சென்னைக்கு அருகில் கவரப்பேட்டை எனும் இடத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, பீகாரில் இருந்து மைசூரை நோக்கி சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதுடன், அவற்றில் பயணம் செய்த 19 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்களில் நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து நடந்து ஒரு வார காலத்திற்குள்ளாகவே அசாம் மாநிலத்தில் டிப்ளாங் ஸ்டேஷன் அருகில் அகர்தலாவிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த அகர்தலா லோகமாண்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்திலும் பயணிகள் யாருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன, அவற்றில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.
இது போன்ற ரயில் விபத்துக்கள் ஏற்படும் போதெல்லாம் ஒன்றிய அரசும், ரயில்வே துறையும், பத்திரிக்கைகளும் இவற்றிற்கு ரயில்வே தொழிலாளர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறிவிடுகின்றனர் அல்லது சதி வேலை காரணமாக இந்த விபத்துகள் நடந்திருக்கலாம் என கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தனியார்மயமாக்கல் நடவடிக்கையின் காரணமாக ரயில்வே துறையின் கட்டமைப்பே ஒட்டுமொத்தமாக சீரழிந்து போயிருப்பதுதான் ரயில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதற்கு காரணம் என்பதை இவர்கள் மறைத்து மடைமாற்றுகிறார்கள்….
அண்மையில் கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்திலும் கூட இப்படியானதொரு கதையை ஒன்றிய அரசு கிளப்பிவிட்டது. மேலும் தம்மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தேசிய புலனாய்வு அமைப்பையும் இறக்கிவிட்டது. இதன்மூலம் விசாரணை என்ற பெயரில் மக்கள் மத்தியில் பீதியை கிளம்பி வருகிறது.
சென்ற ஆண்டு ஒரிசாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த போதும் இதே போன்று தீவிரவாதிகளின் சதி செயல் காரணமாக அந்த ரயில் விபத்து நடந்ததாக கதையளந்தனர். ஆனால் விசாரணைக்குப் பிறகு ரயில்வே சிக்னல் பிரச்சனை காரணமாகத்தான் இந்த ரயில் விபத்து நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிக்னல் ஃபெயிலியர், ரயில்கள் தடம் புரண்டது என ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ரயில் விபத்துகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்திய ரயில்வேயின் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த விபத்துகளில் பெரும்பாலான சமயங்களில் விபத்துகளுக்கான காரணம் ரயில்வே ஊழியர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் ரயில் ஓட்டுநர்கள் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கார்டுகள் என்று அழைக்கப்படும் ரயில் மேனேஜர்கள் சிக்னலில் வேலை செய்பவர்கள் என ரயில்வே ஊழியர்களின் மீதே பழி சுமத்தப்படுகிறது.
பல தருணங்களில் இவர்கள் விபத்துகளின் போது காயம் அடைவதோ அல்லது இறந்து போகின்ற சம்பவங்கள் நடந்தாலும் கூட இவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு ஊடகங்களில் அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தினை ரயில்வே அமைச்சரே முன்னின்று நடத்துகிறார்.
ஆனால் இப்படியான விபத்துகள் நடப்பதற்கு மூலக்காரணம், இரயில்வே துறையை தனியார்மயமாக்குகின்ற முயற்சியே ஆகும். இந்தியாவில் இரயில் சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருப்பில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டது. மேலும் தனியார் முதலாளிகளுக்கு இரயில்வே துறையைத் தாரைவார்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இன்று செவ்வனே செய்து வருகிறார்கள்.
இந்திய ரயில்வே பெயரளவிற்குப் பொதுத்துறை நிறுவனமாக இன்று இயங்கிவருகிறது. ஆனால் ஒரு தனியார் நிறுவனம் போல இலாப நோக்கத்துடன் தான் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை விட இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. பேசஞ்சர் ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளும், செகண்ட் கிளாஸ் பெட்டிகளும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யும் அளவிற்கு மிகவும் அதிக கட்டணம் வசூலிக்க கூடிய குளிர்சாதன வசதிகளைக் கொண்ட பெட்டிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்கிவரும் வந்தே பாரத் போன்ற இரயில்கள் மட்டுமே புதிதாக அறிவிக்கப்படுகிறது. இந்த இரயில்கள் மூலம் அதிக அளவில் வருமானம் வருகிறது என்பதால் மற்ற இரயில்களைப் படிப்படியாக குறைத்து விட்டு அனைத்து ரயில்களையும் வந்தே பாரத் சதாப்தி போன்ற அதிவிரைவு குளிர்சாதன ரயில்களாக மாற்றுவது என்பது ரயில்வே துறையின் திட்டமாக இருக்கிறது.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் குறைந்த அளவில் இருக்கின்ற தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ரயில்களை இயக்குகின்றனர் இரயில் தண்டவாளங்களைப் புதுப்பிப்பதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பது தேவையில்லாத செலவு என்று கருதப்படுகிறது.
இந்திய இரயில்வேக்கு சொந்தமான சிக்னல் தொழிற்கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன அவற்றின் வேலைகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடப்படுகின்றன. இரயில்வே சிக்னல்களை நிறுவுவதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்படுவதால் ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
இரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் சிக்னல்கள் அமைக்கும் பொறுப்பு இருந்தவரை நாடு முழுவதும் ஒரே தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இதனால் இரயில்வே பணியாளர்கள் அந்த ஒரு சிக்னல் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது ஒரே பகுதியில் கூட வெவ்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு சிக்னல்கள் அமைக்கப்படுவதால் இரயில் ஓட்டுநர்கள் உட்பட இரயில்வே பணியாளர்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கு தேவையான முறையான பயிற்சி என்பது அவர்களுக்கு அளிக்கப்படுவது இல்லை.
இரயில் ஓட்டுநர்களுக்கு போதுமான அளவிற்கு ஓய்வு அளிக்கப்படுவது இல்லை என்பது மற்றுமொரு முக்கியமான பிரச்சனையாக தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படுகிறது. அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளின் பரிந்துரையின் படி இரயில்வே ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக இரவுப் பணி செய்யக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு கடைபிடிக்கப்படுவது இல்லை. தொடர்ச்சியாக 4 முதல் 5 நாட்கள் வரை இரயில்வே ஓட்டுநர்கள் இரவு பணி செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் இரயில்வே ஓட்டுநர்களை தட்டி எழுப்பி இரயிலை ஓட்ட சொல்லும் நிகழ்வு நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு இரயில் விபத்துக்கள் இரயில்வே ஓட்டுநர் தொடர்ந்து நான்காவது நாள் ஐந்தாவது நாள் என இரவுப் பணியில் இரயிலை இயக்கியதால், இரயில் ஓடிக்கொண்டிருக்கும் போது ஓட்டுநரும், துணை ஓட்டுனரும் கண நேரம் கண் அயர்ந்ததில் இரண்டு இரயில் விபத்துக்கள் கடந்த ஆண்டு ஏற்பட்டிருக்கின்றன. இந்த இரயில் விபத்துகளில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இரயில் ஓட்டுநர் காலியிடங்களை நிரப்பாமல் இருக்கின்ற ஓட்டுநர்களை அதிகமாக வேலை வாங்குவதன் காரணமாக இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஓட்டுநர்கள் என்று மட்டுமல்ல இரயில்வே துறையில் பணியாற்றும் மற்ற முக்கியமான ஊழியர்களின் காலியிடங்கள் நிரப்பப்படுவது இல்லை.
இரயில் ஓட்டுநர்கள் மீது சுமத்தப்படும் இந்த அதீத வேலை சுமைகளை எதிர்த்து அகில இந்திய இரயில் ஓட்டுநர்கள் சங்கம் கடந்த ஜூன் மாதத்தில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. போதுமான அளவிற்கு ஓய்வு கொடுக்கப்படாதது தொடர்ந்து பத்து மணி நேரங்களுக்கும் மேலாக இரயிலை இயக்கச் சொல்வது தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் அதிகமாக இரவு நேர பணியில் ஈடுபடுத்துவது ஆகியவற்றை எதிர்த்து இரயில் ஓட்டுனர்களின் இந்த போராட்டம் ஒரு மாத காலம் அளவிற்கு நடைபெற்றது.
இது ஒரு புறம் என்றால் மற்றொருபுறம் பெரும்பாலான இந்திய இரயில் தண்டவாளங்கள் மிகவும் பழையதாகவும் காலாவதியானதாகவும் இருக்கின்றன. இரயில்கள் தடம் புரளுவதற்கு தண்டவாளங்கள் பழுதடைந்து இருப்பது பிரதான காரணமாக இருக்கிறது. இவை மட்டுமல்ல பாலங்களும் சுரங்கப்பாதைகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வருங்காலங்களில் அவற்றில் பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்களை கொண்டிருக்கிறது.
தில்லி மும்பை சென்னை கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் இந்திய இரயில்வேயின் முக்கியமான பாதையில் தான் (Trunk route) 80% இரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தப் பாதையில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு புதிய தண்டவாளமோ, வழித்தடமோ போடப்படவில்லை.
எதற்கெடுத்தாலும் சீனாவோடு போட்டி போடும் இந்திய அரசு புதிய இரயில் பாதைகளை அமைப்பதில் மிகவும் பிந்தங்கியிருக்கிறது. 1995-ம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தியாவில் வெறுமனே 5000 கிலோமீட்டர் அளவிற்குதான் புதிய இரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன இதுவே சீனாவில் 90 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய இரயில் பாதைகள் போடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட இரயில் வழித்தடங்கள் தான் இன்றுவரை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பாதையையாவது முறையாக பராமரிக்கின்றனரா என்றால் அதுவும் கிடையாது. 2023-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையின்படி ஆண்டுதோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிக்னல் ஃபெயிலியர் சம்பவங்களும் ஆயிரக்கணக்கான தண்டவாளங்கள் மற்றும் இதர இரயில் உபகரண கோளாறுகளும் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே துறைக்கு பல நூறுகோடி ருபாய் நஷ்டம் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் உருவாக்கியுள்ளன.
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் இந்த துறைக்குள் புகுத்தப்படும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக இந்திய இரயில்வேத்துறையின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே சீரழிந்துபோயிருக்கிறது. ஆனால் இவை எதுவும் வெளியே தெரியாமல் மூடி மறைத்து வருகின்றனர்.
எந்த ஒரு இரயில் விபத்து நடக்கும் பொழுதும் பத்திரிக்கைகள் இரயில்வே துறையில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் இந்த விபத்திற்கு காரணம் என்ற கோணத்தில் பார்ப்பதோ பேசுவதோ கிடையாது. பத்திரிகைகள் அனைத்திற்கும் கணிசமான அளவிற்கு இரயில்வே துறையிலிருந்து விளம்பரங்கள் வருவதால் அந்த விளம்பர வாய்ப்பை இழப்பதற்கு அவை தயாராக இல்லாத காரணத்தினால் இரயில்வே துறையில் இருக்கக்கூடிய சீர்கேடுகளைப் பற்றி அவர்கள் எழுதுவது இல்லை. ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கும் பொழுது இந்த விபத்திற்கான காரணத்தை தொழிலாளர்கள் மீது சுமத்துவதையே பத்திரிகைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் அவை இரயில்வே துறைக்கு தமது விசுவாசத்தை காட்டுகின்றன.
இரயில்வே துறையில் முன்னெடுக்கப்படும் தனியார்மய நடவடிக்கைளை நிறுத்தி, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சீர் செய்யாதவரையில் ரயில் விபத்துக்கள் நடப்பதும் அதில் விலைமதிப்பில்லாத உயிர்கள் பறிபோவதையும் தடுக்க முடியாது.
- அறிவு
தகவல் உதவி
- https://www.indiatoday.in/india/story/train-derailment-in-indian-railways-good-train-passenger-accident-2583843-2024-08-17
- https://thewire.in/government/railway-organisations-trade-unions-safety-ashwini-vaishnaw