கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

கோவில்களையும் அதன் சொத்துக்களையும் நிர்வாகிப்பது மற்றும் பராமரிப்பது தான் இந்து அறநிலையத்துறையின் முக்கியமான பணி. ஆனால் திமுகவோ இந்துறையின் மூலமாக வெளிப்படையாகவே இந்து மதப் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

733 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாம்பன் கோயிலில் நடத்தியதை போல மேலும் 12 கோவில்களில் இது போன்ற நிகழ்ச்சியை மாணவர்களை கொண்டு நடத்தப் போவதாகவும் வரும் 6-ம் தேதி வடபழனி கோயிலில் மாணவர்களை கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. அறிவியல் கண்ணோட்டத்தை சொல்லித்தர வேண்டிய மாணவர்களிடம், பாஜகவைப் போல, அவர்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் மதக்கருத்துக்களைத் திணித்து வருகிறது திராவிடமாடல் அரசு.

கடந்த ஆகஸ்டில்  திமுக அரசு பழனியில் நடத்திய அனைத்து உலகு முத்தமிழ் முருக மாநாட்டில் தமிழக அரசு சார்பில் 21 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் மூன்று தீர்மானங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் முருகன்/இந்துமதம் குறித்துப் பிரச்சாரம் செய்வதாக இருக்கிறது. அவை பின்வருமாறு:

  1. ஐந்தாவது தீர்மானமாக முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தேர்வுகள் நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குவது.
  2. எட்டாவது தீர்மானமாக விழா காலங்களில் அருள்மிகு கந்த சஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ மாணவர்களை கொண்டு கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைப்பது.
  3. பன்னிரண்டாவது தீர்மானமாக முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீக பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைப்பது.

இத்தீர்மானங்களைக் கண்டித்து ஜனநாயக சக்திகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. திமுகவின் கூட்டணி கட்சிகளும் இத்தீர்மானத்தை எதிர்த்தனர். சிலரோ இது சேகர் பாபுவின் சூழ்ச்சி இதில் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று முட்டுக்கொடுத்தனர். ஆனால் இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலினோ அமைச்சர் சேகர்பாபுவோ துளியும் கண்டுகொள்ளவில்லை. மாநாட்டு தீர்மானங்களை அமல்படுத்தப் போவதாகவும் அடுத்த கட்டமாக அம்மன் மாநாடு நடத்த போவதாகவும் இவை அனைத்துமே முதல்வரின் மேற்பார்வையில் தான் நடைபெறுவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் போட்டுடைத்தார் அறநிலையத்துறை அமைச்சர்.

கோவில்களையும் அதன் சொத்துக்களையும் நிர்வாகிப்பது மற்றும் பராமரிப்பது தான் இந்து அறநிலையத்துறையின் முக்கியமான பணி. ஆனால் திமுகவோ  இந்துறையின் மூலமாக வெளிப்படையாகவே இந்து மத பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்று காட்டுவதற்காகவே கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் 2000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருப்பதாகவும் 6000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டிருப்பதாகவும் ஊரெங்கும் பிரச்சாரம் செய்துவருகிறது. கொள்கை ரீதியில் பாஜக-வுக்கு எதிரி நாங்கள் தான் என்று சொல்லிக்கொள்ளும்  திமுக, பெரியார்/முற்போக்கு போன்ற முககவசங்களை அணிந்து கொண்டு, தனது ஓட்டரசியலுக்காக இந்து மத ஆதரவு என்றடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கின்ற வேலையைச் செய்கிறது.   

பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் வேத-புராணக் கதைகளை பாஜக  திணிக்கும் போது, இந்துத்துவா கருத்து திணிப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று குதிக்கும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும்  மாணவர்கள் மத்தியிலும் அறிவியலுக்குப் புறம்பான முருக கதைகளையும் கந்த சஷ்டி கவசத்தையும் திணிப்பதை என்னவென்பது?

அரசியல் களத்தில் பாசிச பாஜகவிற்கு மாற்று திராவிட மாடல் தான் என்று கட்டமைக்க முயற்சிக்கிறது திமுக. ஆனால் திராவிட மாடல், பிற்போக்கான இந்து மதத்தையும் – பார்பனியக் கருத்துக்களையும் விமர்சிப்பது இல்லை மாறாக தனது தேர்தல் அரசியலுக்காக இந்துமத ஆதரவு நிலைப்பாட்டையே பின்பற்றுகிறது. மேலும் திராவிடமாடல், காவி பாசிசத்திற்கு அடிப்படையாக இருக்கும் கார்ப்பரேட்டுகளையும்  விமர்சிப்பதில்லை.  இவர்கள் ஒருபடி மேலே சென்று கார்ப்பரேட்களோடு கைகோர்த்துக் கொண்டு தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் முன்னின்று நடத்துகிறார்கள். எனவே திராவிட மாடல், ஒருபோதும் காவி-கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக  இருக்கப்போவதில்லை என்பதை இவர்களின் செயல்பாடுகளே நமக்கு உணர்த்துகின்றன.

  • அழகு

 

தகவல் உதவி

https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/minister-sekar-babu-says-he-permits-students-to-sang-kanda-shashti-as-per-their-wish

https://www.bbc.com/tamil/articles/c2kj9859zg8o

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன