காவி கார்ப்பரேட் பாசிச சக்தியான மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. சங்கப்பரிவார கும்பல் தன் பாசிசப் படைகளைக் கொண்டு சிறுபான்மையினரின் மீது தாக்குதல் தொடுப்பது ஒரு புறம் என்றால், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போலீசையும், உள்ளாட்ட்சி அமைப்புகளையும் கொண்டே சிறுபான்மையினரின் வீடுகளை இடிப்பதும், அதனை சட்டபடி சரி என வாதாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. பாஜக கும்பல் ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், இராஜஸ்தான் ஹரியானா போன்ற மாநிலங்களில் எல்லாம் இஸ்லாமியர்களின் வீடுகளும், மசூதிகளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்படுவது தற்போது அன்றாட செய்திகளாகி வருகின்றன.
இஸ்லாமியர்கள் வீடுகளை குறிவைத்து இடிக்கும் இந்த புல்டோசர் நடவடிக்கைகளை எதிர்த்து ஜாமிய உலேமா போன்ற அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது; இதை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கடந்த செப்டமர் 5ம் தேதியன்று நாடு தழுவிய அளவில் புல்டோசர் இடிப்புக்கென வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றது; அதன் பின்பு செப்டமர் 17ம் தேதியன்று கூடிய உச்சநீதிமன்றம் வழக்கின் மீது அடுத்த விசாரணை வரும் வரை புல்டோசர் நடவடிக்கைகளை தன் அனுமதியின்றி மேற்கொள்ள கூடாது எனத் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை பெயரளவுக்கு கூட மதிக்காமல் காவி பாசிஸ்டுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் கர்ணி விஹார் பகுதியில் சரத் பூர்ணிமா எனும் இந்து மதக் கொண்டாட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நசீப் மற்றும் அவரது மகன் பீஷம் செளத்ரியின் வீடு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அரசியல் பாமரர்கள் கருதுவதைப் போல உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவி பாசிஸ்டுகள் தன் புல்டோசர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை; முன்னிலும் அதிகமாக மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் இத்தீர்ப்புக்கு பிறகு அளிக்கும் விளக்கமே சாட்சியாக உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் புல்டோசர் வழக்கு விசாரணை நடைபெறும் இந்த சமயத்திலும் கூட உ.பியின் மின்சாரத்துறை அமைச்சரான சர்மா என்பவர் மாபியா மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களின் மீதான சட்டப்படியான நடவடிக்கையே புல்டோசர் நடவடிக்கை; இதில் தவறு ஒன்றும் இல்லை; இதை அரசு நிறுத்தப்போவதில்லை என்கிறார்; உ.பி முதல்வர் யோகியோ, புல்டோசர் அனைவரின் கைகளுக்கும் லாவகமாக பொருந்தாது; புல்டோசர் போல திறனும் உறுதியும் இருந்தால் தான் புல்டோசரை பயன்படுத்த முடியும் என்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் கூட புல்டோசர் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அஸ்ஸாம் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியும் காவி பாசிஸ்டுகள் பணியாமல் ஏன் இதை தொடர்ந்து வருகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்களின் புல்டோசர் நடவடிக்கை குறித்த விளக்கத்தை நாம் பரிசிலிக்க வேண்டும். புல்டோசர் நடவடிக்கைகளை இஸ்லாமியர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் இலக்கு என்று காவி பாசிஸ்டுகள் அறிவித்து செயல்படுத்துவதில்லை; இது மாபியா மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீதான சட்டப்படியான நடவடிக்கை என்று விளக்கமளித்தே தமது புல்டோசர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சமீபத்தில் புல்டோசர் நடவடிக்கைகளின் மீதான பிரியங்கா காந்தியின் விமர்சனத்துக்கு பதில் கூறும் போது, எந்தவொரு நபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; சட்டத்தின் ஆட்சி இருக்கிறது; சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அரசியலமைப்பு விதிகளின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
சட்டமுறைகளை பயன்படுத்தியே புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளை தொடருவதாக காவிபாசிஸ்டுகள் கொக்கரிக்கிறார்கள் அதனாலேயே யாருக்கும் அஞ்சாமல் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்கிறார்கள்; இதனால் தான் இந்த புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜக மாநில அரசுகளையும் அதன் அதிகாரிகளையும் உச்ச நீதிமன்றத்தால் சட்டப்படி தண்டிக்கவும் முடியவில்லை; கேள்விக்கு உட்படுத்தவும் முடியவில்லை.
இந்த புல்டோசர் தாக்குதலை பாசிஸ்டுகள், இஸ்லாமியர்களிடமிருந்து நேரடியாக தொடங்கவில்லை; முதன் முதலில் தொடங்கும் போது மாபியா மற்றும் குற்றவாளிகளின் மீதான சட்டப்படியான நடவடிக்கை என்று தான் தொடங்கினார்கள். காவி பாசிஸ்டுகளின் இப்புல்டோசர் தாக்குதல் உ.பியை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே என்பவன் வீட்டிலிருந்து துவங்கப்பட்டது; எட்டு போலீசாரை கொன்றதற்காக அவன் வீட்டின் மீது அம்மாநில முதல்வர் யோகி புல்டோசரை ஏவினார். போலீசாரை கொன்றவன் மீது நடத்தப்பட்ட சட்டநடவடிக்கையாக; பழிவாங்கும் ஒரு நிகழ்வாக இதை முன்னிறுத்தினார்கள் காவி பாசிஸ்டுகள்.
இதன் பிறகு 2022 ஆம் ஆண்டில் உபி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது காவி கும்பல், யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள், மாபியாக்கள், கலவரக்காரர்களுக்கு எதிராக புல்டோசரை பயன்படுத்துவார் என்று துணிச்சலோடு பிரச்சாரம் செய்தனர்.
அந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை நிறுத்தும் பொருட்டு புல்டோசர்களை மையக்கருவாக கொண்டு பல இந்துத்துவா பாப் பாடல்கள் காவி பாசிஸ்டுகளால் பரப்பப்பட்டன; புல்டோசர் பாடல்கள் முழங்க காவி பாசிஸ்டுகள் தேர்தல் பிரச்சாரத்தில் பவனி வந்தனர். இந்துக்களின் எதிரிகள் இஸ்லாமியர்களே; இஸ்லாமியர்கள் இந்துக்களின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என இந்து மத முனைவாக்கம் செய்து உபி தேர்தலில் வெற்றி பெற்றனர்; இந்து மதமுனைவாக்கத்தின் விளைவாக உபி தேர்தலில் யோகி 41% ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார்; காவி கும்பல்களால் உபி முதல்வர் யோகி ’புல்டோசர் பாபா’ என பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
உ.பியில் தொடங்கிய இப்புல்டோசர் நடவடிக்கைகள் இதற்கு பிறகு பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பரவியது; ம.பி முதல்வர் செளஹானோ புல்டோசர் மாமா என பெருமையுடன் காவிக்கும்பல்களால் அழைக்கப்பட்டார். காவிக்கும்பல்கள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் எல்லாம் இஸ்லாமியர்கள் வீடுகள் குறிவைத்து இடிக்கப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உ.பியில் பாஜக தேசிய தொடர்பாளார் நுபுர் சர்மா, ஒரு தொலைக்காட்சி பேட்டியில் முகம்மது நபியை தரக்குறைவாக பேசினார். இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் அந்த வார வெள்ளிக்கிழமையன்று தொழுகை முடிந்த பிறகு நபி மீதான அவமதிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதை தொடர்ந்து இப்போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதற்கு அடுத்த நாளே போராட்டக்கார்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட இஸ்லாமியர்களின் வீட்டை இடித்து தள்ளியது உபி மாநில அரசு.
இந்த புல்டோசர் இடிப்பு சம்பவத்தையொட்டி யோகியின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் என்பவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பிறகும் ஒரு சனிக்கிழமை வரும் என புல்டோசர் புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டார்; அம்மாநில பாஜக தலைவரான ஸ்வதந்திர தேவ் சிங், புல்டோசர் நிழலின் கீழேயுள்ள வீட்டில் வசிப்பவர்கள் யாரும் மற்றவர்கள் மீது கற்களை வீசமாட்டார்கள் என பகிரங்கமாக மிரட்டினார்.
இஸ்லாமியர்கள் போராட்டங்களில் பங்கேற்றாலே அதை குற்றமாக கருதியும்; அதில் நடக்கும் வன்முறைக்கு அவர்களை குற்றஞ்சாட்டியும் அவர்களின் வீட்டை இடித்து தள்ளுவது என புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.
கடந்த பிப்ரவரி மாதம் அம்னெஸ்டி என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் அவர்கள் விசாரித்த 128 கட்டிட இடிப்பு சம்பவங்களில் மட்டும் 617 இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; புல்டோசர் நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளிலே நடைப்பெற்று வருவதாகவும் கூறுகிறது.
காவி பாசிஸ்டுகளால் மேற்கொள்ளப்படும் புல்டோசர் நடவடிக்கைகளின் தாக்குதல் இலக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து போராடுபவர்களும்; உழைக்கும் மக்களும்; ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் அடங்குவர் என்பதை அவர்கள் தற்போது நிருபித்து வருகின்றனர். காவி பாசிஸ்டுகள் வெறுமனே இஸ்லாமியர்களின் வீடுகளை மட்டும் இடிக்கவில்லை; தில்லியில் சி.ஏ.ஏ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீடுகளையும், ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்களின் வீடுகளையும், பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடுபவர்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.
சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடிய ஜே.என்.யூ பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவியான அபிரீன் பாத்திமா உபியின் பிரக்யாரஜின் பகுதியை சார்ந்தவர். சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடினார் என்பதாலாயே அவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பப்ட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூரில் இருந்து அஸ்ஸாமில் குடியேறிய மூன்று குக்கி குடும்பங்களின் வீடுகள் அஸ்ஸாம் அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ம.பியில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாக 11 பழங்குடியினர் வீடுகள் இடிக்கப்பட்டன. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பணம் வசூலித்ததாக சி.ஐ.டியில் புகார் கொடுத்த அஸ்ஸாமை சார்ந்த ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் துலால் போராவின் வீடு இடிக்கப்பட்டது.
அஸ்ஸாமின் பாஜக எம்.எல்.ஏ பிஜோய் மலோகர் என்பவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்தால் உங்களது வீடு எங்கே இருக்கிறது என எனக்கு தெரியும்; ஜேசிபி உங்கள் வீட்டின் முன் வராமல் இருக்க நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே பேசியிருக்கிறார்.
நம்மை எதிர்க்கும் துணிவு எவருக்கும் இல்லை; ஆட்சியதிகாரம் நம் கையில் இருக்கிறது; நாடு முழுவதும் இந்துத்துவ அலை வீசுகிறது என்கிற திமிரோடு காவி பாசிஸ்டுகள் செயல்படத் துணிந்திருப்பதையே இவை காட்டுகின்றன
ஆட்சியில் இருக்கும் பாசிஸ்டுகள் புல்டோசர் நடவடிக்கை எனும் பாசிச தாக்குதலை இன்றுள்ள சட்டமுறைகளை பயன்படுத்தியே மேற்கொண்டு வருகிறார்கள். இன்று இஸ்லாமியர்கள் வீடுகள் தானே இடிக்கப்படுகிறது என நாம் ஒதுங்கி சென்று விட கூடாது; இன்று இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் இக்காவி பாசிஸ்டுகள், நாளை தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களும் காவி- கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து தங்களது உரிமைகளுக்காக போராடினால், அவர்களது வீடுகளையும் புல்டோசர் மூலம் இப்பாசிஸ்டுகள் இடிப்பது நிச்சயம். அனைத்து உழைக்கும் மக்களின் மீது பாசிச ஆட்சியை நிறுவவே பாசிஸ்டுகள் புல்டோசர் நடவடிக்கை எனும் தங்களது கத்தியை கூர்தீட்டி கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் இக்காவி- கார்ப்பரேட் பாசிஸ்டுகளால் பறிக்கப்படும் என்கிற உண்மையை உணர்ந்து துணிவுடன் இப்பாசிஸ்டுகளையும் அவர்களின் பாசிச நடவடிக்கைகளையும் நாம் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும்!
- தாமிரபரணி