SIR என்ற பெயரில் NRC-யைத் திணிக்கும்
காவி-பாசிசக் கும்பல்

ஒருவர் வாக்களிக்கத் தகுதியானவரா என்பதை சரிபார்ப்பதற்கு, வழமையாக கேட்கப்படும் ஆவணங்களை SIR-இல் கேட்கவில்லை. மாறாக, ஒருவரின் குடியுரிமையை சரிபார்ப்பதற்காக தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் (NRC-இல்) சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி அதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். எனவேதான் இதை வழமையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கிடையாது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பலால் அமல்படுத்தப்பட்டு வரும் குடியுரிமை நீக்க நடவடிக்கை என்கிறோம்.

உத்தம் குமார் பிரஜ்பாசி மேற்கு வங்க மாநிலத்தின் கூஜ் பெஹார் மாவட்டத்தில் உள்ள சதியார் குதிர் கிராமத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் ஒரு சாதாரண விவசாயி. இயல்பாக சென்று கொண்டிருந்த உத்தம் குமாரின் வாழ்க்கை, அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின் குடியுரிமையை பற்றி விசாரிக்க கூடிய வெளிநாட்டவர்களுக்கான  தீர்ப்பாயத்திலிருந்து (Foreigners Tribunal) வந்த நோட்டீசால் நிலை குலைந்து போனது.

அஸ்ஸாம் எல்லையைக் கடந்து, சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்ததாகவும் ஜனவரி 1966-இல் இருந்து மார்ச் 1974 வரை சட்ட விரோதமாக அஸ்ஸாமில் தங்கியிருந்ததாகவும் மேலும் தனது இந்திய குடியுரிமையை நிருபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் சொல்லப்பட்டிருந்தது.  சரியாக எழுதப் படிக்கக்கூடத் தெரியாத உத்தம் குமாருக்கு பிரச்சனை என்ன என்று புரிந்து கொள்வதற்கே சில நாட்கள் ஆகிவிட்டது. பின்னர் ஒரு வழக்குரைஞர் மூலம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகும் ஜனவரி 1966-இல் இருந்து மார்ச் 1974 வரைக்கும் இடைப்பட்ட தேர்தலில் உத்தம் குமாரின் தந்தை வாக்களித்ததற்கான ஆதாரத்தை கேட்டிருக்கிறது அஸ்ஸாமின் வெளிநாட்டவர்களுக்கான  தீர்ப்பாயம். 

நான் அஸ்ஸாமே சென்றதில்லை என்கிறார் உத்தம் குமார். ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளாக மேற்கு வங்கத்தின் சதியார் குதிர் கிராமத்தில் வசித்து வருவதாகக் கூறும் உத்தம், தனது தந்தை 1978-இல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று சதியார் குதிர் கிராமத்தை உள்ளடக்கிய சௌதுர்யாத் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இருப்பினும் அவரை இந்தியர் என்று ஒத்துக்கொள்ள மறுக்கும் பாஜக பாசிச கும்பல்  அவரை வங்கதேச எல்லையில் விட்டுவரத் துடிக்கிறது.

மேற்கு வங்கத்தில் பல தலைமுறைகளாக வசிக்கும் ஒருவரை “அகதி” என்று அஸ்ஸாம்  அரசாங்கம் முத்திரைக் குத்தி நாடு கடத்த துடிப்பது ஏன்? ஒருவர் தன்னை  இந்தியர் என்பதை நிருபிக்க அறுபது வருடங்களுக்கு முன் நடந்த தேர்தலில் அவரது தந்தை ஓட்டளித்ததர்கான ஆதாரத்தைக் கேட்பது அறிவுக்குட்பட்ட செயலா? ஆனால் இதைதான் சட்டமாக்கி அமல்படுத்தி வருகிறது ஆளும் பாஜக அரசாங்கங்கள்.

இது, அசாமில் அமல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினால் நேர்ந்த சோகம். இது வெறும் உத்தம் குமாருக்கு மட்டும் நடந்தது அல்ல, இவரை போலவே பல அப்பாவி கிராமப்புற ஏழை மக்கள் தாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் (இந்தியர்) என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இயலாத காரணத்தினால், சட்டவிரோத குடியேறி என முத்திரைக்குத்தி அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றி வருகிறது பாசிச மோடி அரசாங்கம்.

* * * * * * * * * *

அசாமில் அமல்படுத்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டை, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த 2019-இல் CAA-NRC சட்டத்தினை கொண்டு வந்தது மோடி கும்பல். அச்சட்டத்திற்கெதிராக நடந்த கடுமையான போராட்டத்தின் விளைவாக அதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தது. தற்போது மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நேரடியாக அமல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்பு வரும் என்று முன்னுணர்ந்த மோடி தலைமையிலான மக்கள் விரோத கும்பல், தேர்தல் ஆணையத்தின் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision-SIR) என்ற போர்வையில் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள மக்களின் குடியுரிமையை சோதித்தறிவதற்கான திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

தற்போது தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வரும் SIR-இன் உள்ளடக்கமே NRC தான் என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர். SIR என்பது, ஏழைகள், சிறுபான்மையினர், காவி-பாசிசக் கொள்கைக்கு எதிரானவர்கள் என அனைவரையும் இந்திய குடியுரிமையிலிருந்து விலக்கி வைக்க மோடி அரசாங்கம் அரங்கேற்றி வரும் மறைமுக சதித் திட்டம் என்றால் அது மிகையல்ல.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். அது வாக்காளர்களின் பொறுப்பு கிடையாது. முந்தைய காலங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் திருத்தங்கள் மற்றும் தீவிரத் திருத்தங்களின் போது வாக்காளர் சேர்ப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகத்தான் இருந்தது. கடைசியாக 2003-இல் வெளியிடப்பட்ட SIR-இன் வழிகாட்டுதலில் கூட மேற்சொன்னவாறுதான் வழிகாட்டப்பட்டிருந்தது.

2003-இல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடும்பத்திலுள்ளவர்களின் விவரங்களை படிவத்தில் நிரப்ப வேண்டும். அதாவது, கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தகுதியான வாக்காளர்களைத் தேடிச் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். 2003-இல் பின்பற்றப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே தற்போதைய SIR நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியது.

ஆனால் அதற்கு நேரெதிராக, தற்போதைய SIR-இல், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்க்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது. வாக்குச்சாடி மட்ட அதிகாரிகள் (BLO-க்கள்) ஒவ்வொரு வீடாக படிவத்தைக் கொடுப்பார்கள். அப்படிவத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் தேவையான ஆவணங்களுடன் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் அக்குறிப்பிட்ட நபர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார். இதன் மூலம் ஒருவரின் வாக்குரிமையை நிறுபிக்க வேண்டியது வாக்களரின் பொறுப்பேயன்றி தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு கிடையாது என்கிறது தேர்தல் ஆணையம்.

2003 வழிகாட்டுதல்களின்படி, “ஒரு தனிநபரின் குடியுரிமையை தீர்மானிப்பது BLO- க்கள் வேலை அல்ல. இருப்பினும், வாக்காளர்களின் வயது அல்லது வசிப்பிடம் தொடர்பாக தவறுகள் இருப்பின் எந்தவொரு நபரையும் பட்டியலில் இருந்து நீக்கும் அதிகாரம் BLO-க்களுக்கு உண்டு. அதேவேளையில், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அல்லது கல்லூரிச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஞானஸ்நானச் சான்றிதழ் மட்டும் கொண்டு வயதை சரிபார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இன்னும் பிற சான்றிதழ்களைக் கொண்டும் வயதைச் சரிபார்க்கலாம்” என்கிறது.

அதாவது தற்போதைய SIR-இல் ஒருவர் வாக்களிப்பதற்கு தகுதியானவரா இல்லையா என்று நேரடியாக சோதித்தறிவதற்கு பதிலாக, முதலில் அந்த நபரின்  குடியுரிமையை நிறுபிப்பதற்கான ஆதாரங்களை சரிபார்த்து அவரின் குடியுரிமை நிறுபிக்கப்பட்ட பிறகு அதனடிப்படையில் அவரின் வாக்காளர் தகுதி முடிவு செய்யப்படும் என்கிறது தேர்தல் ஆணையம்.

அவ்வாறு அந்த நபர் தனது வாக்குரிமையை நிறுபிக்க தவறும் பட்சத்தில் அவர் தனது வாக்குரிமையை இழப்பதோடு சட்டவிரோதக் குடியேறியாக அறிவிக்கப்படுவார். புதிய விதிகளின் படி, வெளிநாட்டவராக சந்தேகிக்கப்படுபவரின் வழக்கை, குடியுரிமைச் சட்டம், 1955-இன் கீழ், தகுதிவாய்ந்த அதிகாரியிடம் அனுப்புவதற்கான அதிகாரம் தேர்தல் பதிவு அதிகாரிகள் அல்லது ERO-க்களுக்கு உண்டு என்கிறது தேர்தல் ஆணையம்.

உதாரணமாக, தற்போது அறிவித்துள்ள SIR-இல், குடியுரிமையை நிரூபிப்பதற்காக பள்ளி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், முந்தைய தேர்தல்களில் ஓட்டளித்ததற்கான சான்றுகள், இருப்பிடச் சான்றிதழ் என 11 ஆவணங்களை கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை குடியுரிமைக்கான ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

SIR படிவத்தோடு மேற்சொன்ன தேவைப்படும் ஆவணத்தை ஒருவர் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் அவர் தனது வாக்களிப்பதற்கான உரிமையை இழப்பதோடு அந்த நபர் சட்டவிரோத குடியேறியாகக் குற்றம் சுமத்தப்பட்டு அந்த நபரின் தகவல்கள் உள்துறை அமைச்சகத்திடமோ அல்லது  சட்டவிரோத குடியேறிகளைக் குறித்து விசாரிக்கும் ஆணையத்திடமோ ஒப்படைக்கப்படும்.

ஏறத்தாழ உத்தம் குமாருக்கு நடந்ததும் இதேதான். ஒரே வேறுபாடு என்னவென்றால், அஸ்ஸாமில் வெளிப்படையாக அமல்படுத்தப்பட்ட NRC-யினால்  உத்தம் குமார் பாதிக்கப்பட்டார். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலோ, தேர்தல் ஆணையம் மூலமாக SIR என்ற போர்வையில் குடியுரிமை சோதிக்கப்படுகிறது. எனவே தான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் SIR-ஐ வாக்காளர் சரிபார்ப்பு என்ற போர்வையில் நடந்து வரும் குடியுரிமை பரிசோதனை, அதாவது NRC என்கிறோம்.

பீகாரில் அமல்படுத்தப்பட்ட SIR-இல் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் 500 சட்டவிரோதக் குடியேரிகள் கண்டறிப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் யாரை நீக்கினோம் யார் சட்டவிரோதக் குடியேறிகள் போன்ற  விவரங்களை இன்றுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான போலி வாக்காளர்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும் தேர்தல் ஆணையம் கேட்கின்ற ஆவணங்களை பீகாரின் ஏழை எளிய மக்களால் கொடுக்க முடியாமல் போனதினாலேயே பீகாரின் ஏழை எளிய பெண்கள், தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக யோகேந்திர யாதவ் கூறுகிறார்.

* * * * * * * * * *

அசாம் மாநிலத்தில் SIR-ஐ அமல்படுத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் தனது சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளது. இதற்கு காரணம், ஏற்கனவே அசாமில் NRC அமல்படுத்தப்பட்டு மக்களுடைய குடியுரிமை பரிசோதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் தன்மையிலான SIR-ஐ அசாமில் அமல்படுத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதற்கு பதிலாக வழமையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முறை மட்டுமே அசாமில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 324, 325 மற்றும் 326-வது பிரிவுகளின்படி, தேர்தல்களை நடத்துவதும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21(3) மற்றும் 1960 தேர்தல் விதிகளின்படி, தகுதியற்றவர்கள், இறந்தவர்கள் அல்லது இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கி, வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டிய கடமை ஆணையத்திற்கு உண்டு.

இதை தேர்தல் ஆணையம் கீழுள்ள இரண்டு செயல்முறைகளின் வழியாக வழக்கமாக செய்துவருகிறது.

  1. சுருக்கமான திருத்தம் (Summary Revision-SR)-இது பொதுவாக தேர்தல்களுக்கு முன்பு நடத்தப்படுவது. இச்செயல் முறையில், 18 வயது நிரம்பியவர்களைச் சேர்ப்பதும், இறந்தவர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதும், இடம் மாறியவர்களின் விவரங்கள் புதுபிக்கப்படுவதும் நடக்கும். இம்முறையில் வாக்காளர் படியலில் வாக்காளரின் பெயரைச் சேர்க்க வேண்டியது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
  2. தீவிர திருத்தம் (Intensive Revision-IR)-இது தேர்தல் என்பதைத் தாண்டி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடந்து நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் முறையாகும். அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள நபர் அந்த குறிப்பிட்ட முகவரியில் இருக்கிறாரா என சரிபார்ப்பதை செய்வர்.

1960 விதிகளில் எந்தவொரு சிறப்பு தீவிர திருத்தத்தையும் (SIR) குறிப்பிடப்படவில்லை. SR மற்றும் IR மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், 2003-ஆம் ஆண்டில் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதற்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவை தொலைந்து விட்டதாக மழுப்பியது. 2003-இல் பீகாரில்  SIR நடத்தியிருந்தால் தானே ஆதாரங்களை கொடுக்க முடியும். தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் சொன்னது அப்பட்டமான பொய் தான். இந்த உண்மை தெரிந்திருந்தும் உச்சநீதிமன்றம் SIR-க்கு தடைவிதிக்கவில்லை. பன்னிரெண்டு  மாநிலங்களில் SIR அறிவித்த போதும் கூட, 1951 முதல் 2003–04 வரை பல SIR நடத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் பொய் சொல்லியது.  

தற்போது அமல்படுத்திவரும் SIR-இல், வாக்காளர் சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கும் ஆவணங்கள் என்பது முன்பு நடைபெற்று வந்த SR மற்றும் IR ஆகியவற்றில் கேட்கப்பட்டிருந்த ஆவணங்கள் அல்ல. மோடி கும்பல் கொண்டுவந்த NRC-இல், குடியுரிமையை நிருபிப்பதற்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்களையே SIR-இல் சமர்பிக்க வேண்டிய ஆவணமாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  1. 1987-க்கு முன் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் இடத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. 1987 முதல் 2004 வரை பிறந்தவர்கள் ஒரு பெற்றோர் இந்தியர் என நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்.
  3. 2004-க்குப் பிறகு பிறந்தவர்கள் இரு பெற்றோருமே இந்தியர் என நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை வாக்களிப்பதற்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான நிபந்தனைகள் அல்ல, குடியுரிமை சரிபார்ப்பதற்கான நிபந்தனைகளாகும். அதாவது NRC-இல் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளாகும். இதைதான் தற்போது SIR-லும் வைத்துள்ளனர். இதற்கான ஆவணங்களையே ஒவ்வொரு வாக்காளரும் சமர்பிக்க வேண்டும். எனவேதான் இதை வழமையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கிடையாது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற போர்வையில் காவி பாசிச கும்பலால் அமல்படுத்தப்பட்டு வரும் குடியுரிமை நீக்க நடவடிக்கை என்கிறோம்.

* * * * ** * * * *

NRC என்பது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுடைய காவி பாசிசமயமாக்கல் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இதை SIR என்ற போர்வையில் மோடி கும்பல் அமல்படுத்தி வருகிறது. இது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி, அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று முத்திரை குத்துவதை வெளிப்படையான நோக்கமாக கொண்டிருந்தாலும் உத்தம் குமாருக்கு நடந்ததைப் போலவே இந்நாட்டின் ஏழை எளிய விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரையும் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இல்லை என்று முத்திரை குத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே பாஜக இதை பயன்படுத்தும். பல தலைமுறைகளாக ஒரே கிராமத்தில் வாழ்ந்து  மற்றவர்களோடு உறவு கொண்டு இந்திய சமூகத்தின் அங்கமாக உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை வாக்களிக்க தகுதி இல்லையென்றும், சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் காவி கும்பல் பொய் சொல்லுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

  • செல்வம்

https://thewire.in/rights/west-bengal-resident-served-foreigner-notice-under-assam-nrc-sparks-political-outcry

https://thewire.in/politics/assam-is-out-of-the-sir-heres-what-you-need-to-know

https://www.telegraphindia.com/opinion/through-the-back-door-election-commission-sir-exercise-in-bihar-is-an-nrc-by-other-means-prnt/cid/2114109#goog_rewarded

https://www.thenewsminute.com/voices/nationwide-sir-is-a-planned-disenfranchisement-of-the-poor-and-minorities

https://timesofindia.indiatimes.com/india/bihar-drive-ec-to-refer-illegals-for-action-under-citizenship-act/articleshow/122135677.cms

https://thewire.in/rights/bring-them-back-first-sc-to-union-govt-over-deportation-of-pregnant-bengal-woman-to-bangladesh

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன