இந்துராஷ்டிரத்திற்குள் பழங்குடியினரை இழுக்கும் பாசக் கயிறு.

இந்தியாவின் 15வது அரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ளார். அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஆரம்பத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது. முர்முவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒத்த கருத்தை உருவாக்கிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தீவிரமாக வேலை செய்தார்.

 

ஆனால் மராட்டிய மாநிலத்தில் 50கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்கி உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்ததுடன் அரசுத் தலைவர் தேர்தல் வெற்றியையும் பாஜக உறுதி செய்தது. இவ்வாறு எம்.எல்.ஏ.க்களை காசு கொடுத்து வாங்கும் குதிரை பேரத்தின் மூலம் அடைந்த வெற்றியை, வரலாற்று வெற்றியாகப் புலங்காகிகதம் அடைந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏதோவொரு மூலையில், அரசுத்தலைவர் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் மத்தியிலிருந்து ஓருவரை அரசுத் தலைவராக தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம், வாய்ச்சவடால் அடிக்கும் மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல், பாஜக பழங்குடியின மக்களுக்கு அதிகாரமளிப்பதில் உறுதியாக இருப்பதை நிலைநாட்டியுள்ளது”  எனக் கூறியுள்ளார்.

அமித்ஷா கூறியபடி பழங்குடியினர் நலனில் பாஜக அக்கறையோடு இருக்கிறதா என்று பார்த்தால், உண்மை என்பது அதற்கு நேரெதிராக இருக்கிறது. பாஜக ஆட்சியில் இருக்கும் கடந்த 8 ஆண்டுகளில்தான் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தின் காடுகள் அழிக்கப்பட்டு, பல்லாயிரம் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அங்கே காவிகளின் நண்பர் அதானியின் நிலக்கரிச் சுரங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிராக போராடும் பழங்குடியினரை துணை இராணுவப் படைகளைக் கொண்டு ஒடுக்குவதும், மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனநாயக அமைப்பின் உச்சியில் கொண்டு வைத்திருப்பதாக இவர்கள் பீற்றிக் கொண்டிருக்கும் இதே வேலையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பழங்குடி மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

 

அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்க்குடியினருக்கு நீதி வேண்டி பஸ்தாரில் ஓராண்டாக தொடரும் பழங்குடியினர் போராட்டம்
அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கு நீதி வேண்டி பஸ்தாரில் ஓராண்டாக தொடரும் பழங்குடியினர் போராட்டம்

 

இது தவிர நதிகள் இணைப்பு, அணை கட்டுவது போன்ற காரணங்களைக் கூறி பழங்குடியினரை அவர்களது வாழ்விடத்திலிருந்து பிடுங்கி எறியும் அரசின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக குஜராத், ஜார்க்கண்டு, ஒரிசா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இன்று பழங்குடியினர் நண்பனாக நடிக்கும் இதே பாஜக அரசுதான் பழங்குடியினரின் உரிமைக்காக போராடிய சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமியைப், பொய் வழக்கில் கைது செய்து, போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்காமல், சித்ரவதை செய்து அரச பயங்கரவாதத்தை ஏவி படுகொலை செய்தது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்த காவி கும்பல் முர்முவை அரசுத் தலைவராக்குவதன் நோக்கம் என்ன? அதனை முர்முவே வெளிப்படுத்திவிட்டார். அரசுத் தலைவர் தேர்தலுக்கு அவர் பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளேயே, இயற்கையை வழிபடும் சந்தால் பழங்குடியினத்தை சேர்ந்த முர்மு, கையில் துடைப்பத்துடன் இந்துக் கோவில் ஒன்றைச் சுத்தம் செய்யும் புகைப்படத்துடன், தனது சனாதன தர்ம விசுவாசத்தைக் காட்டினார்.

 

இந்த நாட்டில் வாழ்பவர் அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் “இந்திய தேச”மாக அமைகின்றனர் என்பது பிராந்திய அடிப்படையிலான தேசம். ஆனால் இந்து உணர்வு, நாகரிகம், பண்பாட்டை ஏற்று வாழ்பவர்கள் மட்டுமே “இந்திய தேச”மாக அமைகின்றனர் என்பது கலாச்சார அதாவது மத அடிப்படையிலான தேசம். இவற்றில் இரண்டாவதுதான் “இந்திய தேச”மாக இருக்க முடியும், இதுதான் இந்து ராஷ்டிரம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ன் சித்தாந்தம். இதுவே ஆர்.எஸ்.எஸ்ன் சித்தாந்த குரு சாவர்க்கர், நிறுவனகுரு ஹெட்கேவரின் கருத்தாக இருந்தது. இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் பாஜக இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

பழங்குடியினரின் பல்வேறு தலைவர்களும், அமைப்புகளும், பழங்குடியினராகிய நாங்கள் இந்துக்கள் அல்ல, இந்துக்களாகவும் மாட்டோம் என்றும், வருகின்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது எங்களை “சர்னா தர்மம்” என்ற தனி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். சென்ற ஆண்டு இதை ஜார்கண்டு மாநில முதல்வர் ஹேமந் சோரனும் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய தனது உறையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான மக்கள் கிருத்துவமதத்திற்கு மாறியுள்ளதை சங்க பரிவார கும்பலால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இவற்றையெல்லாம் கண்டஞ்சிக் கொண்டிருக்கிறது சங்பரிவார் கும்பல்.

அதேபோல் பழங்குடியினர் அதிகமாக உள்ள சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில், கிருத்துவ அமைப்புகள் மிகச் சிலவே இருந்த போதிலும், பெரும்பான்மை பழங்குடியின மக்கள் கிருத்துவ மதத்திற்கு மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தில், வனவாசி கல்யான் ஆஷ்ரம் மூலம் கிருத்துவ மதமாற்றத்திற்கு எதிராக வேலை செய்துகொண்டுள்ளது.

சங் பரிவாரக் கும்பல் இம்மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளைத் தாக்குவது, கிருத்துவ அமைப்புகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுது என தனது வெறியாட்டத்தை அவ்வப்போது நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது. “பழங்குடிகளின் தெய்வங்கள் இருப்பது இந்துக் கோவில்களிலே, பழங்குடிகளும் இந்துக்களே” என தனது பிரச்சாரத்தையும் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

தனது இந்துராஷ்டிர கனவிற்கு பழங்குடி இனத்தவரையும் இணைக்கும் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் “பாஜகவால் புடம்போடப்பட்ட பழங்குடியின இந்து” ஒருவர் தேவை. அவர் தான் சந்தால் இன பழங்குடியிலிருந்த வந்த திரெளபதி முர்மு. இதைத் தாண்டி இந்த காவி கும்பலுக்கு பழங்குடியினர் நலனில் அக்கறை ஒன்றும் இல்லை.

அதேசமயம் எந்த காரியத்தைச் செய்தாலும் தங்களது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளை காவிகள் என்றும் மறக்கமாட்டார்கள். முர்முவை அரசுத் தலைவராக்கியதன் பின்னணியில் காவிகளின் நோக்கம் மட்டுமன்றி, கார்ப்பரேட்டுகளின் நலனும் அடங்கியிருக்கிறது.

இதனை கடந்த ஜூன் 25 எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த கட்டுரை தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதில் அரசுத் தலைவராக முர்முவை தேர்வு செய்வது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பழங்குடியினரின் போராட்டங்களை, தீவிரத்தைக் குறைக்க உதவும் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பாஜகவில் ஆயிரம் தலைவர்கள் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பதாக சிலாகித்தார்கள், ஆனால் அவர் அரசுத் தலைவராக இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் நிகழ்ந்து விட்டது. இன்றைக்கு முர்முவின் தேர்வும் பழங்குடியினரின் வாழ்க்கையில் மாற்ற எதையும் கொண்டுவரப் போவதில்லை.

இயற்கை வழிபாட்டை மையமாகக் கொண்ட தங்களது மதத்தையும், தங்களது வாழ்வின் ஆதாரமாக உள்ள இயற்கையின் வளங்களையும் சூறையாட வரும் இந்த காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிரான தங்களது போராட்டத்தின் மூலமாக மட்டுமே பழங்குடியினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன