அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மேல் இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. முதலாளிகளின் நலனுக்காக மக்கள் உண்ணும் அரிசிக்கும், குடிக்கும் தேநீருக்கும் கூட வரி போட்டு கொள்ளையடிக்கும் அதேசமயம் சாதாரண மக்கள் சரிவிகித உணவு இல்லாமல் பாதிக்கப்படும் போது அந்த கவலையை மறக்க பஜனை பாடுங்கள் எனக் கூறும் வக்கிர புத்தி கொண்டதாக இந்த காவி பாசிச கும்பல் உள்ளது.  

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது என்று பெருமைக் கொள்கின்றன ஆளும் வர்க்க அறிவு அடிமைகளான நடுப்பக்க நாட்டாமைகள்.   

துறைமுகம், விமானநிலையம், நிலக்கரி, டேட்டாசென்டர்ஸ், எஃப்.எம்.சி.ஜி. (FMCG), சிமென்ட் உற்பத்தி, மின்சார உற்பத்தி/விநியோகம், டோடல்காஸ் விநியோகம், தொலைத்தொடர்பு, அலுமினியம், பத்திரிக்கைத் துறை என அதானியின் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மோடியினுடைய எட்டாண்டு  கால ஆட்சியில் தான் அதானி குழுமம் அசுரவேக வளர்ச்சியை கண்டுள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. இதனால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அதானியின் சொத்துமதிப்பு 1083 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 

 

கொரோனா பாதிப்படைந்து பெரும்பான்மை மக்கள் உணவிற்கும் மருத்துவத்திற்கும் அல்லாடிய காலத்தில் தான் அதானியின் சொத்து மதிப்பு 8.72 லட்சம் கோடி அதிகரித்து அவர் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.    

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரித்ததே அதானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என முதலாளித்துவ பத்திரிக்கைகள் எழுதுகின்றன. மோடி அரசு அறிவிக்கின்ற திட்டங்களுக்கு ஏற்ப தனது தொழில் திட்டத்தை அமைத்துக் கொள்வதும் ஒன்றிய அரசின் ஆதரவுடன் கூடிய பொதுத்துறை வங்கிகளின் ஒத்துழைப்புமே அதானி குழும வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது.

உதாரணமாக, அரசு-தனியார் கூட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் எட்டு சர்வதேச விமான நிலையங்களில் ஏழு விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் எவ்வித முன்னனுபவமும் இல்லாத அதானி குழுமத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஏலத்தின் இறுதியில் விதிகளை மாற்றியது மோடி அரசு. நவிமும்பை விமான நிலையம் கட்டுவதற்காக அதானிக் குழுமம் வாங்கியுள்ள 12770 கோடி கடனுக்கு SBI முன் ஜாமின் கொடுத்துள்ளது.  

கடந்த மாதம் க்ரிடிட்சைட்ஸ் நிறுவனம், அதானி குழுமம் வருவாய்க்கு மீறி அதிக கடன் வாங்கியுள்ளதாகவும் (Over Leveraged) அதனால் கடன் நெருக்கடியில் சிக்க வாய்ப்புளதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதானியின் கடன் 2016ல் 1 லட்சம் கோடியாக இருந்தது. அக்கடன் 2022ல் 2.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 2022 நிதியாண்டில் அக்குழுமத்தின் வருவாய் 33000 கோடி மட்டுமே. அதானி குழுமத்தின் கடன்-வருவாய் விகிதம் 6.6 சதவிகிதமாக உள்ளது.

இந்திய பெருமுதலாளிகளில் அதானி குழுமத்திற்குத்தான் கடன்-வருவாய் விகிதம் அதிகமாக உள்ளது. வருவாய் குறைவாக இருப்பினும், மோடி அரசோடு மிக நெருக்கமாக இருப்பதினால் அதிகளவு கடன்களை இந்திய வங்கிகளிடமிருந்தும் வெளிநாடுகளிடமிருந்தும் தடைகளின்றி அதானி குழுமம் பெற முடிவதாக  க்ரிடிட்சைட்ஸ் அறிக்கை கூறுகிறது.    

மோடியின் பொருளாதரக் கொள்கையே அதானி-அம்பானி உள்ளிடட ஒரு சில குஜராத்தி-பனியா முதலாளிகளுக்கு முன்னுரிமை தருவதாகவே உள்ளது. இதனால்  அச்சிறு கூட்டம் கடந்த எட்டாண்டுகளில் அபரீத வளர்ச்சியை கண்டுள்ளது. நிதி ஆயோக்கின் முன்னாள் செயல் தலைவர் அமிதாப்காந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது “….. இந்தியாவில் அதிகமான ஜனநாயம் இருப்பதினால் (பொருளாதார) சீர்திருத்தங்களைச் செய்யமுடியவில்லை ………இந்தியாவில் முதன்முறையாக ஒரு அரசாங்கம் அளவு மற்றும் அளவின் அடிப்படையில் பெரியதாக யோசித்து, உலக சாம்பியன்களை உருவாக்க விரும்புகிறது. உலகளாவிய சாம்பியனாக இருக்க விரும்பும் ஐந்து நிறுவனங்களை நாங்கள் ஆதரிக்க விரும்புகிறோம் என்று சொல்லும் அரசியல் விருப்பமும் தைரியமும் யாருக்கும் இல்லை…. நான் இந்தியாவில் உள்ள அனைவரையும் ஆதரிக்க விரும்புகிறேன், அனைவரிடமிருந்தும் வாக்குகளைப் பெற விரும்புகிறேன் என்றுதான் எல்லோரும் சொல்வலுகின்றனர்……..” என்றார். அமிதாப் காந்த் கூறுகின்ற ஐந்து சாம்பியங்களில் இருவர் அதானியும் அம்பானியும் என்பது சொல்லாமல் விளங்கும்.   

 

 

முதலாளிகளில் ஒரு சிறு கூட்டத்துடன் மிகுந்த அனுசரனையாக இருக்கும் மோடி அரசு மக்களின் நலங்களைப் பற்றி பேசும் போது  பாகற்காயை கடித்தது போல முகம் சுழிக்கிறது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாகுறுதிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது என்று பேசுகிறர் மோடி. கடந்த மாத மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, பஜனை செய்வதும் பக்திப் பாடல் பாடுவதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வலியை போக்க உதவும் என்ற தனது அறிய கண்டுபிடிப்பை மக்களுக்கு யோசனையாக வழங்கியுள்ளார்.  

NFHS-5 கணக்கின் படி, இந்தியவிலுள்ள குழந்தைகளில் 35% க்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 32.5% குழந்தைகள் எடை குறைவாகவும் உள்ளனர். மோடி ஆட்சியில், மொத்த மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களின் அளவு 14.9%லிருந்து 15.5% மாக அதரித்துள்ளது. இதன்படி, உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மேல் இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது.

முதலாளிகளின் நலனுக்காக மக்கள் உண்ணும் அரிசிக்கும், குடிக்கும் தேநீருக்கும் கூட வரி போட்டு கொள்ளையடிக்கும் அதேசமயம் சாதாரண மக்கள் சரிவிகித உணவு இல்லாமல் பாதிக்கப்படும் போது அந்த கவலையை மறக்க பஜனை பாடுங்கள் எனக் கூறும் வக்கிர புத்தி கொண்டதாக இந்த காவி பாசிச கும்பல் உள்ளது.  

 

 

அதானி-அம்பானி உலகின் பெரும் பணக்காரனானதோ, ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல் விட்டதோ, இந்தியப் பொருளாதாரம் இங்கிலாந்தை விட முன்னுக்கு வந்ததோ, 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதிலோ முதலாளிக்குத்தான் வளர்ச்சியேயொழிய நமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. நமக்குத் தேவையெல்லாம் சமூக பாதுகாப்பு, வேலை, தரமான இலவச கல்வி மற்றும் மருத்துவம், சத்தான உணவு ஆகியவை. இந்த பாசிஸ்ட்களை வீழ்த்தாமல் அவை நமக்கு கிடைக்கப்போவதில்லை.  

அழகு    

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன