மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு வகையில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று இந்துக் கோவில்கள் தமிழக அரசால் தொடர்ந்து இடிக்கப்படுகிறது என்ற பிரச்சாரம், மற்றொன்று கிறிஸ்தவ மிஷனரிகளின், இஸ்லாமியர்களின் மதமாற்ற முயற்சிகள் குறித்த வதந்திகள்.

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப் பரிவாரக் கும்பல், அதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை விதைக்கப் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி வருகின்றது.

சமூக ஊடக வெளியில், அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்களை லட்சக்கணக்கில் உருவாக்கி அதன்மூலம் வதந்திகளைப் பரப்புவது அவர்களது முக்கியமான யுக்தி. 2014 வரை பாஜகவிற்குக் கிளைகள் கூட இல்லாத திரிபுரா போன்ற பல மாநிலங்களில் இன்று பாஜகவை ஆட்சியில் அமரவைத்திருப்பதற்கு இந்த வாட்ஸ்அப் வதந்திகள் பெரும்பங்கு வகித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு வகையில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று இந்துக் கோவில்கள் தமிழக அரசால் தொடர்ந்து இடிக்கப்படுகிறது என்ற பிரச்சாரம், மற்றொன்று கிறிஸ்தவ மிஷனரிகளின், இஸ்லாமியர்களின் மதமாற்ற முயற்சிகள் குறித்த வதந்திகள். இதுகுறித்து சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். 

கோவை அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தருவதற்காக 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, கோவை மாநகராட்சி இடித்து தள்ளிவிட்டதாக ஒரு வீடியோ வலம் வருகிறது.

கோவிலுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் தனது குடியிருப்பின் வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் வேண்டும் அதற்காக கோவிலை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாகவும், அதில் கோவில் சார்பாக யாரும் ஆஜராகாததால் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், உடனடியாக மாநகராட்சி அலுவலர்கள் போலீசின் துணையுடன் கோவிலை இடித்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தினமும் வந்து போகும் கோவில் இடிக்கப்படுவது கண்டு அப்பகுதியில் வாழும் பெண்கள் கதறி அழுததாகவும் வீடியோவில் கூறப்படுகிறது.

இது குறித்து சற்றுவிரிவாகத் தேடினால் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். முதலில், அந்தக் கோவில் இடிக்கப்படவே இல்லை. கோவிலின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, கோவிலை இடிக்க வேண்டும் என யாரும் புகார் கொடுக்கவில்லை, நீதிமன்றமும் குறிப்பாக கோவிலை இடிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர், அந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றுதான் வழக்குத் தொடுத்துள்ளார். நீதிமன்றமும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா?
வைரல் செய்தியின் உண்மை நிலை என்ன?

அதனடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், முதலில் கோவிலை இடிக்க வந்துள்ளனர். இதர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் முதலில் கோவிலை இடிக்க வந்ததுக்குப் பின்னால் அதிகாரிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே கூட்டு இருப்பதாகவே தெரிகிறது. எனவே தான் சொல்லி வைத்தது போல பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கும்பல் அங்கே திரண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பிருப்பதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாமல் மாநகராட்சி நிறுத்திவைத்துள்ளது.

மொத்தத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள ஆக்கிரமிப்பாளர்களைக் காப்பாற்ற மாநகராட்சியும், காவிக் கும்பலும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் இந்தக் கோவில் இடிப்பு. இந்த உண்மையை மறைத்துவிட்டு சிவன் கோவிலை இடித்துவிட்டார்கள் என பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதே போன்று மற்றொரு பொய்ப்பிரச்சாரமும் கோவை பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள காடுவெட்டிபாளையம் என்ற ஊரில், மதப் பிரச்சாரம் செய்யக் கூடாது மதக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என எச்சரித்து பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனைப் புகைப்படமாக எடுத்து இதே போல மற்ற பகுதிகளிலும் செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சமீபத்தில் கோவைப் பகுதியில் மதமாற்றம் செய்ய வருகிறார்கள் எனக் கூறி கிறித்தவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆகஸ்டு மாதம் 7ம் தேதியன்று கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில், மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மூன்று கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். அதன் பிறகு 14ம் தேதியன்று சூலூர் பகுதியில் அப்பநாயக்கன்பட்டியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட கிறித்தவர்களை மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி பாஜக மற்றும் இந்து முன்னணியினர் சிறை பிடித்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது இப்படியொரு எச்சரிக்கை பேனரை வைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது கிறிஸ்தவர்கள் பைபில் புத்தகத்துடன் தெருவில் நடந்து சென்றால், அல்லது கூட்டமாக வாகனத்தில் சென்றால் கூட மதமாற்றம் செய்ய வந்துவிட்டார்கள் எனக் கூறி வாட்ஸ்அப்பில் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது இந்தக் காவிக் கும்பல்.

இந்து மதம் என்பது அடிப்படையிலேயே, இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் போல பரப்பப்படக் கூடிய மிஷனரி மதம் அல்ல. அம்பேத்கர் கூறியது போல, எப்போது இந்து மதம் பிறப்பால் ஒருவரின் சாதியைத் தீர்மானிக்கும் வர்ணாஸ்ரம தர்மத்தினை மதத்தின் அடிப்படையாக ஏற்றுக் கொண்டதன் காரணமாக பிற மதத்தினரிடம் பரப்பப்படக் கூடிய மிஷனரி தன்மையை அது இழந்துவிட்டது. ஒரு புதிய நபரை இந்து மதத்தில் சேர்க்க வேண்டும் என்றால் அவர் ஏதாவது ஒரு சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் வரை இந்து மதத்தில் யாரையும் புதிதாக வெளியிலிருந்து கொண்டு வந்து இணைக்க முடியாது.

அதே சமயம், இன்னொரு புறம் இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க மக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே மதநம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவது நீடிக்கும்வரை இந்துமதம் மற்ற மதங்களால் விழுங்கப்படுவதைத் தடுக்க முடியாது.

ஆகையால் இந்து மதம் அழிவதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் முதலில் அதற்கு மூல காரணமான சாதியை ஒழிப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அதைவிடுத்து இந்த சங்கப்பரிவார கும்பல், இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று கூக்குரலிடுகிறது. இவர்கள் போடும் இந்த வேசங்கள் எல்லாம் சிறுபான்மையினர் குறித்து பீதியூட்டி மக்களைப் பிளவுபடுத்தி, தங்களது பாசிச சித்தாந்தத்தை விதைப்பதற்கேயொழிய மதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அல்ல.

காவி பாசிச கும்பலின் இந்த விஷப்பிரச்சாரம் கோவையுடன் நிற்கப்போவதில்லை, தமிழகம் முழுவதும் தனது பிரிவினை வேலையை இந்தக் கும்பல் தொடர்ந்து கொண்டு செல்கிறது. இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, காவிக் கும்பலைத் தனிமைப்படுத்துவதுதான் தற்போது ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் முக்கிய கடமையாகும்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன