தமிழகம் முழுவதும் கலவரத்தை தூண்டும் நோக்கில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய் – மக்கள் அதிகாரம்.

 

 

வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஊர்வலம் போகும் பாதை குறித்து துல்லியமாக தெரிவிப்பதுடன், ஊர்வலத்தில் கோஷங்கள் எதையும் எழுப்பாமல், லத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் கொண்டு வரமாட்டோம் என உறுதியளித்தால், ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக போலீஸார் கூறியதை அடுத்தே உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை வழங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்தும், அது நடத்தும் ஊர்வலங்களின் நோக்கம் குறித்தும் பரிசீலிக்கப்படாமலேயே இந்த வழக்கு நடத்தப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது மதவெறியைத் தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இதுதான் காந்தியைத் திட்டமிட்டு படுகொலை செய்தது. இன்றைக்கும் காந்தியைக் கொன்ற கோட்சேவைத் தியாகி என இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். காந்தியைக் கொன்றதற்காக 1948லும், பின்னர் எமர்ஜென்சி காலத்தில் 1975லும், பாபர் மசூதியை இடித்த காரணத்திற்காக 1992லும் என மூன்று முறை தனது மதவெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

1992ல் நீதிமன்ற அனுமதியுடன் நடந்த ஊர்வலத்தைப் பயன்படுத்திக் கொண்டே தான் இவர்கள் பாபர் மசூதியை இடித்து மிகப்பெரிய மதக்கலவரத்தைத் தொடங்கிவைத்தனர். அதுமட்டுமன்றி இவர்களும் இவர்களுடைய பதிலி அமைப்புகளும் நாடு முழுவதும் சிறுபான்மையினத்தவரைக் குறிவைத்து பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு, நாண்டெட் நகரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்து அதற்கு முன்னரும் பின்னரும் மராட்டிய மாநிலத்திலேயே ரெஹமத் நகர், சித்தார்த் நகர், ஜால்னா நகர், ஐதராபாத்தில் இரண்டு மசூதிகளில் நடந்த குண்டுவெடிப்பு என அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பே பின்னிருந்து திட்டமிட்டு நடத்தியுள்ளது,

நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுப்பதற்கும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக, அந்த அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியராக இருந்த யஷ்வந்த் ஷிண்டே என்பவர் சமீபத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், பத்திரிக்கையாளர்களையும் கூட இவர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளனர். நரேந்தர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை இவர்களும் இவர்களது பதிலி அமைப்புகளுமே திட்டமிட்டு கொன்றனர்.

அப்பாவி இந்து இளைஞர்களை, மதத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் மூளைச் சலவை செய்து, ஷாகா என்ற பெயரில் பயிற்சி அளித்து, சிறுபான்மையியனத்தவருக்கு எதிராக வெறியூட்டி இதுபோன்ற நடவடிக்கைளில் இறக்கிவிடுகின்ற்னர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆள்சேர்க்கும் நோக்கத்திற்காகத் தான் இந்த ஊர்வலத்தையே நடத்துகிறது.

தற்போது விஜயதசமியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தைப் பயன்படுத்தி குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்டு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தில்லி என ஆறு மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தை ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பதிலி அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தியுள்ளன. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டனர்.

எனவே, சிறுபாண்மையினருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டி விடுவதற்காகவும், தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் இந்த ஊர்வலத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தைக் கலவரக்காடாக மாற்றும் அதன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கோருகிறது.

தோழமையுடன்
முத்துக்குமார்,
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
97901 38614

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன