உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் பல்வேறு பாடப் பிரிவுகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் முதல் நூறு இடங்களை, மொத்தமாக 146 உயர்கல்வி நிறுவனங்கள், பிடித்துள்ளன என்ற செய்தி பத்திரிக்கைகளில் பரவலாக முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆளுநரின் விமர்சனத்திற்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலினும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் NIRF விவரங்களை கோடிட்டு இது திராவிடமாடல் ஆட்சியின் வெளிப்பாடு என்று கூறியிருந்தனர். இது சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பட்டியலில் முன்னணியில் வந்த 132 கல்லூரிகளில்(14 மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்கள் போக) 66 சதவிகிதக் கல்லூரிகள்(99 கல்லூரிகள்) தனியார் சுயநிதிக் கல்லூரிகள். கலை-அறிவியல் படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு, பல்மருத்துவப் படிப்பு போன்ற பிரிவுகளில் பட்டியலில் வந்த கல்லூரிகளில் 80 சதவிகித கல்லூரிகள் தனியார் சுயநிதிக்கல்லூரிகளே.
NIRF இப்பெருமைகளை சிறிது விலக்கிப்பார்த்தால், இதற்குப் பின்னால் கற்பனை செய்யமுடியாத உழைப்புச்சுரண்டலும் வரைமுறையில்லாத பகற்கொள்ளையும் இருப்பது தெரியவரும். ஏறத்தாழ தனியார் கல்லூரிகளின் வளர்ச்சியையே தமிழக உயர்கல்வியின் வளர்ச்சி (திராவிட மாடலின் விளைவு) என்ற பொருளிலேயே தமிழக முதலமைச்சர் மறைமுகமாக பேசியிருப்பார் போலும்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் இருப்பதும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள்(GFR~46%) உயர்கல்வியில் சேருவதும் உண்மை தான். நூற்றாண்டுகால தமிழக சமூக-அரசியல்-பொருளாதாரச் சூழல்கள் அதற்கு காரணம் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில் 1995க்கு பிறகு, கல்வியில் மிகத்தீவிரமான தனியார்மயத் திணிப்புகளும் அரசுக் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களின் சீரழிவும் அக்கம்பக்கமாக நடந்து வந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடங்களாக தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை (Edutech companies) கல்வித்துறைக்குள் அரசு அனுமதிப்பது அதிகரித்துள்ளது. இத்தனியார் கல்லூரிகள் அனைத்துமே மிகத்தீவிரமாக தேசியக் கல்விக் கொள்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமல்படுத்தி வருபவைதான். இதன் மூலம் காவி-கார்ப்பரேட் ஆதரவு கருத்தியலை மாணவர்களிடம் கடத்துவதற்கான இடைத்தரகர்களாகவும் செயல்படுகின்றனர்.
* * * * * *
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கோவை பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 லிருந்து 12 கிலோ வரை பழைய தங்க நகைகள் விற்கப்படுவதாகவும் ஒரு வாரத்தில்
மட்டும் 6 கோடி அளவிற்கு பழைய நகை வர்த்தகம் நடந்திருப்பதாகவும் இரு வாரங்களுக்கு முன்பு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இது போன்ற நிலையே இருக்கும் என்று ஊகிக்கலாம். பெற்றோர்கள் தங்களது சேமிப்புகளையும் கழுத்தில் காதில் உள்ளதையும் விற்றோ அல்லது அடமானம் வைத்தோ படிக்க வைக்கவேண்டிய சூழலுக்கு அனைத்துக் குடும்பங்களும் ஆளாகியுள்ளன. மேலும் 2017-18 லிருந்து 2021-22 வரையிலான காலப்பகுதியில் 1,634.43 கோடி கல்விக்கடனை தமிழக மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்காக வங்கிகளிலிருந்து வாங்கியிருக்கிறார்கள்.
தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள கல்லூரிகளில் நிர்வாகக் கோட்டாவில் மாணவர்களை சேர்ப்பதற்கும் பல லட்சங்கள் நன்கொடைகள் வசூலிப்பது மிக இயல்பான நடவடிக்கையாக மாறிவிட்டது. தரவரிசையைக் காட்டி இக்கல்லூரிகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதும் அவர்களுக்கு இந்தியாவில் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட மூன்று-நான்கு மடங்கு அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றனர்.
தரவரிசை என்பதே ஒரு பெரிய ஏமாற்று வேலை. உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும் போது இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் மிகவும் பிந்தங்கியுள்ளன என்ற விமர்சனம் பரவலாக இந்திய உயர் மேட்டுக்குடியினரால் முன்வைக்கப்பட்டது. The TIME மற்றும் QS போன்ற தரவரிசை நிறுவனங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் இந்திய பல்கலைக்கழகங்கள் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்ற காரணத்தை ஐ.ஐ.டி. கள் முன்வைத்தன. உடனே இந்தியாவிற்கென்று தனியான ஒரு தரவரிசையை உருவாக்க போகிறோம் என்று மோடி அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 2016 ல் இருந்து NIRF பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களை (அரசோ/தனியாரோ) சந்தையில் போணியாகக்கூடிய ஒரு பண்டமாக ஆக்குவதற்கு தரம் பிரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் இருந்தும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இருந்தும் மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஐ.ஐ.டி.கள், எஸ்ஆர்எம், வி.ஐ.டி, மனிபால், அசோகா, அசிம் பிரேம்ஜி, பிர்லா, தாபர், சாஸ்த்ரா, ஜியோ போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் அதிக லாபம் அடைய வாய்ப்புக்கள் அதிகம்.
இதில் இந்த பட்டியலில் முதல் 50-100 இடத்திற்குள் வரக்கூடிய கல்வி நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை ஒன்றிய அரசு வழங்குகிறது. இக்கல்லூரிகள் மத்திய/மாநில அரசினுடைய கட்டுப்பாடுகளில் இருந்து ஒப்பீட்டளவில் விடுவிக்கப்பட்டவை என்றே சொல்லலாம். இக்கல்லூரிகள், வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம், கல்விக் கட்டணத்தை தாங்களே தீர்மானிக்கலாம், புதிய படிப்புகளையும் பாடத்திட்டங்களையும் தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம், இணையவழிப் படிப்புகளை நடத்தலாம், அண்டை நாடுகளில் கல்லூரிகளை தொடங்கலாம் மேலும் அரசின் நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமையும் இவர்களுக்கு உண்டு. இக்காரணத்தினால் தான் கல்வி நிறுவனங்கள் (குறிப்பாக தனியார் கல்லூரிகள்) போட்டி போட்டுக் கொண்டு NIRF தரவரிசை பட்டியலில் முதல் 50-100 இடங்களுக்குள் வருவதற்கு வேலை செய்கின்றனர். அதற்காக ஏராளமான குறுக்கு வழிகளையும் முறைகேடுகளையும் செய்கின்றனர்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் 27 வது இடத்தைப் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்பு 2022-23 ஆம் கல்வியாண்டில் மட்டும் 4100 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருப்பதாக ஆங்கில செய்தித்தாளில் முழுப்பக்க அளவிலான ஒரு விளம்பரத்தை கொடுத்திருந்தது. 4100 ஆராய்ச்சி கட்டுரைகள் என்பது தரவரிசையில் முதல் நான்கு இடங்கள் வந்துள்ள ஐ.ஐ.டி. களில் இருந்து வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாகும். ஆனால் அத்தனியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கான போதிய வசதிகளே கிடையாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு படிக்கின்ற இந்திய மாணவர்களிடம் பேசி அவருடைய ஆய்வுக் கட்டுரைகளில் தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரைச் சேர்ப்பது இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விடுவது, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் செய்கின்ற ப்ராஜெக்டை பணம் கொடுத்து ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளியிடுவது போன்ற முறைகேடுகளின் மூலமே NIRF ல் ஆராய்ச்சிக்கான மதிப்பெண்ணை பெறுகின்றனர்.
தரவரிசை பட்டியலில் 14வது இடத்தில் வந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் 320 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பணிபுகின்றனர். ஒரு உதவிப் பேராசிரியருக்கு உண்டான வேலைகளே இவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இவர்களை இன்றுவரை உதவி பேராசிரியராக பல்கலைக்கழக நிர்வாகம் அங்கீகரிக்கவும் இல்லை அதற்கான தகுதியும் வழங்கவில்லை. UGC யே நிர்ணயிக்காத ஒரு புதிய தகுதியை (Teaching Fellow) கொடுத்து மிகக்குறைந்த ஊதியத்தையே பல்கலைக்கழக நிர்வாகம் வழங்குகிறது. இதனால் இவர்கள் வேறு பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளுக்கு பணிக்கு செல்லமுடியாத, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு கூட விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. ஆனால் NIRF/NAAC/NBA ல் இவர்கள் அனைவரையும் உதவிப் பேராசிரியராக அண்ணா பல்கலைக்கழகம் பொய்யாக கணக்கு காட்டுகிறது. கூடவே இவர்களது ஆய்வுக் கட்டுரைகளையும் தனதாக காட்டிக் கொள்கிறது. ஆனால் துணைவேந்தர் வேல்ராஜோ, “இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறி உள்ளோம். நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதே எங்கள் இலக்கு.” என்று பெருமையாக பேட்டி கொடுக்கிறார்.
தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மீதான உழைப்புச்சுரண்டல் என்பது பாக்ஸ்கானை விட மோசமானது. தொழிற்சாலையிலே கூட 9-12 மணிநேர உடல் உழைப்பு என்று முடிந்து விடுகிறது. ஆனால் தனியார் கல்லூரிகளிலோ, மாணவர் சேர்க்கைக்காக ஆள்பிடிப்பதிலிருந்து ஆராய்ச்சி, நிர்வாக வேலைகள் என 24´7 என கல்லூரிக்காகவே நேந்து விட்ட சூழலில் தான் வேலை செய்கின்றனர். இவையெல்லாம் அரசுக்கு தெரிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. திராவிடப் பெருமை பேசிக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதிலும் இன்னும் தீவிரமாக தனியார்மயத்தை திணிப்பதிலும் முனைப்புடன் வேலை செய்கின்றனர். வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தை எதிர்த்த மரபு நமக்குண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் திராவிட பெருமைகளைப் பேசி தனியார்மயத்தை திணிக்கின்ற உத்தியை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் எழுப்ப வேண்டியக் கேள்வி திராவிட மாடல் கல்வியில் தனியார்மயத்தையும்/கார்பரேட்டுகள் நுழைவதையும் ஒழிக்கப்போகிறதா அல்லது ஆதரிக்கிறதா என்பதே!
அழகு