பாசிஸ்டுகள், தங்களது எதிரி யார் என்பதற்கு எப்போதும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள், தங்களை விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் எனத் தங்களது பட்டியலில் உள்ள அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக கருதுவதுடன், அவர்களை ஒடுக்குவதையும் பாசிஸ்டுகள் திட்டமிட்டுச் செய்கின்றனர். முசோலினியின், இட்லரின் பாசிச இயக்கங்கள் தொடங்கி, நம் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவிப் பாசிஸ்டுகள் வரை எல்லா பாசிச இயக்கங்களும் இதைத்தான் செய்தன, தொடர்ந்து செய்தும் வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் காவிப் பாசிசத்தின் அடியாட்படையாக செயல்பட்டுவரும் இந்து மக்கள் கட்சியின், மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சமீபத்தில் கம்யூனிஸ்டுகள் குறித்தும், ஜனநாயக சக்திகள் குறித்தும், பத்திரிக்கையாளர்கள் குறித்தும் தனது வன்மத்தைக் கக்கியிருப்பதுடன், அவர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
அக்டோபர் 17ம் தேதி அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் இரண்டு பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். அதில் நரேந்திர மோடியின் எக்ஸ் வலைத்தளக் கணக்கினைக் குறிப்பிட்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை மோடி கையாண்ட விதத்தைப் பாராட்டியதுடன், கனடாவில் அவர்கள் எப்படி கையாளப்பட்டார்களோ அதைப் போலவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரையும், குறிப்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும் அவரைப் போன்றவர்களையும் கையாள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், புரட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எனக் காவிப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் அழித்தொழிக்க வேண்டும் எனவும், அதற்கு தான் திட்டமிட்டுத் (ஸ்கெட்ச் போட்டு) தரத் தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்டுகளையும், ஜனநாயக சக்திகளையும், பத்திரிக்கையாளர்களையும் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதும், அழித்தொழிக்கப் போவதாக பகிரங்கமாக மிரட்டுவதும், அவர்களைத் திட்டமிட்டு ஒடுக்குவதும் காவிப் பாசிஸ்டுகளுக்கு புதிதல்ல. இதனை அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்துகொண்டுதான் வருகின்றனர்.
செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர், சி.பி.ஐ. கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்க்கி, பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் என காவி பாசிஸ்டுகளை எதிர்த்து வந்தவர்கள், அதன் கையாட்களால், அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது போல அடுத்தடுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அர்பன் நக்சல்கள் எனக் குற்றஞ்சாட்டி பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவர ராவ், உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் அவர்களைச் சிறையில் அடைத்தது பாசிச மோடி அரசு. இவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்ட, பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிய, ஸ்டேன் பாதிரியாருக்கு, அடிப்படை மருத்துவ வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அவரைப் பாசிசம் சிறையிலேயே கொன்றது.
சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல தனக்கு எதிராக போராடும் மாணவர்களையும் கூட பாசிஸ்டுகள் விட்டுவைத்ததில்லை. மோடி அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் கொண்டு வந்த சிஏஏ-என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராகவும், நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதும், ஜனநாயாக சக்திகள் மீதும் பாசிசம் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராகவும் போராடிய தில்லியில் உள்ள ஜெ.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததுடன் தேச துரோக குற்றச்சாட்டில் பல மாணவர்களைக் கைது செய்து ஒடுக்கியது பாசிச மோடி அரசு. அத்துடன் நில்லாமல் ஏபிவிபி என்ற தனது குண்டர் படையை இறக்கிவிட்டு அடிக்கடி பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இவ்வளவு ஏன், தங்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளைத் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என முத்திரை குத்தி அவர்களைத் தில்லிக்குள் நுழையவிடாமல் தடுத்தது, போலீசைக் கொண்டு தாக்கியதுடன், நாட்டின் எதிரிகளைத் தாக்குவது போல தன் சொந்த குடிமக்கள் மீது டிரோன்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தது.
நாடு முழுமைக்கும் பாசிசக் கும்பல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இந்த ஒடுக்குமுறையின் ஒரு அங்கமாகத்தான் அர்ஜுன் சம்பத்தின் இந்த மிரட்டலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அர்ஜுன் சம்பத் போன்ற பாசிசக் கோமாளிகளின் மிரட்டலுக்கு பயந்தோ, பாசிச மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சியோ, பாசிசத்தின் கொடுஞ்செயல்களுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.
அதேசமயம் தமிழ்நாட்டில், அதுவும் பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் ஒரே கட்சி என போலிப் புரட்சியாளர்களால் விதந்தோதப்படும் திமுகவின் ஆட்சியில், இது போன்று பகிரங்க மிரட்டல் விடுத்த பின்னரும் அர்ஜுன் சம்பத் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அர்ஜுன் சம்பத் எழுதியிருப்பதைப் போல, ஒரு இஸ்லாமியரோ, ஜனநாயகத்திற்காகப் போராடுகின்ற ஏதாவதொரு நபரோ எழுதியிருந்தால் இந்நேரம் திமுக அரசு சும்மாயிருக்குமா என செய்தியாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி சரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகாரளிக்க போவதாகவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார், ஆனால் இதுவரை அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக திமுக அரசு எதையும் செய்யவில்லை.
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்ற சி.ஐ.டி.யு. சங்கத்தினை தனது கூட்டணிக் கட்சி என்று கூடப் பாராமல் அவதூறு செய்ததுடன், சமூக ஊடகங்களில் அவர்களைத் தரம்தாழ்ந்து விமர்சிப்பதுவரைச் சென்ற திமுகவும் அவரது அடிவருடி ஊடகங்களும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக வாயைக் கூடத் திறக்கவில்லை. அர்ஜுன் சம்பத்தை முருக மாநாட்டிற்கு அழைத்து நட்பு பாராட்டும் திமுக அவர் மீது அவ்வளவு எளிதில் நடவடிக்கை எடுக்குமா என்ன?
இனியும் திமுகவோ, இல்லை காங்கிரசோ பாசிசத்தை வீழ்த்தும் என கூறிக் கொண்டிருப்பது தம்மை தாமே ஏமாற்றிக் கொள்வதுடன் மக்களையும் ஏமாற்றுவதாகும் என்பதைப் போலிப் புரட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாசிசம் தங்களது எதிரிகள் யார் எனத் தெளிவாகக் கூறிவிட்டது, அர்ஜுன் சம்பத் வார்த்தைகளில் கூறுவதென்றால் மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், புரட்சியாளர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள்தான் எனவே இனிப் பாசிசத்தின் எதிரிகள் அனைவரும் ஒன்றுகூடி காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முன்னெடுப்போம்!
ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
- அறிவு