மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில், மாநில கல்லூரி மாணவரான சுந்தர் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதே வேளையில் சுந்தர் உயிரிழப்புக்கு காரணமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையிலான மோதல் என்பது வெட்டுக்குத்துகளுடன் கடந்த பல வருடங்களாக நடந்து வந்தது. இன்று, கொலையில் வந்து முடிந்துள்ளது. ஒரே கல்லூரியின் ரூட்டுக்குள்ளும் கூட யார் “தல” என்கிற போட்டியில் அவ்வப்போது மோதல் நடப்பதும் உண்டு.
இதுபோன்ற மோதல்களில் ஈடுபடும் (பொதுவெளியில் ஒழுங்கின்மையுடன் நடக்கும்) ஒரு சில மாணவர்களை வைத்து ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் கிரிமினல்களாக, வன்முறையாளர்களாக, பொறுக்கிகளாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக போலீசை நிறுத்தி கேவலப்படுத்துகிறது. மேலும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும், வாழும் சூழ்நிலைகளையும் இழிவுபடுத்தி ஊடகங்களில் விவாதிப்பது போன்றவைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதற்கு காரணமான, சீரழிந்த இந்த சமூகத்தின் நடத்தை குறித்து விவாதிப்பது இல்லை. இது போன்ற விவாதங்கள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு ஒப்பானது என ஒதுக்கி தள்ளுவோம்.
வசதியுடன் வாழ்வதற்கான வருவாய் இல்லாததன் விளைவே, ஏழை, எளிய உழைக்கும் மக்கள் குப்பைக் கூளங்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அரசும் அதன் வர்க்க குணத்திற்கேற்ப சிங்காரச் சென்னை என்கிற பெயரில் அவர்களை அப்புறப்படுத்தி அகதிகளாக்க முனைகிறதே தவிர ‘அண்ணா நகரைப்’ போல அலங்கரிக்க விரும்பவில்லை. இங்கு வசிக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பிள்ளைகளின் எதிர்காலமே, அரசின் கலை – அறிவியல் கல்லூரிகளும், சட்டக் கல்லூரிகளுமே. படிப்புக்கான கட்டணம், பராமரிப்பு – செலவு போன்றவைகளை தங்கள் பெற்றோர்களால் ஈடு செய்ய இயலாத போது பெரும்பான்மை மாணவர்கள் கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் திருமணங்களில் உணவுப்பரிமாறுவது, மால்கள், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்வதன் மூலம் தங்களைப் பராமரித்துக் கொண்டிருக்கின்றனர். கல்லூரிப் படிப்பையும் தொடர்கின்றனர்.
இவற்றில் சில மாணவர்கள், அரசு திணித்த மறுகாலனியாக்கக் கொள்(ளை)கையால் விளைந்த நுகர்வுவெறிக்கு, பழியாகி திசை மாறி போவது என்பது நடந்தேறுகிறது. இதை பயன்படுத்தி, ஆளும் வர்க்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், அரசின் அடக்குமுறை துறையான போலீசும், சமூக விரோதிகளும் தங்களுடைய இலக்கை அடைய இவர்களை நிரந்தர குற்றவாளிகளாக மாற்றுகின்றனர்.
ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களை ‘தாதா’வாக உருவாக்கிக் கொள்ள, தங்களுக்குள் மோதிக் கொள்வதன் விளைவாக வெட்டுக்குத்துக்களும், கொலைகளும் நடந்தேறுகின்றன. இந்த ‘தாதா’க்கள்தான் ஏழை, எளிய மக்கள் வாழும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து சமூக விரோத செயலை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஏதுவாக போலீசுக்கும் மாமூலை அழுத்தி, அமுக்கி விடுகின்றனர். இவர்களின் வாரிசுகள்தான் கல்லூரிகளிலும், ‘தல’யாக ரூட்டிலும் ‘தல’யாக வலம் வருகின்றனர்.
இதற்கு எதிராக போராடும் தன்னார்வலர்களையும் தட்டி வைக்கின்றனர். மீறினால் கொலையும் செய்கின்றனர். இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமெனில், இச்சமூகத்தைச் சீரழித்து வரும் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதி – போலீஸ் – சமூக விரோதி என்கிற முவர் கூட்டணியை ஒழித்தாக வேண்டும். இதற்கு ஒரு மாபெரும் மக்கள் திரள் எழுச்சி தேவை.
இதற்கு ஒரு முன்னோட்டமாக எதிர்காலத்தை வடிவமைக்க வல்லமைப் படைத்த மாணவர்கள் தங்களை ஒரு அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு கல்லூரியைப் பொருத்தவரை மாணவர் சங்கங்களை உருவாக்க வேண்டும். மேலும், “கல்வி என்பது ஒரு மாணவரிடம் உள்ளே பொதிந்துள்ள ஆற்றலை வெளிக் கொணர்வது மூலம்தான் மாணவர்களிடமிருக்கும் தனித்திறன் என்ன? அவர்களிடமிருக்கும் பண்பு நலன்கள் என்னென்ன? தலைமைத்துவப் பண்புகள் என்னென்ன? சமூகப் பார்வை என்ன? செயலூக்குப் பண்புகள் என்னென்ன? என்பதையெல்லாம் கண்டுபிடித்து வளர்ப்பதில்தான் நற்குடி மக்களை உருவாக்கும் பணி உள்ளது. இதில்தான் நற் சமுதாயம் உருவாக்கும் செயல்பாடுகள் உள்ளன.” என்கிற பேராசிரியர் பழனித்துறையின் கூற்றை அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் பதிய வைக்கப் போராடுவோம்.
வாழும் பகுதியைப் பொருத்தவரை இளைஞர்களையும் இணைத்து மக்கள் நல மன்றங்களை உருவாக்க வேண்டும். பகுதியின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றப் போராட வேண்டும். இடையூறாக உள்ள அனைத்து வகை சமூக விரோத செயல்களையும் முறியடித்தாக வேண்டும். இதற்கு மாணவர்களிடமும், பகுதி மக்களிடமும் ஜனநாயக உணர்வை – பண்பாட்டை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும். இதன் மூலம் கல்லூரியிலும், பகுதியிலும் சமூக விரோத செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட முடியும். மாணவர்களும் – இளைஞர்களும் சமூக விரோதிகளாக மாற்றப்படுவதைத் தடுக்கவும் முடியும்.
- மோகன்