சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.

தான் உருவாக்கிய நிறுவன விதிகளைத்தான் தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டும்; எனவேதான் தான் தொழில் தொடங்கும் எல்லா நாடுகளிலும், அந்த நாட்டினுடைய தொழிலாளர்கள் நலச் சட்டங்களைக் கடைபிடிப்பதில்லை. தொழிற்சங்கங்களை முறியடிப்பதற்கான இந்த யுக்தியைப் பல ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் கையாண்டு வருகிறது; இதற்கு சமீபத்திய உதாரணம் சாம்சங் நிறுவனத்தின் இந்த விதிகளுக்கு உட்பட்டுத் துணைபோன மு.க.ஸ்டாலினின் ”திராவிட மாடல்” அரசு.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியது. அதன்பிறகு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். 

கடந்த ஒரு வார காலமாக பணிக்குத் திரும்பிய அத்தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் சுமார் 150 தொழிலாளர்களை, வாரத்திற்கு ஒருமுறை வகுப்பு என்கிற பெயரில் ஒரு புதிய நடைமுறையைக் கடைபிடிக்கத் துவங்கியிருக்கிறது; இந்த வகுப்பு தொழிற்சங்கம் கூடாது எனக்கருதும் தொழில்முறை விரிவுரையாளர்களைக் கொண்டு எடுக்கப்படுகிறது. வகுப்பு நடைபெறும் இடத்திற்கு சாம்சங் நிறுவனத்தின் அதிகாரிகள் நேரடியாக வந்து, சி.ஐ.டி.யூ தொழிலாளர்களிடம்  நிர்வாகத்தின் சங்கத்தில் சேர்வதற்குக் கையெழுத்துப் போடுமாறு மணிக்கணக்கில் நிர்பந்திக்கிறார்கள் என சி.ஐ.டி.யூ சங்கத்தலைவர் முத்துக்குமார் கூறுகிறார்.

சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம், தமிழக அரசு, சாம்சங் நிறுவனம் என முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டதால், தொழிற்சங்கத்தின் சார்பில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஒரு பொருட்டாக மதிக்காத சாம்சங் நிறுவனத்தின் அதிகாரிகள் நிர்வாகத்தின் சங்கத்தில் மட்டுமே சேர வேண்டும் என நிர்பந்திப்பதன் மூலம் சி.ஐ.டி.யூ போன்ற தொழிற்சங்கங்களை அனுமதிக்க முடியாது எனவும் செயல்பட்டு வருகிறது.

 

சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை ஏன் எதிர்க்கிறது? தொழிற்சங்க உரிமைகள் கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஆளும் வர்க்கத்தால் ஏன் பணிய வைக்கமுடியவில்லை? என்பதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் அந்நிறுவனம் ஆரம்ப காலந்தொட்டுக் கடைபிடித்துவரும் தொழிற்சங்க விரோத வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமல்லாமல்; தென்கொரியாவிலிருந்து மெக்சிகோ வரையும், வியட்நாமிலிருந்து ஹங்கேரி வரையும், தாய்லாந்திலிருந்து இந்தோனேசியா வரையுமுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுத்தே வந்திருக்கிறது. இவ்வுண்மையை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே சாம்சங் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராகவும், அதன் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடி முறியடிக்க முடியும்.

ஏறக்குறைய 86 வருடங்களுக்கு முன்பு 1938-ல் ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சாம்சங் நிறுவனம் 2023-ம் ஆண்டுக் கணக்கின்படி, தென்கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 விழுக்காட்டைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொருட்களைப் பயன்படுத்தாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு தனது சந்தையை உலகின் மூலை முடுக்கெல்லாம் கடை விரித்திருக்கிறது. இருந்தபோதிலும் தான் கடை விரிக்கும் நாடுகளின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதில்லை. மாறாக 1989-ம் ஆண்டில் தொழிலாளர்கள்-நிர்வாகம் அடிப்படை வழிகாட்டுதல்; 2012-ம் ஆண்டு S குருப் தொழிலாளர் மேலாண்மை யுக்தி; 2014-ம் ஆண்டு நிறுவன ஸ்திரத்தன்மை திட்டம் எனத் தாம் உருவாக்கிய சட்டதிட்டத்தின்படியே தொழிலாளர்கள் நடக்க வேண்டும் என்கிறது. இதற்கு தென்கொரியாவும் விதிவிலக்கல்ல. சாம்சங் தொழில் தொடங்கும் நாடுகளில் உள்ள அரசுகள் அனைத்தும் இந்நிறுவனம் உருவாக்கிய விதிகளுக்குக் கட்டுப்பட்டே அனுமதி அளித்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் மு.க.ஸ்டாலினின் ”திராவிட மாடல்” அரசு.

தென்கொரியா:

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் கூட 1980-ம் ஆண்டு வரை தென்கொரியாவில் இல்லை. அந்தளவிற்கு அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கங்கள் பலவீனமாக இருந்தது. அந்நாட்டின் ஆளும் வர்க்கமோ; தொழிலாளர் இயக்கம் என்றாலே அது கம்யூனிசத்துடன் தொடர்புடையது என்றே அடையாளப்படுத்தியது.  கொரியப் போரின் விளைவாக நாடு இரண்டாகப் பிரிந்தது. அதில் தென்கொரியா, நாட்டு மக்களின் முன்னேற்றம் எனும் குறுகிய தேசிய வெறியையும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தொழிற்சங்கங்கள் ஆபத்தானது எனும் முதலாளித்துவத் தொழிற்சங்க விரோத உணர்வையும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பியது. வர்க்கம் என்ற சொல்லைக் கூட பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. மேலும் தொழிற்சங்கங்கள் மீதான அரசின் தீவிர அடக்குமுறை காரணமாகத் தொழிலாளர் இயக்கங்கள் 1980-ம் ஆண்டு வரை தொழிற்சங்கம் அமைப்பது மிகவும் கடினமாகவே இருந்தது.

1980-ல் தென்கொரியாவின் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்களும், தொழிலாளர்களும் இணைந்து நடத்திய குவாங்ஜூ எழுச்சிக்குப்பிறகு தொழிலாளர் இயக்கங்கள் வலுப்பெற்றன. குவூன் இன் சூக் என்ற பெண் தொழிலாளியைப் போலீஸ் வன்கொடுமை செய்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அதேபோல் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முன்னனியாளர் ஒருவரின் மரணமும் மாணவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால் மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து 1987-ல் ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்திய போராட்டங்கள் தென்கொரியத் தொழிற்சாலைகள் முழுவதும் பரவியது.

உல்சான் நகரத்திலுள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த நூறு தொழிலாளர்கள் இரகசியமாக தொழிற்சங்க வேலைகளை முன்னெடுத்தனர். மேலும் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஹூண்டாய் நிறுவனத்தின் பன்னிரெண்டு தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் 1987-ம் ஆண்டு தொழிலாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்களே ஆகும். பல சிறிய தொழிற்சாலைகளிலும் கூட இப்போராட்டம் பரவியது. இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் 3500 தொழிற்சங்கங்கள் உருவானது. இதற்கு முன்பு தென்கொரிய அரசுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வந்த தென்கொரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு (FKTU)  மாற்றாக கொரியத் தொழிலாளர்கள் அமைப்பு எனும் (KCTU) தொழிற்சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தனர். கப்பற்கட்டும் ஆலைகள், வாகனத் தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இப்படித் தென்கொரியத் தொழிலாளர் இயக்கங்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியக் கால கட்டம் முதல் உலகமயமாக்கம் வரை பல தீரமிக்கப் போராட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்திய போதிலும் சாம்சங் நிறுவனர் லீ ப்யூங் சுல்-லில் தொடங்கி தற்போதைய தலைவரான லீ குன் ஹூயூ வரை அனைவரும் தொழிற்சங்கம் அமைவதைத் தீவிரமாக எதிர்த்தனர். மேலும் புதிதாகச் சங்கம் தொடங்குவதற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளனர். நிறுவனர் லீ ப்யூங் சுல்-லோ, ”சாம்சங்கில் ஒரு தொழிற்சங்கம் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு என் கண்களை மூடிவிடுவேன்” என்று தன்னுடைய அப்பட்டமான தொழிற்சங்கம் அமைப்பதற்கு எதிரான தொழிலாளர் விரோதப்போக்கை உமிழ்ந்துள்ளார்.

தென்கொரியாவிலுள்ள சாம்சங் தொழிற்சாலைகளில் 2021-ம் ஆண்டு வரை தொழிற்சங்கங்களை உருவாக்க அனுமதிக்கவில்லை. மேலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்காமல் அவர்களின் உழைப்பு சக்தியை ஒட்டச்சுரண்டி தன் மூலதனத்தைப் பெருக்கி ஏகபோகமாக கொழுத்து வளர்ந்து நிற்கிறது சாம்சங் நிறுவனம்.

தென்கொரியச் சட்டப்படி வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களில் இருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்துவதற்குத் தடைசெய்யப் பட்டிருக்கிறது. இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனது ஆலை வளாகத்திற்குள்ளே வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களைத் திறந்து தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறது.

இதுமட்டுமில்லாமல் தொழிற்சங்கத் தலைவர்களைக் கடத்தி அவர்களைத் தாக்குவது; சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்குத் தொழிற்சங்கங்கள் அமைப்பதை எப்படி முறியடிப்பது என்பது குறித்த சிறப்புப் பயிற்சியளிப்பது; தொழிற்சங்கங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடும் மையங்களை மூடுவது; தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களை குறிவைத்து வேலை நீக்கம் செய்வது எனப் பல்வேறு தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கொரிய உலோகத் தொழிலாளர்கள் சங்கம், சாம்சங் நிறுவனத்தின் மீது 2013-ம் ஆண்டில் குற்றம் சாட்டியது.

தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்டு 30 உயர் அதிகாரிகள், தென்கொரிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட வரலாறும் உண்டு. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்ட முன்னணித் தொழிலாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கசியவிட்டதற்காக, அந்நிறுவனத்தின் 30 உயர் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் தலைமை அதிகாரியும் இதில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இளவரசர் என்றழைக்கப்படும் அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவரான லீ ஜே யோங் என்பவர் தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காகவும், தொழிற்சங்கத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டதற்காகவும் சிறைக்கு அனுப்பப்பட்டார். கோவிட்-19 பெருந்தொற்றையொட்டி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனக்கூறி அவருக்குச் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டது.

2000-ம் ஆண்டில் இருந்து சாம்சங் நிறுவனத்தில் நடந்த தொழிலாளர்களின் இறப்புகளும், தற்கொலைகளும் தென்கொரிய மக்களிடம் பெருங்கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே 2021-ம் ஆண்டில் சங்கம் அமைக்கும் உரிமையைப் பெற்றனர்.

சாம்சங் நிறுவனத்தில் நடந்த இறப்புகளும், தற்கொலைகளும்:

சாம்சங் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையில் 2003-ல் வேலைக்குச் சேர்ந்த ஹ்வாங் யு மி என்பவர் ஆலையின் நச்சுத்தன்மை காரணமாகப் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரின் தந்தை ஹ்வாங், சாம்சங் நிறுவனத்திடம் இழப்பீடு தறும்படிக் கோரியதை, நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் யூ மி யின் தந்தை கொரியத் தொழிலாளர் இழப்பீடு சேவையில் புகார் கொடுத்தார் அப்போதும் நிறுவனம் இறங்கி வரவில்லை. பின்னர் யூ மியின் இறப்பு குறித்து பேசுவதை நிறுத்தினால் நூறு கோடி தென்கொரிய யுவானைத் தருவதாக சாம்சங் மேலாளர் மறைமுகமாகப் பேரம் பேசுவதாகப் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதையடுத்து யூ மி யின் இறப்பு தென்கொரியா முழுவதும் பரவியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ மி-யின் இறப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்ததோடு, யூ மி-யின் இறப்பிற்கு முன்பும் இதுபோன்று பாதுகாப்பற்ற நடைமுறைகளின் காரணமாக மரணமடைந்த 117 தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

2013-ல் சாம்சங் தொழிலாளி சோய் ஜாங்பியோம் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் 980 அமெரிக்க டாலர்களை மாத ஊதியமாகப் பெற்றுவந்தார். இவ்வூதியம் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 38 டாலர்களே அதிகம் என்பதால் மூன்றுவேளை உணவிற்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனவே, இங்கு வேலை செய்வது மிகவும் வேதனையளிக்கிறது என்கிறார். மேலும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் சோன் டே போல தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை எனினும், நான் உங்களுக்கு உதவுவேன். தனக்கு வேறு வாய்ப்பில்லை எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் யோம் ஹோ சியோக் என்பவர் 2014-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தனது உடலைத் தகனம் செய்யாதீர்கள். நமது போராட்டம் வெற்றி பெற்றவுடன் தனது சாம்பலை போராட்ட இடத்தில் தெளியுங்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  முதலில் இறுதிச்சடங்கை நடத்தும் அதிகாரத்தை தொழிற்சங்கத்திற்கு வழங்கிய யோமின் தந்தை; சிறிது நேரத்திற்குப் பிறகு யோமின் குடும்பமே இறுதிச்சடங்கை நடத்தும் என்றார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுவே பின்னர் போலிசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதலாக வெடித்தது.

இப்படித் தொழிலாளர்களின் தொடற்சியானத் தற்கொலைகள், இறப்புகள், அதிகாரிகளின் பல்வேறு முறைகேடுகள் மீதான மக்களின் கோபம் போன்றவற்றின் காரணமாகவே சாம்சங் நிறுவனம் 2021-ம் ஆண்டு தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒத்துக்கொண்டது.

தென்கொரியாவில் பல்வேறு தொழிற்சங்க விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடித்த சாம்சங் நிறுவனம், உலகமயமாக்கத்திற்குப் பிறகு மலிவான கூலியைத் தேடியும், தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டுவதற்காகவும் ஆசிய நாடுகளுக்குப் படையெடுத்தது. தொழிற்சங்கமே இருக்கக் கூடாது எனும் தன்னுடைய கொள்கையைப் பிறநாடுகளிலும் அமல்படுத்தி வருகிறது என்பதற்கும், இத்தனை அநியாயங்கள் நடந்துள்ளது தெரிந்தும் ஆளும்வர்க்க அரசு அனுமதியளிக்கிறது என்பதற்கு நம் கண்முன் சாட்சியாக இருப்பதுதான் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனமும், அதனை ஆதரிக்கும் தமிழக அரசும்.

வியட்நாம்:

வியட்நாமில் தனக்கான சார்பு தொழிலாளர்களை கொண்டு அங்கு தொழிற்சங்கத்தை அனுமதித்துள்ளது. இச்சங்கம் சாம்சங் நிறுவனத்தின் தலையாட்டியாகச் செயல்படுகிறது. ஆனால் வியட்நாமிய தொழிலாளர் சட்டத்தின் படி அனைத்து தொழிலாளர்களும் வியட்நாமின் தேசிய சங்கமான வியட்நாம் ஜெனரல் கான்பெடரசேன் ஆப் லேபரில் (VGCL) உறுப்பினராக இருக்க வேண்டும். எனவேதான் இங்குள்ள சாம்சங் தொழிற்சங்கம் VGCL-ல் உறுப்பினராக இருக்கிறது. ஆனால் VGCL தலைவர் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக உள்ளது. எனவே, இரண்டு சங்கங்கள் எதற்கு என சாம்சங் வாதாடி வருகிறது.

இந்தோனேசியா:

இந்தோனேசியாவிலுள்ள சாம்சங்கின் 80 சப்ளையர்கள் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் அங்குள்ள உலோகத் தொழிலாளர் சங்கத்தில் (FSPMI) இணைந்ததால் அந்நிறுவனங்களின் ஒப்பந்தத்தையே இரத்து செய்தது. மேலும் தன்னுடைய துணை ஒப்பந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைக் கொண்டு, சங்க உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்யவும், பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தான் வழங்கிய இயந்திரங்களை திரும்பப்பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களின் அளவைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆட்குறைப்பை உருவாக்காவும் செய்தது. இதன் மூலம் சாம்சங் துணை ஒப்பந்த நிறுவனங்கள் (FSPMI) சங்கத்தில் உறுப்பினராகாமல் தடுத்து வந்தது என்கிறார் FSPMI-ன் தலைவர்.

ஜெர்மன், மலேசியா, ஹங்கேரி, தாய்லாந்து:

முதன் முதலில் ஜெர்மனியில் தான் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை சாம்சங் எதிர்த்தது. 1995-ல் ஜெர்மனி தொழிலாளர்கள் அமைத்த கவுன்சிலை எதிர்த்து 5 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனை எதிர்த்துத் தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடிய பின்னரே கவுன்சில் அமைக்கும் உரிமையைப் பெற்றனர்.

மலேசியாவிலுள்ள மலேசியன் எலக்டிரிக்கல்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தில், அங்குள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் சேர முற்பட்ட போது, நிறுவன அதிகாரிகள் அனைத்து தொழிலாளர்களிடமும்  சங்கத்தில் (EIWU) சேர மாட்டோம் எனக் கையெழுத்து வாங்கினர்.  இந்நிகழ்வுக்குப் பிறகு மலேசிய அரசு, சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக  எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைசெய்யும் சாம்சங் தொழிலாளர்கள் EIWU-ல் சேரமுடியாது என அறிவித்தது.

தாய்லாந்திலுள்ள தன்னுடைய ஆலைகளை பல கிளைகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்து எலக்ட்ரோ-மெக்கானிக்ஸ் எனும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர முயன்ற போது, இதற்கு காரணமான ஏழு முன்னணித் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது.

ஹங்கேரியில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எதிர்த்தும், மோசமான வேலை நிலமைகளை எதிர்த்தும் சங்கம் அமைக்க வேண்டும் என்று  1990-ம் ஆண்டிலிருந்து தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

இப்படி உலகம் முழுவதுமுள்ள தனது நிறுவனங்களில் தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என செயல்படும் சாம்சங் நிறுவனம், தமிழ்நாட்டிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தீவிரமாக எதிர்த்தே வருகிறது. நொய்டாவில் அப்ரண்டிஸ் பயிற்சியாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தன் உற்பத்தியை நடத்தி வருகிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றன. நாட்டின் ஏற்றுமதியில் 32% தமிழ்நாடு பெற்றிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றால் பிற மாநிலங்களில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தொழிலாளர் வர்க்க உணர்வு பரவும் என்பதற்காகவே தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் கூட்டுச்சேர்ந்து கொண்டு இப்போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வேலை செய்து வருகின்றனர்.

தொழிற்சங்கம் இல்லாமலேயே உலகின் எந்த மூலையிலும் எப்படி வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியைச் சுரண்டலாம், தொழிலாளர்களை  அடிமையாக நடத்தலாம் எனும் மரபை கொண்ட  சாம்சங் நிறுவனத்தையும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஒன்றிய, தமிழக அரசையும் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மட்டுமே எதிர்த்து முறியடிக்க முடியாது. அத்தொழிலாளர்களுக்காக நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் சாம்சங் பகாசுர நிறுவனத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் கார்ப்பரேட் விசுவாசிகளான ஒன்றிய மாநில அரசுகளையும் நாம் முறியடிக்க முடியும்.

  • தாமிரபரணி

செய்தி ஆதாரங்கள்: 

  1. https://www.thenewsminute.com/long-form/from-south-korea-to-chennai-samsungs-union-busting-legacy
  2. https://monthlyreviewarchives.org/mr/article/view/MR-049-03-1997-07_8
  3. https://goodelectronics.org/industriall-global-union-condemns-samsung-for-union-busting/
  4. https://scholarhub.ui.ac.id/cgi/viewcontent.cgi?article=1211&context=mjs
  5. https://english.hani.co.kr/arti/english_edition/e_international/899427.html
  6. https://www.ituc-csi.org/global-reach-of-samsung-s-medieval
  7. https://library.fes.de/pdf-files/gurn/00164.pdf
  8. https://www.ituc-csi.org/samsung-modern-tech-medieval

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன