையை, அதாவது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவாகிய கொலிஜிய முறையை ஒழித்துக்கட்டி, தங்கள் பாசிச தேவைகளுக்கேற்ப நீதித்துறையை வளைத்துப்போட, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துடியாய்த் துடிக்கிறார்கள்.

இது இன்று நேற்று நடக்கும் விசயமல்ல. 2003 இல் பா.ஜ.க. தலைமையில் ஒன்றிய தலைமை அமைச்சர் வாஜ்பாய் அரசு கொலிஜிய முறை வேண்டுமா என்பதை ஆராய நீதிபதி என்.எஸ். வெங்கடசலையா ஆணையத்தை அமைத்தது. அதுதான் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கப் பரிந்துரைத்தது.

இந்த அடிப்படையில்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தை 2015 இல் அரசியல் அமைப்பு முறைக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து தடுத்து நிறுத்திவிட்டது.

கொலிஜியம் முறையும் சரி, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமும் சரி அவரவர்களுடைய விருப்பத்தையும் – நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கே பயன்படும். இதில் தகுதி, திறமை என்பதெல்லாம் மாய்மாலம் மட்டுமே.

அதேபோல், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவதுபோல, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்துகொள்வதில் அரசியல் இருக்கலாம், ஆனால் அது சுயநலமிக்க – ஆதாயம் அடையும் அரசியலாகவும் இருக்கலாம்; அல்லது நீதித்துறையில் தங்களுடைய எதேச்சதிகாரத்தை – ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளும் அரசியலாகவும் இருக்கலாம்.

ஆனால் மேற்கண்ட அரசியலைவிட, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதித்துறையை, ஜனநாயகத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித்துறையை பாசிச மோடி அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பாசிச அரசியலை நிறுவுவதுதான் மிகமிக ஆபத்தானது. அபாயகரமானது. கொடூரமானது.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் காவி – கார்ப்பரேட் பாசிச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஜனநாயகத் தூண்களான நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள், நாடாளுமன்றம் போன்றவை பாசிச மோடி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனைத்து தகிடுதத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது.

சாம, பேத, தான, தண்டம் என்பதை ஏற்கனவே கையாண்டு நிர்வாகம், ஊடகங்கள், நாடாளுமன்றம் ஆகிய மூன்று தூண்களையும் தங்களுடைய பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேற்ப வளைத்து வருகிறது. இந்த வளையத்திற்குள் தற்போது நீதித்துறையையும் சட்டரீதியாகவே கொண்டுவர தேசிய நீதிபதிகள் ஆணையம் ஆவண செய்யும்.

ஒரே இரவில் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி வாழ்வுரிமையைப் பறித்த, ஆபத்துகாலத் தேவைக்கான சிறுசேமிப்பையும் சிறுவாடு சேகரிப்பையும் பிடுங்கிய பாசிச மோடி அரசால் என்றாவது ஒருநாள் ஒரு இரவில் முதலாளித்துவ ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டு முதலாளித்துவப் பாசிசம் நிறுவப்படலாம்.

இனியும், நொந்து சாவதில் பயனில்லை. முயற்சிக்குப் பிறகு தோல்வி என்பது கெளரவம்! முயற்சிக்காமல் முடியாது என்பது கேவலம்! என்ற முழக்கத்தை நினைவில் நிறுத்தி பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டணியை நிறுவி வீதியில் இறங்கிப் போராடுவதே நமக்கு முன்னுள்ள ஒரேவழி.

 மோகன்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன