இந்தியாவின் அலுவல் மொழியாக இன்றைக்கு இந்தியும் ஆங்கிலமும் இருக்கின்றன. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது இந்தியாவின் அலுவல் மொழி குறித்த விவாதம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்தது. அதில் இந்தி அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது. அன்றைக்கே இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்தி பேசாத மாநிலங்களின் உறுப்பினர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திக்கு பதிலாக ஹிந்துஸ்தானியையும், சமஸ்கிருதத்தையும், இன்னும் வேறு மொழிகளையும் அலுவல் மொழியாக முன்னிறுத்தி பலரும் விவாதித்தனர். இறுதியாக இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்றும் ஆங்கிலம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அலுவல் மொழியாக தொடரும் என்றும் அதற்குப் பிறகு பாராளுமன்றம் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்வது குறித்து பார்த்துகொள்ளும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பதை தமிழ்நாடு உட்பட பல இந்தி பேசாத மாநில மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடியதன் விளைவாக 1963-ல் இந்திய அலுவல் மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவே 1967-ல் மீண்டும் திருத்தப்பட்டது. அதன்படி இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியுடன் ஆங்கிலமும் காலவரையின்றி தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது.
1950-களில் தொடங்கி இன்றுவரை இந்தியாவின் அலுவல் மொழி குறித்த விவாதங்கள் அனைத்தும் இந்தியை அலுவல் மொழியாக வைத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்தே நடந்து வருகின்றன. இந்தியை அலுவல் மொழியாக திணிப்பதை எதிர்ப்பவர்கள் கூட ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர வேண்டும் எனக் கோருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு கட்டாய அலுவல் மொழி ஒன்று தேவையா என்ற விவாதம் என்றைக்கும் நடைபெறவில்லை.
இந்தியா முழுமைக்கும் ஒரே அலுவல் மொழி வேண்டும் எனக் கோருவதற்கு தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதையே முக்கிய காரணமாக கூறுகின்றனர். அதாவது இந்தியா முழுமைக்கும் ஒரே மொழியை அலுவல் மொழியாக கொண்டுவந்து அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும் இல்லாவிட்டால், அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுகிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டே, மொழி உரிமை பேசுபவர்களைப் பிரிவினைவாதிகள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாட்டின் ஒற்றுமை என்ற காரணம் மேலுக்கு கூறப்பட்டாலும், உண்மையில் தேசிய இனங்கள் விழிப்படைந்து தங்களுக்கான உரிமைகளைக் கோரும்போது அது பரந்து விரிந்த சந்தையை குறுகச் செய்துவிடும் என்ற தரகு முதலாளிகளின் அச்சம்தான் ஒரெ அலுவல் மொழி என்ற வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைகளாக இருந்த தேசிய இனங்கள் அனைத்தும், அவர்கள் அதிகாரத்தை மாற்றிக்கொடுத்த பிறகு, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ஒரே சந்தையாக இருக்க வேண்டும் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் நோக்கத்தை மறைத்து நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு எனக் கூறுகிறார்கள்.
இந்தியை நாடு முழுவதும் பரப்புவதற்கும், இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் குழு அமைத்து திட்டமிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து அதனை நடைமுறைப்படுத்துவது என அனைத்தும் நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதன் பெயரிலேயே செய்யப்படுகிறது.
அதேசமயம், இந்தியை அலுவல் மொழியாக்குவதை எதிர்ப்பவர்கள் கூட ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஏதாவதொரு மொழியையோ அலுவல் மொழியாக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் மேற்படி நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பது என்ற கருத்தை ஒருவகையில் ஆமோதிக்கவே செய்கின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, அரசின் அலுவல் மொழியாக ஒரு மொழியை தேர்வு செய்து அறிவித்தால் என்ன நடக்கும். அந்த மொழி நாட்டின் மற்ற மொழி பேசும் மக்களிடையே கட்டாயப்படுத்தித் திணிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அந்த மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்படும். அரசின் அலுவலக தொடர்புகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் அனைத்தும் அலுவல் மொழியில் தான் இருக்கும். பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வமான விவாதங்கள், கேள்வி பதில்கள், தீர்மானங்கள் அனைத்தும் அலுவல் மொழியில்தான் இருக்கும். அதுமட்டுமன்றி நீதிமன்றங்களில் மனுச்செய்வது முதல் வழக்காடுவது, தீர்ப்பு எழுதுவது என அனைத்தும் அலுவல் மொழியிலேயே இருக்கும்.
பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழும் நாட்டில் அவர்களது உள்ளூர் மொழியில் இவை அனைத்தும் நடைபெறாமல் அலுவல் மொழி என தீர்மானிக்கப்படுகின்றதொரு வேற்று மொழியை கட்டாயப்படுத்தித் திணிப்பது அந்த மொழி பேசும் மக்களிடையிலான வேற்றுமையை தீவிரப்படுத்தி வெறுப்பை விதைக்கும். இது அலுவல் மொழியைப் பேசுகின்ற, பேசாத தேசிய இனங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கும். நமது நாட்டில் தற்போது அதுதான் நடந்து வருகிறது.
மாறாக எந்த ஒரு மொழியும் கட்டாய அலுவல் மொழி என அறிவிக்கப்படாமல் அனைத்து மொழிகளுக்கும் சமமான அங்கீகாரமும், உரிமையும் கொடுக்கப்படும் போதுதான் வெவ்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களின் மத்தியில் நட்புறவை அதிகரிக்க முடியும். எவ்வித கட்டாயமும் இல்லாத சூழலில்தான் எந்த மொழியைக் கொண்டு மற்ற தேசிய இனங்களுடன் தொடர்பு கொள்வது, எந்த மொழியில் தொடர்பு கொண்டால் தனக்கு அனுகூலம் கிடைக்கும் என்பதை ஒரு தேசிய இனம் இயல்பாக முடிவு செய்ய முடியும்.
ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தித் திணிக்க முயன்ற கறுப்பு நூற்றுவர்களுக்கு எதிராகவும், கருப்பு நூற்றுவர்களின் சர்வாதிகார அணுகுமுறைக்கு பதிலாக ‘பண்பட்ட’ அணுகுமுறையுடன் நாட்டின் ஒற்றுமையைக் காரணமாக காட்டி கட்டாய அலுவல் மொழி தேவை என்று வாதிட்ட தாராளவாதிகளுக்கு எதிராகவும் லெனின் பின்வருமாறு கூறுகிறார் –
“கட்டாய அலுவல் மொழி என்பது குண்டாந்தடியைப் பயன்படுத்திப் பலவந்தம் செய்வதுடன் சம்பந்தப்பட்டது. எவர் ஒருவரும் பெருமைக்குரிய மேன்மைமிக்க ருஷ்ய மொழியை முற்றிலும் பலவந்தமான முறையில் பயில்வது அவசியம் என நாம் கருதவில்லை………
…… ஆனால் பலவந்தம் (குண்டாந்தடி) ஒரே ஒரு விளைவை மட்டுமே ஏற்படுத்தும்; அது பெருமைக்குரிய மேன்மைமிக்க ருஷ்ய மொழியைப் பிற தேசிய இனக்குழுக்களுக்குப் பரவாமல் இருக்குமாறு முட்டுக்கட்டை போடும். மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக, எதிர்ப்புணர்வைக் கூர்மைப்படுத்தும், ஆயிரக்கணக்கான புதிய வடிவங்களில் உராய்வை உண்டுபண்ணும், மனக்கசப்பையும், பரஸ்பர புரிதலின்மையையும் இன்னபிறவற்றையும் அதிகப்படுத்தும்.” – கட்டாய அலுவல் மொழி அவசியமா? – லெனின்.
மேலும் அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுகின்ற ஒரு நாட்டில் எப்படி பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையிலான இணைப்பும், பரிமாற்றமும், இயல்பாக நடந்து அவர்களுக்கு இடையிலான தொடர்பு மொழி ஒன்றோ அதற்கு மேற்பட்டதோ அதனை அந்த மக்கள் தாமாகவே ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் லெனின் விளக்குகிறார்.
“அனைத்துச் சிறப்புரிமைகளும் மறையுமானால், ஏதேனும் ஒரு மொழி திணிக்கப்படுவது நிற்குமானால், அனைவரும் எளிதாக, விரைவாக, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்வர் மற்றும் பொதுப் பாராளுமன்றத்தில் பல்வேறு மொழிகளில் உரைகள் கேட்க வேண்டியிருக்கும் என்ற “அச்சமூட்டும்” சிந்தனையால் பீதியடைய மாட்டார்கள். பொருளாதார பரிவர்த்தனையின் தேவைகள், தாங்கள் வசிக்கும் நாட்டில் எந்த மொழி கூடுதலான அனுகூலங்களைப் பெற்றுள்ளது என்பதை, வர்த்தக உறவுகளின் நலன்களுக்காக, தாங்களாகவே முடிவு செய்து கொள்வார்கள். பல்வகைப் பட்ட தேசிய இன மக்களால் தாமாகவே சுவீகரிக்கப்பட்டதால் இந்த முடிவு உறுதியாக இருக்கும்.” – மொழிப்பிரச்சனை குறித்து தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் – லெனின்.
எனவே பாட்டாளிவர்க்கமான நாம் எந்தவொரு மொழிக்கும் சிறப்புரிமை கொடுப்பதையும், அதனைக் கட்டாயப்படுத்தி மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிப்பதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேபோல மொழிகளுக்கு இடையிலான உயர்வு தாழ்வுகளைப் பூதாகரமாக்கி, உழைக்கும் வர்க்கத்தை மொழி அடிப்படையில் பிளவுபடுத்தும் முதலாளித்துவக் கட்சிகளின் இனவெறி-மொழிவெறி அரசியலை நிராகரிப்போம். நமது நாட்டில் பல்வேறு மொழிகள் பேசுகின்ற அனைத்து தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கட்டியமைப்போம். அதுதான் சமூகத்தை மாற்றியமைக்கும் புரட்சிப்பாதையில் உள்ள தடைக்கற்களைத் தகர்த்து முன்னேறுவதற்கான வழியாகும்.
- அறிவு