“தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெருக்குவதற்காகவும்” கொண்டுவந்ததாக பீற்றிக்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகள்(தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வடிவு- 2023 க்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்தும், பல்வேறு தொழிற்சங்கங்களும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ததையடுத்தும், சட்ட திருத்தங்களின் செயலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன்களில், மற்றவர்களைவிட திமுக தான் அதிக அக்கறைக் கொண்டவர்கள் என்று தனது அறிக்கையில் பெருமைப்பட்டுக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத்தினை திரும்பப்பெறாமல் அதன் மீதான மேல்நடவடிக்கையை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார். ஒருவேளை சந்தர்ப்பம் பார்த்து அரசாணை வெளியிடலாம் என்று கருதியிருக்கலாம். 2021 ல் நடைபெற்ற பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை இவர்கள் ஒடுக்கிய விதத்திலிருந்தே திமுகவினுடைய தொழிலாளர் நலன் மீதான இலட்சணத்தை நாம் விளங்கி கொள்ள முடியும்.
பிப்ரவரியில் கர்நாடகா மாநில பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்திருத்தத்தைவிட தமிழ்நாட்டின் சட்டத்திருத்தம் அபாயகரமானது என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகிறார். ஏனெனில் கர்நாடக மாநில அரசானது வேலைநேரத்தை 12 மணிநேரம் என வரையறுத்துள்ளது. ஆனால் தமிழக அரசு கொண்டுவந்த 65A திருத்தத்தின் படி எவ்வளவு மணிநேரம் வேண்டுமென்றாலும், எப்படிவேண்டுமென்றாலும் வேலை நேரத்தை தொழிற்சாலைகள் வைத்துக்கொள்ளலாம்.
இச்சட்டத்திருத்தத்தினைக் குறித்து பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, “தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் நெழிவுத் தன்மையுடைய வேலை நேரத்தை(flexibility in working hours) எதிர்பார்ப்பதாக (குறிப்பாக பாக்ஸ்கான், ஆப்பிள் போன்ற மின்னனு தொழிற்சாலைகள், நைக் போன்ற காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்) கூறினார். இந்த நெகிழ்வுத்தன்மை என்பது முதலாளிகளுக்காக கொண்டுவரப்பட்டதே ஒழிய தொழிலாளர் நலன் என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலங்களே.
ஆப்பிளின் புதியவகை தொலைப்பேசிகளை உற்பத்திச் செய்யும் பாக்ஸ்கான் தொழிற்சாலையை கர்நாடகாவில் தொடங்க ஆப்பிள்-பாக்ஸ்கான் கோரிக்கையை ஏற்று வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி பிப்ரவரியில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது கர்நாடகா பாஜக அரசு. அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக அரசு செய்துள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்த ஆப்பிளின் தலைவர் டிம் குக், மோடியை சந்தித்த போது, இந்தியாவில் முதலீடுகள் செய்ய உள்ளோம். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளில் சிரத்தன்மையும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் அரசு செய்யவேண்டும் என கோரியதாகவும் அதை செய்வதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிம் குக் வருகையையொட்டி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மத்திய மின்னனுத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர், வரும் ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது முதலீட்டை மூன்று மடங்கு அதிகரிக்கப் போவதாகவும் தற்போதைய மொத்த ஐபோன் உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகுவதாகவும் வரும் காலங்களில்(FY26) இது 15-25 சதவிகிதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்பிள்-பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கோருவதை செய்து கொடுப்பதையே வளர்ச்சி என்று ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விளம்பரப்படுத்திக்கொள்கின்றனர். இந்த வளர்ச்சி யாருக்கானது என்று பகுத்துப் பார்த்தால் இந்த ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன என்று தெரிந்துவிடும்.
அமெரிக்க-சீனா இடையே உள்ள வர்த்தக்கப் போரின் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதாகவும் அந்நிறுவனங்கள் இந்தியாவை முதலீட்டுக்கான தகுந்த தளமாக கருதுவதால் அம்முதலீடுகளை ஈர்க்க பல சலுகைகளை வழங்குவதாக கூறி உற்பத்தியோடு தொடர்புடைய ஊக்கத்தொகை(Production Linked Incentive-PLI) என்ற திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. பொதுவாக தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒரு வெளிநாட்டு நிறுவனம், இந்தியாவில் தொழில் தொடங்குவதென்றால் பல சலுகைகளை ஒன்றிய அரசும்-மாநில அரசுகளும் அந்நிறுவனத்திற்கு வழங்குகின்றன. PLI திட்டத்தின் கீழ் வருகின்ற ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவை எட்டினால் ஒவ்வொரு வருடமும் கூடுதல் சலுகைகளை ஒன்றிய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கும். இந்த PLI திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு 365 கோடியும் விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு 602 கோடியையும் ஊக்கத்தொகையாக மோடி அரசு வழங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 51 சதவிகிதம் ஐபோனிலிருந்து வருகிறது. இந்த ஐபோன்களின் மொத்த உற்பத்தியில் 90 சதவிகிதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் மற்றும் சீனாவின் கடுமையான கொரானா விதிமுறைகளின் காராணமாக சீனாவிலுள்ள வெளிநாட்டு பெரிய மின்னனு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி தடைபடாமல் இருக்க மாற்றுத் திட்டத்தினை நோக்கி நகர்வதாகவும் இப்பின்புலத்திலிருந்தே ஆப்பிள்-பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடுவதாகவும் பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆனால் சீனாவில் இருந்தது போன்ற சலுகைகளும் தொழிற்சாலைக்கு ஆதரவானச் சட்டங்களும் இந்திய அரசும் செய்து தரவேண்டும் என்பதே ஆப்பிள்-பாக்ஸ்கானின் கோரிக்கை. ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த வருட வருமானம் $394.3 பில்லியன்(31,93,830 கோடி). இதில் ஐபோனின் மூலம் மட்டும் $205.03 பில்லியன் (16,60,791 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அனைத்து உற்பத்தியையுமே ஒப்பந்த அடிப்படையிலேயே செய்துவருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் கொள்ளை பற்றி ஜான் ஸ்மித் ”இருபத்தென்றாம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்” என்ற நூலில் “2007 ல் ஐபோன்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 2007 ல் 3 மில்லியன் ஐபோன்களும் 2008 ல் 5.3 மில்லியன் ஐபோன்களும் 2009 ல் 11.3 மில்லியன் ஐபோன்களும் விற்கப்பட்டன.” ஒவ்வொரு ஐபோனின் மொத்த உற்பத்தி செலவு $178.96. ஆனால் $500க்கு விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 64 சதவிகித மொத்த லாபத்தை ஆப்பிள் மற்றும் வட அமெரிக்க விநியோகஸ்தர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்த லாபம் முழுவதும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மதிப்புக் கூட்டுபவையாகவே உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதிச் செய்யப்படுகிறது. இருப்பினும் இவை அமெரிக்க-சீனா இடையே உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதில் பெருமளவு பங்களிப்புச் செலுத்துவதில்லை. ஐபோன்கள் தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் சீனாவில் உற்பத்திச் செய்யப்படுவதில்லை. அவை பிற மூன்றாம் உலக நாடுகளில் இருந்தே இறக்குமதிச் செய்யப்படுகிறது. இறக்குமதிச் செய்யப்படும் உபகரணங்களின் மதிப்பும் ஏற்றுமதிச்செய்யப்படும் ஐபோன்களின் மதிப்பும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால் ஐபோன்கள் உற்பத்தி சீனா பொருளாதாரத்திற்கு பெரிய பங்களிப்புச் செலுத்துவதில்லை. ஆனால் சீனாவில் உற்பத்திச் செய்யப்படும் ஒவ்வொரு ஐபோனுக்கும் சீன தொழிலாளர்களுக்கான கூலியாக மொத்தமாக $6.50 செல்கிறது. இது ஒரு ஐபோன் உற்பத்திக்கான மொத்த செலவில் சுமார் 3.6 சதவீதம் ஆகும். இந்த மதிப்பே சீனாவின் உள் நாட்டு உற்பத்தியில் ஓரளவிற்கு பங்களிப்புச் செலுத்துகிறது.
சீனாவை விட இந்தியாவின் நிலைமை இன்னும் மோசம். ஐபோன் தயாரிப்பிற்கான அனைத்துப் பொருட்களுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். ஐபோன் தயாரிப்பாக இந்தியத்தொழிலாளர்களுக்கான மாதச் சம்பளம் சராசரியாக 11000 ரூபாய் இது சீனத் தொழிலாளர்களுக்கு(3500 யென் = 41000 ரூபாய்) வழங்கப்படும் கூலியில் மூன்றில் ஒரு பங்குதான். இப்படி ஆப்பிள், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் கொழிக்கவும், இந்திய தொழிலாளர்களை குறைந்த கூலியில் ஒட்டச் சுரண்டவும் வேலை நேர சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் நாட்டின் வளங்களையும் தொழிலாளர்களையும் கட்டற்றவகையில் சுரண்டுவதற்கான நாட்டை மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களின் காலணியாக்குகின்ற பொருளாதாரத் திட்டங்களையே மிகத்தீவிரமாக அமல்படுத்துவதில். பாஜகவிற்கும் திமுகவிற்கும் வேறுபாடு இல்லை.
வேலைநேரத்தை அதிகரிக்க பின்புலமாக இருக்கும் ஆப்பிள், பாக்ஸ்கான் போன்ற அந்நிய நிறுவனங்களையும், அதற்கு அடிவருடியாக இருக்கும் இந்த ஒன்றிய மாநில அரசுகளையும் தூக்கியெறிவதற்கு இந்திய தொழிலாளர்கள் ஒரு வலுவான போராட்டத்தை இந்தியா முழுவதும் கட்டியமைக்க வேண்டும்.
- அழகு