பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு!
புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம்
பத்திரிகை செய்தி
20-08-2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே!
நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த இணைய தளத்தை தொடர்ந்து ஒடுக்கிவருகிறது பாசிச மோடி அரசு.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று கவுகாத்தி கிரைம் பிராஞ் போலிசு தி வயர் ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண்தாப்பர் ஆகியோரை புதிதாக பதியப்பட்ட தேச துரோக வழக்கு ஒன்றில் சம்மன் கொடுத்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைத்துள்ளது. வரவில்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அந்த சம்மன் குறிப்பிடுகிறது.
”அரசியல் அழுத்தம் காரணமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானிடம் நமது போர் விமானங்களை இழந்துள்ளது” என்ற தலைப்பில் கடந்த ஜூன் 28 அன்று தி வயர் இணையதளம் கட்டுரை வெளியிட்டது தொடர்பாக பாஜக நபர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ஜூலை 11 அன்று சித்தார்த் வரதராஜனுக்கு எதிராக தேச துரோக வழக்கு ஒன்றை அசாம், மோரிகான் மாவட்ட போலிசு பதிவு செய்திருந்தது.
இதை எதிர்த்து சித்தார்த் வரதராஜன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட அடிப்படையில் அவரை கைது செய்ய கூடாது என்று இடைக்கால உத்தரவாக உத்தரவிட்ட அன்றே மீண்டும் புதிய தேச துரோக வழக்கு ஒன்றில் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்துள்ளது கவுகாத்தி கிரைம் பிராஞ் போலிசு. ஆனால் எதன் அடிப்படையில் இந்த புதிய வழக்கு போடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்த விவரமும் இல்லாமல் அழைப்பானை கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவையோ அல்லது சட்ட நடைமுறையையோ பின்பற்றாமல் ஒரு பாசிச தாக்குதலாக வரும் இது போன்ற பாசிச நடவடிக்கையை நாம் ஒன்றுபட்டு போராடி முறியடிக்க வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் தேசவெறி, போர் வெறி கூச்சலினூடாக அனைத்து ஜனநாயக குரல்வளைகளையும் நெரிக்கிறது, பாசிச மோடி அரசு. அமெரிக்க அதிபர் ‘ட்ரம்ப்’ தான் போரை நிறுத்தியதாக பல முறை கூறிய பிறகும் இந்தியர்களை கைவிலங்கிட்டு விலங்குகளை போல நடத்திய பிறகும் ரஷ்யாவிடமிருந்து எண்ணைய் வாங்க கூடாது என்று மிரட்டி 50 சதவீதம் வரிவிதித்த பிறகும் நாட்டில் இறையாண்மை இருப்பதாக நாடகம் ஆடுகிறது, பாசிச மோடி அரசு.
காலனி கால சட்டங்களை மாற்றிவிட்டோம் என்று பீற்றிக்கொண்டு மூன்று குற்றவியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த மோடி அரசு பேச்சுரிமையை பறிப்பதோடு அதையே வேறு பெயரில் தேச துரோக வழக்காக மாற்றியுள்ளது.
பல ஊடகங்கள் மோடியின் கோயபல்சு ஊடகங்களாக மாறிவிட்ட நிலையில் தி வயர் போன்ற சில ஊடகங்கள் மட்டுமே உண்மையை மக்கள் நலனிலிருந்து துணிவோடு கொண்டுவரும் நிலையில் இதை ஒடுக்குவதை அனுமதிக்க முடியாது.
இதை ஜனநாயக சக்திகளும் உண்மையான பத்திரகையாளர்களுமாகிய அனைவரும் வன்மையாக கண்டிப்போம்.
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614