யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக ஆதரவாளர்களைத் துணைவேந்தர்களாக நியமிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில், இந்துத்துவா கருத்தியலை திணிக்கும் வேலையை ஆளுநர் தரப்பு செய்துவருகிறது. இது ஒருவகையில் தமிழகப் பல்கலைக்கழகங்களை மோடி அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியே. கேரளா, கர்நாடகா போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் இதையே செய்கின்றனர். இதனை எதிர்த்துப் பல வழக்குகள் மாநில அரசுகளால் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த எதிர்ப்புகளை முறியடித்து, அளுநருக்கே மொத்த அதிகாரத்தையும் வழங்குவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு மோடி அரசு யு.ஜி.சி.யின் மூலமாகத் தற்போது முயற்சிக்கிறது.
பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பான நெறிமுறைகளைக் கொண்ட வரைவு அறிக்கை ஒன்றை யு.ஜி.சி. கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. அதில், துணைவேந்தர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அனுமதி; துணைவேந்தர் தேர்வுக்கான குழு அமைப்பது மற்றும் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் ஆளுநருக்கே முழு அதிகாரம்; ஒப்பந்தப் பேராசிரியர்கள் நியமிப்பதற்கு அங்கீகாரம் போன்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இவ்வரைவின்படி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஏற்கெனவே, உயர்கல்வியில் காவி-கார்ப்பரேட் மயத்தைப் புகுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ள NEPன் பரிந்துரைகளை யு.ஜி.சி.யின் செயல்திட்டக் கட்டளைகள் மூலம் கல்லூரிகளுக்குள் அமல்படுத்தி வந்தாலும், மாநில அரசுகளின் எதிர்ப்பு, கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதனால் உள்ள சட்டரீதியான தடைகள், மாணவர்-ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு ஆகியவற்றினால் அவற்றை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.
இந்த எதிர்ப்புகளைச் சமாளித்து, உயர்கல்விக்குள் தங்களுடைய காவி-கார்ப்பரேட் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தப் புதிய நெறிமுறைகளை மோடி அரசு பயன்படுத்தும். இந்தியாவில் 56 ஒன்றிய அரசுப் பல்கலைக்கழகங்களும் 481 மாநிலப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில், தற்போது மோடி அரசால் தங்களுடைய ஆதரவாளார்களை துணைவேந்தர்களாக நியமிக்க முடியும்.
மாநிலச் சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றப்பட்டு, மாநில அரசு கொடுக்கும் நிதியிலிருந்து இயங்கும் பல்கலைக்கழகங்களில், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது இந்தியாவின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஆனால் கல்வியை காவிமயமாக்குவது, பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் தனியார்மயத்தைப் புகுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் காப்பது, அதற்காக மொத்தமாக கல்வியையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற சதித்திட்டத்தின் மூலம் கல்வியில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் மறுத்துத் தனது காவி-கார்ப்பரேட் பாசிசத்தை நிறுவத்துடிக்கிறது மோடி கும்பல். இதனை உணர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்துத் தெருவில் இறங்கிப் போராடாமல் தீர்வில்லை.
அரங்கக்கூட்டம்
சிறப்புரை:
பேரா. ப. சிவக்குமார்
மேனாள் முதல்வர்
குடியாத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரி
பேரா. வீ. அரசு
மேனாள் தமிழ் துறைத் தலைவர்
சென்னை பல்கலைக்கழகம்
02-03-2025
மாலை 5 மணி
மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்நாடு (CCCE-TN)
ccce.eduall@gmail.com, 9551122886