பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

பாபர் மசூதி இருந்த இடம் தனக்கு வேண்டும் என்று கடவுளாகிய இராமபிரான் சந்திர சூட்டிம் கேட்க அதையே அவர் தீர்ப்பாக எழுதிவிட்டார். ராமனே தனக்காக சொன்ன தீர்ப்பு. சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகளும் செய்ததெல்லாம், சட்ட ரீதியான விளக்கங்களையும் மேற்கோள்களையும் கொண்டு ராமனின் விருப்பத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருப்பது தான்.

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”

இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் ஒருவரும் இப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசியது.  

சந்திரச்சூட் ன் கூற்றுப்படி பாபர் மசூதி இருந்த இடம் தனக்கு வேண்டும் என்று கடவுளாகிய இராமபிரான் அவரிடம் கேட்டிருக்கிறார். அதையே அவர் தீர்ப்பாக எழுதியிருக்கிறார். இது அவரின் மூளையில் உதித்த முடிவல்ல. ராமனே தனக்காக எழுதிய தீர்ப்பு. சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகளும் செய்ததெல்லாம், ராமனின் விருப்பத்தை, சட்ட ரீதியான விளக்கங்களையும் மேற்கோள்களையும் கொண்டு இந்திய குடியரசின் புனித நூலான இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக சட்ட அங்கீகாரம் கொடுத்திருப்பது தான்.

இத்தீர்ப்பின் மூலம் ராமனுக்கு தனது கோவில் உறுதியாகிவிட்டதென்பதால், தனக்காக ‘தெய்வீக’ தீர்ப்பெழுதிய’ ஐந்து நீதிபதிகளுக்கும் மோடி-அமித்ஷா வாயிலாக தக்க வெகுமதி கொடுத்து கௌரவித்தார் இராமபிரான். தீப்பெழுதியவர்களில் முதன்மையானவரான அப்போதைய தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாய் பணி ஒய்வுக்கு பிறகு ராஜசபா உறுப்பினராக பாஜக வினால் நியமிக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு நீதிபதிகளில் அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராகவும் அசோக் பூசன் கம்பெனி விவகாரங்களை தீர்த்து வைக்கும் NCLAT ன் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். பாப்டே மற்றும் சத்திரசூட் க்கு தலைமை நீதிபதி பதவியும் கிடைத்தது.

1949 இல் திருட்டுத்தனமாக ராமர் சிலையை மசூதிக்கு வைத்ததிலிருந்து 1992 இல் மசூதியை இடித்தது மற்றும் 2010ல் ராமர் கோயிலுக்கு ஆதரவாக கொடுத்த அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு 2017 இல் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதி என பாபர் மசூதி-ராமஜென்ம பூமி பிரச்சனை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வந்திருக்கிறது. இதையொட்டி ஆர்எஸ்எஸ்-விஎச்பி-பாஜக கும்பல் திட்டமிட்டு நடத்திய நூற்றுக்கணக்கான கலவரங்கள் ஆயிரக்கணக்கான படுகொலைகள் அனைத்துமே இந்திய அரசியலில் பாஜக ஒரு முக்கிய சக்தியாக வளர்வதற்கு பயன்பட்டிருக்கிறது. இறுதியாக அது, காவி பாசிசம் இந்தியாவில் வலுப்பெறுவதற்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டது. மேற்கூறியவை அனைத்துமே நீதிமன்றங்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் தான் நடைப்பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் தீர்ப்பின்படி, மசூதியை இடித்தது கொடுரமான குற்றம், ராமர் சிலையை மசூதிக்குள் திருட்டுத்தனமாக வைத்ததும் குற்றம், இருந்த போதிலும் அது ராமன் பிறந்த இடம் என்பதால் அது ராமனுக்கு சொந்தமானது. நீங்கள் குடியிருக்கின்ற வீட்டை சில ரௌடிகள் அடித்து நொறுக்கியதும் நீதி கேட்டு கோர்ட்டுக்கு போவதாக கருதிக்கொள்ளுங்கள். நீதிமன்றம் ரௌவுடிகளுக்கு தான் அந்த வீடு சொந்தம் என்று தீர்ப்பு எழுதுவதாக வைத்துக் கொள்வோம். இது எவ்வளவு கேலிக்கூத்தாகவும் சட்டவிரோதமாகவும் இருக்கும்.

இதே போலவே பாபர் மசூதி வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேலிக்கூத்தானதும் உண்மைக்கு புறம்பானதும் சட்டத்திற்கு விரோதமானதுமாகும். வீடு விஷயத்தில் அதற்கான மூலபத்திரங்களை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் பாபர் மசூதி இருந்த இடம் ராமனுக்கு சொந்தமானது என்பதற்கோ அல்லது அது ராமன் பிறந்த இடம் என்பதற்கோ எந்த மூலப்பத்திரமும் இல்லை. இதிகாசங்களிலும் மற்ற புராணங்களில் இருந்தும் எடுத்துக்காட்டக்கூடிய மேற்கோள்களைத் தவிர அறிவியல் பூர்வமான ஆதாரம் என்று எதுவும் ஏதுமில்லை.

ஆனால் புராணக்கதைகளைக் கொண்டு கோவில் சொத்துக்களை அபகரிப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26, இந்து கடவுள்களுக்கும் இந்து கோயில் சொத்துகளுக்கும் ஆதரவானவை. இப்பிரிவுகளைக் கொண்டே சிதம்பரம் கோவிலிருந்து பாபர் மசூதி வரை அனைத்தையும் அபகரிக்கின்றனர். தற்போது ஞானவாபி, மதுரா என்று திட்டமிட்டு வருகின்றனர்.

மோடி ஆட்சி காலத்தில், காவி பாசிச அஜெண்டாவுக்கு ஒத்து வருபவர்களையே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நீதிபதிகள் வெளிப்படையாகவே முஸ்லிம் விரோத கருத்துக்களையும் இந்துத்துவா ஆதரவு கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளையும் நீதிமன்றங்களிலேயே வெளிப்படுத்துகின்றன. நீதிமன்ற உத்தரவுகளின் வாயிலாகவே தங்களுடைய பாசிச திட்டங்களை அமல்படுத்தி விடலாம் என்று முயற்சிக்கும் பாஜக விற்கு இதன்மூலம் கணிசமான வெற்றியும் கிட்டியுள்ளது. உதாரணமாக, காஷ்மீருக்கு 370 அந்தஸ்து நீக்கப்பட்டது, பாபர் மசூதி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதித்தது, சிஏஏ வுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது, எதிர்கட்சி தலைவர்களுக்கான பிணை மறுப்பு என பட்டியல் நீளும். பாஜக, இந்துத்துவ ஒத்திசைவாக்கத்திற்கான கள வேலைகளை மக்களிடையே ஒருபுறம் செய்தாலும் மறுபுறமோ காவி பாசிச நடைமுறைக்களுக்கான சட்ட ரீதியான அங்கீகாரங்களை நீதிமன்றங்கள் வழங்குகின்றன என்பதே எதார்த்தம்.

  • அழகு

தகவல் உதவி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன