பி.எப்.ஐ மீதான தடைக்கு மோடி அரசு கூறும் காரணங்களை குறித்து பாகம் -1ல் எழுதியிருந்தோம். இத்தடையை ஆதரிப்பவர்கள், மோடி அரசு நீண்டகாலமாக பி.எப்.ஐ செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாகவும் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பி.எப்.ஐ அலுவலங்களில் சோதனை மற்றும் தடை நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளதாகவும் வாதாடுகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக ரிபப்பளிக் டிவி, ஆஜ்தக் டிவி, ஜீ நியுஸ், டைம்ஸ் நவ்-நவ்பாரத் ஆகிய இந்தி செய்தி ஊடகங்கள் பி.எப்.ஐ தடை செய்யப்பட்டதை முதன்மைச் செய்தியாக்கியும் மோடியை புகழ்ந்தும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஜீ நியுஸ்-ம் ஆஜ்தக்-ம் ஒருபடி மேலே சென்று பி.எப்.ஐ இஸ்லாமிய நாடுகளுடன் பணப்பரிவர்த்தனைச் செய்தற்கான ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும் வெளிநாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் பி.எப்.ஐ க்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. (Zee News tracked a money trail for the PFI to foreign lands — Saudi Arabia, United Arab Emirates, Kuwait, Bahrain, Oman and Qatar, while Aaj Tak cited evidence of its alleged links to foreign terrorist groups) NSA வுக்கே இன்னும் முழுமையாக ஆதாரங்கள் கிடைக்காத போது செய்தி ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது மோடி-அமித் ஷா வுக்கு மட்டுமே வெளிச்சம்.
தி இந்து பத்திரிக்கையோ பி.எப்.ஐ மீதான தடையை ஆதரித்தாலும் தனது தலையங்கத்தில், ……. 2006 ல் பி.எப்.ஐ உருவானதிலிருந்து சட்ட மற்றும் சமூக அரங்குகளில் அதன் உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக அமைப்பாக வளர்ந்து வருகிறது. இப்போக்கு இந்திய அரசியலில் இந்துத்துவா சக்திகளின் அரசியல் மேலாத்திகத்தோடு பொருந்தி போகிறது……. என்று எழுதியுள்ளது. இதே கருத்தை, டெக்கான் கிரானிகல், இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளும் எழுதியுள்ளன.
தமிழக செய்தி ஊடகங்கள் மற்றும் யூடூப் விவாதங்களிலோ, பி.எப்.ஐ தடைக்கு மோடி அரசு கூறிய காரணங்கள் ஆர்.எஸ்.எஸ் க்கும் பொருந்தக்கூடியது தான் பிற்கு ஏன் ஆர் எஸ் எஸ் ஐ தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வி.சி.க தலைவர்களில் ஒருவரான வன்னியரசு 600 கலவரங்களுக்கு மேல் ஆர் எஸ் எஸ் செய்துள்ளது அதனை ஏன் தடை செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் செய்துள்ள கலவரங்கள்/கொலைகளை சுட்டிகாட்டி ஆர்.எஸ்.எஸ் ஐ தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் களத்தில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
இக்கோரிக்கை சரியானதுதான். இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வதற்கு பிரதானக் காரணம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னேடுத்து வரும் பார்ப்பன பயங்கரவாத செயல்பாடுகளேயாகும். 1990 களுக்கு பிறகு முஸ்லீம்கள், தலித்துகளுக்கு எதிராக பல கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க நடத்தியுள்ளது. பல குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளனர். ஆர் எஸ் எஸ் தொடர்புள்ள குண்டுவெடிப்புகள் குறித்தும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
****
ஆர். எஸ். எஸ் நடத்தியுள்ள குண்டுவெடிப்புகள்
- ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு – 2006
- மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் – 2006
- சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு – 2006
- மாலேகாவ் குண்டுவெடிப்பு – 2006
- மாலேகாவ் குண்டுவெடிப்பு – 2007
- மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் – 2007
- நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா – 2006
- பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா – 2006
- ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா – 2008
- பூனே குண்டுவெடிப்பு – 2008
- கான்பூர் குண்டுவெடிப்பு – 2004
- கன்னூர் குண்டுவெடிப்பு – 2007
- பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா – 2007
- தானே குண்டுவெடிப்பு – 2007
- வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு – 2009
- கோவா குண்டுவெடிப்பு – 2010
குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்கள்
- சுனில் ஜோஷி – மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 – 2003 வரை பதவி வகித்தவர்.
- சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் – ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 – 2007
- தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா – ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.
- லோகேஷ் சர்மா – ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.
- சந்திரகாந்த லாவே – ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம்.
- சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.
- ராஜேந்திர சமுந்தர் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.
- முகேஷ் வாசனி – குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் – கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
- ராம் காலசங்காரா, கமல் சவுகான், ராஜேந்திர சவுதிரி, ராம்பாலக் தாஸ், லக்சுமந்தாஸ் தன்சிங், ராம் மனோகர், குமார் சிங், தேஜ்ராம், ராகுல் பாண்டே, உமேஷ் தேஷ்பாண்டே – ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
- சாமியாரினி பிரஞ்யா சிங் – ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்
- சந்தீப் உபாத்தியாய் 19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் – இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்
- சஞ்சய் சவுதிரி, ஹிமான்சு பான்சே, ராம்தாஸ் முல்கே –அபினவ்பாரத்
- நரேஷ் ராஜாகேடாவர், யோகேஷ் வித்துல்கள், மாருதி பாங்கே, துப்தேவர் குருராஜ், மிலிந்து எகாவோட், மாலேகவுடா பாட்டில்-கோவா தேவாயலத்தில் குண்டு வைக்கச் சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார்-யோகேஷ் நாயக், விஜய் தோல்கர், வினாயக் பாட்டில், பிரசாத் ஜுவேகர், ராஜேஷ் கட்கரி – சனாதன் சான்ஸ்தா
- சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள்.
- விக்ரம் பாவே இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர்.
குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாது குஜராத் கலவரம், மும்பைக் கலவரம் முதல் சமீபத்திய டெல்லி கலவரம் வரை பல கலவரங்களை ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் தலைமை தாங்கி நடத்தியுள்ளது. இக்கலவரங்களை முன்னின்று நடத்திய பலர் தற்போது மோடி அரசில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
****
பி.எப்.ஐ-ன் அரசியல் பிரிவான SPDI கட்சி தேர்தலில் பங்கெடுக்கக்கூடியக் கட்சி. தென்இந்திய மாநிலங்களில் உள்ள கட்சிகளோடு சேர்ந்து உள்ளாட்சி மன்றம்/சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். பி.எப்.ஐ அமைப்பு ஆர்.எஸ்.எஸ் ஐ போன்றே மத அடிப்படைவாதத்தையும் தற்காப்பு பயிற்ச்சிப் பெற்ற இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்ட மிலிட்டண்ட் படையையும் வைத்துள்ளது. பி.எப்.ஐ ன் மீது பலவழக்குகள் உள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்ட வழக்குகளில் பி.எப்.ஐ ஆதரவாளர்கள் தண்டனையும் பெற்றுள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற குண்டுவெடிப்புகளோ அல்லது NIA கூறும் குற்றச்சாட்டுகளோ இதுவரை எதுவும் நிருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
முஸ்லீம் மக்களை இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களாக ஆகுவதற்காக மோடி-அமித் ஷா கும்பல் கொண்டுவந்த CAA-NRC க்கு எதிராக முஸ்லீம் மக்களை திரட்டி போராடியதில் PFI-SPDI அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போராட்டத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம், NSA, NIA னுடையப் பார்வை PFI ன் மீது விழ ஆரம்பித்தது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், வெளிநாட்டிடமிருந்து நிதி திரட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பி.எப்.ஐ ஆதரவாளர்கள் மீ NIA வழக்குகளை பதிய ஆரம்பித்தது. உதாரணமாக பீகாரில் NIA பதிவு செய்த வழக்கைக் கூறலாம்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பீகாரில் உள்ள புல்வாரி ஷெரீப்பில் “தேச விரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு FIRகளை பீகார் காவல்துறை பதிவு செய்தது. அந்த FIR ல் 26 முஸ்லிம்களின் பெயர்களை சேர்த்திருந்தனர். ஒரு FIR ல், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் பி.எப்.ஐ அமைப்பின் உறுப்பினர். அவர் “தற்காப்புக் கலை என்ற போர்வையில் ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு FIR ல் ஒரு முஸ்லீம் இளைஞரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் மனநலம் குன்றியவர், “அவர் இந்தியாவிற்கு எதிரான வாட்ஸ்அப் குழுவை இயக்குகிறார்” என்று குற்றம் சாட்டியது. இவர்களிடம், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் என்று கூறும் பி.எப்.ஐ ஆவணம் கிடைத்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது. பிரதமர் நரேந்திர மோடியின் பாட்னா வருகைக்கு முன்னதாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இவ்வழக்கை NIA விசாரித்து வருகிறது.
இதையொட்டி பீகார் மாநில PUCL கிளை உண்மைக் கண்டறிதல் குழு அமைத்து அறிக்கை வெளியிட்டது. அதில் “பாட்னா மாவட்டத்தின் புல்வாரி ஷெரீப் பகுதியில் முதன்மையாக ஆயுதப் பயிற்சியோ, பயங்கரவாதச் செயல்களோ அல்லது இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் பீகார் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் PUCL அறிக்கை கூறுகிறது. மேலும் பீகார் காவல்துறையின் FIR மற்றும் பொய்யான கைதுகளுக்கு ஆதரவாக இந்து டெய்லி, தைனிக் பாஸ்கர் போன்ற இந்தி செய்தி ஊடகங்களால் “பயங்கரவாதம்” என தவறான கதை கட்டப்பட்டது என்று அறிக்கைக் கூறுகிறது.
அதேவேளையில், 2006 ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நான்தெத் ல் நடந்த குண்டுவெடிப்பில் ஆர் எஸ் எஸ்-வி எச் பி க்கு தொடர்பு இருப்பதாக வழக்குப் பதியப்பட்டது. தற்போது இவ்வழக்கை CBI விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரசாரக்கான யஸ்வந் சிண்டே தன்னையும் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் ஒன்றை நான்தெத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளார். அதில், “…….இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் ஆர் எஸ் எஸ் – ன் உறுப்பினர்கள். இவ்விருவரும் வி ஹெச் பி – ன் மகாராஷ்டிரா பிராந்தியத்தின் தலைவராக இருந்த மிலிந்த் பரண்டேவின் நெருங்கிய கூட்டாளிகள். இந்த இரண்டு நபர்களும் என்னிடம்(யஷ்வந்த் சிண்டேவிடம்), வெடிகுண்டு தயாரிப்பிற்கான பயிற்சி முகாம் விரைவில் ஏற்பாடு செய்யப் போவதாகவும், அதன்பின், நாடு முழுவதும் வெடிகுண்டு வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு நான் (யஷ்வந் சிண்டே) பொறுப்பேற்க வேண்டும் என்றனர். நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதை முகத்தில் காட்டாமல், 2004 லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தமா என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை……..” என்று கூறியுள்ளார். CBI யோ, யஷ்வந் சிண்டே வை சாட்சியாக விசாரிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் இதற்கு பதில் தாக்கல் செய்துள்ளது.
இவ்விரு வழக்குகளிலிருந்தும் மோடி அரசின் ஏவலாளிகளான NIA, CBI, ED அமைப்புகளின் செயல்பாடுகள் அரசியல் நோக்கம் கொண்டுள்ளதாகவும் இந்துத்துவா மேலாதிக்கத்திற்கான கருவிகளாக உள்ளதை புரிந்து கொள்ளமுடியும்.
இந்திய அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு 15 மாநிலங்களில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் 350 க்கும் மேற்பட்ட கைதுகள் இவற்றின்மீது பலநாட்களாக நடந்துவரும் ஊடகங்களின் கவரேஜ் போன்ற பிரமாண்டங்களுக்கு பின்னால் பி.எப்.ஐ ‘தேச விரோத’ நடவடிக்கைகள் கட்டுப்படுத்துவது என்பதைத் தாண்டி மோடி-அமித் ஷா கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை அமல்படுத்துவதற்கானத் திட்டம் இருப்பதாக அனுமானிக்க முடிகிறது. பீமாகொரே கான் வழக்கு, டெல்லி கலவர வழக்குகளை பற்றி விரிவாகப் பார்த்தால் இந்த அனுமானம் சரியானதே.
-அழகு.
தொடரும்…….