குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது.

இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான ரிச்சர்ட் டெம்பிள். இதன் நீளமோ 223 மீட்டர், அகலமோ 1.05 மீட்டர். ஏறக்குறைய 69 அடி நீளமும், 33 அடி அகலமும் இருக்கும். மச்சு நதியின் குறுக்கே தர்பார்க்கத் அரண்மனைக்கும் நாளர்பர்க் அரண்மனைக்கும் இடையே கட்டப்பட்ட பாலம் இன்று, தர்பார்க்கத் அரண்மனையையும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியையும்  இணைக்கும் பாலமாக உள்ளது.

இதன் சீரமைப்பு சீரழிந்ததன் விளைவு சுமார் 142 பேர் உயிரைப் பறித்துவிட்டது. பலபேரை காயப்படுத்தி உள்ளது. மீட்டெடுக்கப்பட்டவர்கள் போக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெரியாது. தெரியாது என்று கூறப்படுவதே அயோக்கியத்தனம்.

 

 

ஏனெனில், இப்பாலத்தை எவரும் இலவசமாகக் கடக்க அனுமதிப்பது இல்லை. பெரியவர்களுக்கு ரூ.17-ம்; சிறியவர்களுக்கு ரூ.12-ம் வசூலிக்கபட்டுதான் பாலத்தைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றபோது கடந்தவர்களின் எண்ணிக்கை தெரியாது என்பது நம் காதுகளில் பூச்சுற்றும் வேலை.

பாலத்தைப் புணரமைக்கவும், பரமரிக்கவும் எவ்வளவு காலம் என்பதையும் எவ்வளவு பேர் ஒரே நேரத்தில் பயனிக்க வேண்டுமென்பதையும் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட வேண்டுமென்பதையும் சீரமைக்கும் நிறுவனத்துடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் புணரமைப்பு முடிந்தவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட மோர்பி மாநகராட்சியிடம் ஒரேவா நிறுவனம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இவையெல்லாம் விதிகள்.

அதிலும் மக்கள் பயன்படுத்தும் பாலம் போன்ற கட்டுமானங்கள் அதிக சிரத்தையுடனும், எச்சரிக்கையுடனும் மேற்கொள்ள வேண்டிய பணி. ஏனெனில், இவை மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை.

இவையெல்லாம் தெரிந்தும், அறிந்தும், உணர்ந்தும் மீறுவது என்பது போபால் கொலைக்கு ஒப்பானது. இதற்கு அடிப்படை அதிகாரத் திமிரும், மக்களின் உயிரை மயிராய் மதிக்கும் ஆணவமும், எவரையும் ஊழல்படுத்தி சாதித்துவிடலாம் என்ற நடைமுறையும்தான்.

இதற்கான காரண கர்த்தாக்கள் ஊரை அடித்து உலையில் போடும் ஒப்பந்தப் பேர்வழிகள். இவர்களுக்கு பாதை போட்டுத்தரும் அதிகாரிகள், இவற்றைச் செவ்வனே நிறைவேற்றித் தரும் கைக்கூலிகளாக இருந்து செயல்படும் ஆளும் கட்சி பேர்வழிகள். எனவே கொலைக்குற்றத்தின் கீழ் தண்டிக்கபட வேண்டியவை இம்மூவர் அடங்கிய கூட்டணியே.

ஆனால் இப்‘படுகொலைக்கு’ காரணம் ஒப்பந்ததாரர்கள்தான் என்று அவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு மற்ற இரு கிரிமினல்களும் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர். இவர்களின் வாக்கு மூலத்தையே ஊடகங்கள் அனைத்தும் வாந்தி எடுக்கின்றன.

இது எப்படி இருக்கிறதென்றால் கூட்டணி அமைத்து பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு கும்பல் மக்களிடம் மாட்டிக் கொள்ளும்போது ஒருவனை பலிகொடுத்துவிட்டு மற்றவர்கள் தப்பிக்கும் கதையாகத்தான் உள்ளது.

கட்டுமான பணிக்கான பணத்தை அரசு கஜானாவில் இருந்து அவிழ்த்துவிடும் அதிகாரிகளுக்கும், கட்டுமான பணியைப் பெற்றுத் தரும் அரசியல்வாதிகளுக்கும், கட்டுமானப் பணியை ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போது யார், யாருக்கு எவ்வளவு கமிசன் போகிறது என்பது ஊர் அறிந்த உண்மை.

ஆனாலும், இன்னும் நம்மை பித்துக்குழிகளாக நினைத்துக் கொண்டு மதுரை பாலம் இடிந்ததற்கும் மோர்பி குலுங்கும் பாலம் அறுந்ததற்கும் ஒப்பந்ததார்கள்தான் பொறுப்பு என்றும், காரணம் என்றும் திமுக அமைச்சர் எவ.வேலுவும், பா.ஜ.க. அமைச்சர்களும் உரக்கப் பேசி நம் தலையில் எலுமிச்சம் பழத்தை தேய்க்கின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் மட்டும் அவர்களது திருவாயைத் திறந்தால் இவர்கள் (அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்) பாடு சந்தி சிரித்துவிடும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் சொல்லித்தானே தீர வேண்டியுள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

போதாக்குறைக்கு உலகமகா கோயபெல்சான ஒன்றிய தலைமை அமைச்சர் பாசிச மோடியோ, டெல்லியில் நடந்த ஊழல் தடுப்பு ஒழிப்பு வார நிகழ்ச்சியில் “ஊழல் செய்தவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிவிடக்கூடாது” என்று கர்ஜித்துள்ளார். இது எதை நினைவூட்டுகிறது என்றால் ‘ஓட்றான் புடி, ஓட்றான் புடி’ என்ற கதையைத்தான்.

இந்தியாவிலேயே அதிக சொத்தும், பணமும் உள்ள கட்சியே பா.ஜ.க.தான். இவ்வளவு சொத்தும், பணமும் எங்கிருந்து வந்தது?

அரசுத்துறை, பொதுத்துறை, அதன் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு அள்ளி விற்றதால், வரி, வட்டி, வங்கி சலுகைகளை சகட்டுமேனிக்கு வாரி இறைத்ததால், இதற்கு கமிசனாக கார்ப்பரேட்டுகளால் கசி விட்டதுதானே.

குறிப்பாக, பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் வெற்றிக்கு அதானி அள்ளிவிட்டதும், அதற்கு மோடி அரசு விதிமுறைகளை மீறி வாரி வழங்கியதும், இதன் மூலம் அதானி உல்லாசப் பணக்காரர் வரிசையில் அணிவகுத்தற்கும் 09.11.2022 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்த “அதானியின் அவதாரம்” என்ற கட்டுரையே சாட்சி.

கார்ப்பரேட்டுகளின் காசுக்குக் கையேந்துவது ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசு – பா.ஜ.க. போன்றவை மட்டுமல்ல. பிராந்திய, பிழைப்புவாதக் கட்சிகளும்தான். ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க வேண்டுமானால் அதன் ஊற்றுக்கண்ணான முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும். அன்றாடம் இவர்களால் அரங்கேற்றப்படும் புதிய, புதிய கொள்கைகளை முறியடிக்க வேண்டும். விரைவில் கோடீஸ்வரர்களாக வருவதற்கான நடைமுறைகளை ஒழிக்க வேண்டும்.

இதன் மூலமே ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழிக்க முடியும். இது உலகம் முழுவதும் நிலவும் பிரச்சனை. இருந்தாலும் இவை நமது நாட்டையும் பாதிக்காமல் இல்லை.

எனவே, இந்தப் பாதிப்புக்குக் காரணமான தனியார்மய, தாராளமய, உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும், இவற்றை எதிர்த்து வரும் சக்திகளை ஏறித்தாக்கிவரும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான காவிகளைக் களைந்தெறிய வேண்டும்.

இதற்குத் தேவை மக்கள்திரளின் போராட்டங்களின் தொடர்ச்சியான, இடைவிடாத வளர்ச்சி. வாக்குகளின் வளர்ச்சியல்ல.

மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன