மதவெறியைக் கிளப்புவதன் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் காவி கும்பல்

மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண்டும் என்றால் பாஜக மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். ஆனால் விலைவாசி உயர்வு தொடங்கி வேலைவாய்ப்பின்மை வரை எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் ஒன்றியத்தில் தாங்கள் காவி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள்தான் அதற்கு மூல காரணமாக இருக்கிறது அவற்றைப் பேசினால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவோம் என்று மக்கள் பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, காவி கார்ப்பரேட் பாசிசம் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும், பாஜக என்ற அரசியல் கட்சியின் மூலம் நேரடியாகவும், பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் பல நூறு மதவெறி அமைப்புகள் மூலமாக மறைமுகமாகவும் தொடர்ந்து வேலைசெய்கிறது.

ஒன்றிய அரசினைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி தனக்கான ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது. ஒன்றிய அரசிலும், வடஇந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மட்டும் செல்வாக்குச் செலுத்துவது மட்டுமே பாசிச ஆட்சியை நிறுவுவதற்குப் போதுமானது இல்லை என்பதை காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் உணர்ந்திருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை காலூன்றச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டணி அமைத்துக் கொள்வது, அந்த கட்சியின் எம்.எல்.ஏ. எம்.பி.க்களை விலைக்கு வாங்குவது, பணிய மறுப்பவர்களை வருமான வரித்துறையையும், அமலாக்கத் துறையையும் பயன்படுத்தி மிரட்டிப் பணியவைப்பது, இந்த வேலைக்கு மாநில கவர்னர்களைப் பயன்படுத்திக் கொள்வது. பின்னர் மாநில அரசைக் கவிழ்த்து தனியாகவோ, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்தோ, அல்லது மாநிலக் கட்சிகளிலிருந்து ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களைக் கூலிக்கு அமர்த்திக் கொண்டோ மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துக் கொள்கின்றனர்.

 

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மாநிலத்தில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் மூலமும், யூடியூப் பேஸ்புக் வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, அதன் மூலம் தாங்கள் குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்தாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

கோவா, கர்நாடகா, மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களிலும், ஏன் பாஜக என்ற கட்சியை பற்றிக் கேட்டேயிராத திரிபுரா போன்ற மாநிலங்களிலும் கூட இந்த வழிமுறையைப் பின்பற்றித்தான் ஆட்சியைப் பிடித்துள்ளனர். மோடி அமித்சாவின் சாணக்கியத்தனம் என்று மெச்சிக்கொள்ளும் இந்த மானங்கெட்ட சதிச் செயலுக்கு அஞ்சி பீகாரின் நிதீஸ்குமார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களே கூட இந்த காவி கும்பலைவிட்டு ஓடிப் போகின்றனர்.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவிற்கு கணிசமான அளவிற்கு செல்வாக்கை உருவாக்கிவிட வேண்டும், குதிரை பேரத்திற்குப் படியும் எம்.எல்.ஏ,க்களை வாங்கிப் போட வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. இதற்காக அமித்ஷாவும், ஜே.பி. நட்டாவும் தமிழ்நாட்டிலேயே தவம் கிடக்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தவரை அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த பாஜக அதிமுகவைத் தனது கைப்பாவையாக ஆட்டிவைத்து வந்தது. கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் அவசியம் பாஜகவிற்கு இல்லாமல் போய்விட்டது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள், ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். என அதிமுகவைப் பிளந்தது மற்றுமின்றி இன்று வரை அதற்கு ஒரு தீர்வு வராமல் இழுத்தடித்து அதிமுக கட்சியினரை திட்டமிட்டு குழப்பத்தில் வைத்திருக்கிறது இந்த காவி கும்பல்.

இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழக ஓட்டுக் கட்சிகளிலேயே அதிகமான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பது அதிமுக மட்டுமே. திமுக என்றைக்கும் கூட்டணிக்கட்சிகளின் பலத்துடனேயே வெற்றி பெற்று ஆட்சியமைத்து வந்துள்ளது. ஒருபுறம் அதிமுகவின் தலைமை குறித்த குழப்பங்களைத் தொடரச் செய்துவிட்டு மறுபுறம் அக்கட்சியின் ஆதரவாளர்களைத் தன்பக்கம் இழுக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. திமுகவிற்கு மாற்றான கட்சியாக அதிமுகவிற்கு பதில் தன்னை முன்னிறுத்துவதைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

தமிழகத்தில் ஒரு பிரதான  எதிர்க் கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண்டும் என்றால் பாஜக மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். ஆனால் விலைவாசி உயர்வு தொடங்கி வேலைவாய்ப்பின்மை வரை எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் ஒன்றியத்தில் தாங்கள் காவி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள்தான் அதற்கு மூல காரணமாக இருக்கிறது அவற்றைப் பேசினால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவோம் என்று மக்கள் பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

மாறாக தமிழகத்தில் இந்து மதத்தினர் இழிவுப்படுத்தப்படுவதாகவும், இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகவும், அதன் சொத்துக்கள் திருடப்படுவதாகவும் கூறி பாஜக பிரச்சாரம் செய்கிறது.

சமீபத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சாதிப் பாகுபாடுதான் இந்து மதத்தின் அடிப்படை என்பதை குறிக்கும் விதமாக மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும்” என்று பேசினார்.

 

ஆ.ராசா பேசிய பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து வெளியிட்டு, அவர் இந்துக்கள்  எல்லோரையும் விபச்சாரியின் மகன் என்று கூறியதாக ஒரு கட்டுக்கதையை பாஜக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருகிறது. பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தை தமிழகத்தின் முற்போக்கு சக்திகள் பலர் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் இதுகுறித்துப் பல பதிவுகள் திராவிட மற்றும் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாலும், முற்போக்காளர்களாலும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம்,

ஆனால் பாஜக ஊடகங்களிலும், வாட்ஸாப்களிலும் பொய்ப்பிரசாரம் செய்வதுடன் நின்று விடவில்லை. அடுத்தகட்டமாக போராட்டம் என்ற பெயரில் மதவெறியைத் தூண்டி கலவரம் செய்யும் வேலையை பாஜக தொடங்கி உள்ளது. கோவையிலும், நீலகிரியிலும் தொடர்ந்து போராட்டம் கடையடைப்பு நடத்தி வருகின்றனர். கடைகளை அடைக்க மறுப்பவர்களை பாஜகவினர் மிரட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

கோவையில் கலவரத்தை தூண்டக் கூடிய வகையிலும், மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் அம்மாவட்ட பாஜக தலைவர் பேசியுள்ளார். ஆ.ராசா கோவையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் போலீசால் கைது செய்யப்பட்ட உடனே பாஜகவினர் கோவை நகரில் கடைகளை அடைக்கச் சொல்லி பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே மதமாற்றம் செய்கிறார்கள், கோவிலை இடிக்கிறார்கள் எனப் பொய்ச் செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் மதப்பிரிவினையைத் தூண்டி வந்த காவிக் கும்பல் தற்போது ஆ.ராசாவின் பேச்சைப் பயன்படுத்தி கலவர சூழலை உருவாக்கப் பார்க்கின்றனர்.

சிறுபான்மையினரையும், முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் தாக்குவதற்கு சிறு காரணங்களைக் கூடப் பெரிதாக்கி வன்முறையில் இறங்க ஆரம்பித்துள்ளனர். கோவை, காரமடையில் ஒரு உணவகத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைத்த காரணத்தினால் அதை பாஜவினர் அடித்து உடைத்துள்ளனர். (https://www.bbc.com/tamil/india-62899345)

 

 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகத்தினர் தந்தைப் பெரியார் பிறந்த தினத்தைக் கொண்டாடச் சென்ற போது அதனை தடுத்து நிறுத்தி தாக்க முற்பட்டனர்.

அதே போன்று உத்தமபாளையத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது அவர்களைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் காவிக் குண்டர்கள் தடுத்து மிரட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தும் அதே யுக்தியைத் தற்போது காவிப் பாசிசக் கும்பல் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தி வருகிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி காவி கார்ப்பரேட் பாசிச ஆட்சியை நிலைநிறுத்தவே இத்தனை பிரயத்தனம் செய்கின்றனர் என்பதை உணர்ந்து அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டியுள்ளது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன