தனக்கு எதிரான கருத்துக்கள் எந்த வழியில், வடிவத்தில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது என அடக்கி ஒடுக்கும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலானது, பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தனது ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கையில் இருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்த, பத்திரிக்கையாளர்கள், அறிவுஜீவிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், மற்றும் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் அனைவருக்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவருகின்றனர்.
இதனால் ஆத்திரமுற்றுள்ள காவி-கார்ப்பரேட் கும்பல் இதனை எவ்வாறாகினும் தடுக்க வேண்டும் என இவர்களின் முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை முடக்குவதற்கு முயன்று வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றில் ஒன்றிய அரசினை அம்பலப்படுத்தும் விதமாக பதிவிடுபவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு ஒன்றிய பாஜக அரசு, டிவிட்டர் நிறுவனத்தை நிர்பந்திதுள்ளது, இதனை எதிர்த்து தற்போது அந்நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
டிவிட்டர் நிர்வாகத்திற்காக வாதாடும் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், மேற்சொன்ன விஷயங்கள் குறித்து அரசை விமர்சிப்போரின் முழுக் கணக்குகளையும் முடக்குமாறு டிவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக வாதிட்டார், இருப்பினும் ஐடி சட்டத்தின் பிரிவு 69A ஒருவரின் முழு கணக்கையும் தடுக்க அனுமதிக்கவில்லை. அச்சட்டத்தின் பிரிவின் கீழ் இடுகையிடப்படும் குறிப்பிட்ட தகவல் அல்லது குறிப்பிட்ட ஒரு டிவீட்டைத் தடுக்க மட்டுமே இது அனுமதிக்கிறது என்றார்.
சமூகத்தின் பல முக்கிய நபர்கள் தங்கள் கணக்குகளை டிவிட்டர் ஊடகத்தில் வைத்துள்ள நிலையில், அரசிற்கு எதிராக போடப்படும் ஒரு டிவிட்டிற்காக முழு கணக்கையும் முடக்க கூறும் மத்திய அரசின் உத்தரவு டிவிட்டர் நிர்வாகத்தின் வணிகத்தை பாதிக்கும் என்று வாதிட்டுள்ளார்.
கூடுதலாக, இந்த உத்தரவுகளின் கீழ் முடக்க வேண்டும் என ஒன்றிய அரசு பட்டியலிட்ட டிவீட்களில் 50-60% ட்வீட்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவோ, யாரையும் புண்படுத்தக் கூடியதாகவோ இல்லை என்று தாத்தர் குறிப்பிடுகிறார்.
“உதாரணமாக, டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது, அது குறித்து செய்தி வெளியிட்ட டிவிட்டர் கணக்குகளை முழுவதுமாக முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு பொதுவாக உத்தரவிட்டது. அப்போது, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போது, ஏன் அதே செய்திகளை வெளியிடும் டிவிட்டர் கணக்குகளை முழுவதுமாக முடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்”என்றும் தாத்தர் தனது வாதத்தில் கேட்டுள்ளார்.
தன்னைப்பற்றி அரசியல் ரீதியில் விமர்சிப்பவர்களின் கணக்குகளை முடக்க அரசு உத்தரவிடுவது குறித்து, அவர் கூறுகையில், “சட்டப்பிரிவு 19(1)(a)ன் மையமாக இருப்பது விமர்சிக்கும் உரிமை ஆகும். பேச்சு சுதந்திரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. சட்ட வரம்புக்குள் விமர்சனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு’’ என்று கூறுகிறார்.
கடந்த ஜூலை மாதத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 10 கணக்குகளை முடக்க கூறி அளித்த உத்தரவுகளை எதிர்த்து, அப்போதே உயர் நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் முறையீடு செய்தது. பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி, குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு வெளியிடும் அரசியல் உள்ளடக்கத்தை அகற்றுமாறு கூறுவதற்கு முன்பு அச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக அத்துறையின் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கவில்லை.
ட்விட்டர் நிறுவனத்தின் மனுவுக்கு ஒன்றிய அமைச்சகம் செப்டம்பர் 1 அன்று 101 பக்க ஆட்சேபனை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வழக்கு தற்போது, அக்டோபர் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
பெரும் ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச மத யானைக்கு, சமூக ஊடகங்கள் எனும் சிற்றெறும்புகள் பெரும் தலைவலியாக இருக்கின்றன. எனவே எதிர்ப்பு எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் நசுக்கிவிட வேண்டும் என இந்தக் கும்பல் வெறிகொண்டலைகிறது.
காவி- கார்ப்பரேட் பாசிசம் யாரையும் விட்டுவைக்காது என்பதை உணர்ந்து ஊடகவியலாளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
முத்துக்குமார்.
தகவல் உதவி – தி வயர்