காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவை பாதுகாக்க இந்துக்களாக அணி திரள வேண்டும் என்று அப்பட்டமான ஆரிய – பார்ப்பனிய மத வெறியைக் கக்கியுள்ளர்.
இதுவரை, “மத நல்லிணக்கம், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு, ஒருங்கிணைந்த வளர்ச்சி” என்று வேடம் தரித்து வந்த சங்பரிவராக் குள்ள நரிகளின் சாயம் வெளுக்கத் துவங்கிய விட்டன. இதன் முன்னோடியான கோல்வால்கரின் ‘இந்தியா என்பது இந்துக்களுக்கான தாய்நாடு, சிறுபான்மையர்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இங்கு வாழ வேண்டுமானால், பாரத பண்பாட்டை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லையேல், அவர்களுக்கு இங்கு இடமில்லை என்கிற வன்மத்தையும் சூட்சகமாக வெளிப்படுத்தி விட்டார்.
மதச்சார்பின்மை கோட்பாட்டை புறக்கணிப்பதோடு, பள்ளிகளில் மதசார்பற்ற பாடத்திட்டங்களை நீக்க போராடுவதோடு, பள்ளி வளாகங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டுமென்கிறார் மோகன் பகவத். இதற்கேற்ப, ஒவ்வொரு விஜயதசமி தினத்தன்றும் நாடெங்கும் நிழல் ராணுவங்களின் அணிவகுப்பை நடத்தி, எதிர்காலம் அனைத்தையும் பாசிசப் படைகளாக வளர்த்தெடுத்து களமிறக்குகிறது ஆர்எஸ்எஸ்.
இதுவரை, விஜயதசமியன்று அனைத்து அரசு பள்ளிகளையும் திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்துவது என்கிற இல்லாத நடைமுறையை இப்போது திராவிட அரசு திணித்துள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை போன்ற சில மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையை நடத்தியும் உள்ளனர். இதன் மூலம், ஆரிய – பார்ப்பனியப் பண்பாட்டை விஜயதசமியன்று, தமிழ்நாட்டு மக்களிடம் விதைப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை திராவிட ஆட்சியும் நிரூபித்து விட்டது.
மதசார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்கிற உறுதி மொழியுடன் பதவியில் ஏறியுள்ள, ஒன்றிய தலைமை அமைச்சர் மோடியும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தங்கள் பங்கிற்கு ‘இராவண தகனம்’ விழாவில் அன்பு எய்தும், ஆயுத பூஜையன்று, ராணுவ தளவாடங்களுக்கு பூஜை செய்தும் ஆரிய – பார்ப்பனியப் பண்பாட்டை நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமே இந்து ராஷ்டிரத்தையும் விரைவில் இரவோடு, இரவாக பணமதிப்பிழபைப் போல அறிவிக்க முடியும் என்பதை நிறுவியுள்ளது.
மக்களின் கடவுள் நம்பிக்கையை மத வெறியாக மடை மாற்றிக்கொண்டு செல்வதற்கான வாகனமாக ஆயுத பூஜையையும், விஜய தசமியையும், தசரா பண்டிகையையும் பாசிச ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடி கும்பல் பயன்படுத்துகிறது. மேலும், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஆரிய – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும் ‘இந்துக்களுக்கு சிறு இடையூறு வந்தாலும் அரசையோ, சட்டத்தையோ அணுகாமல், களத்தில் இறங்கி மோத வேண்டும்’ என்று தனது வானரப் படைகளைத் தாக்குதலுக்கு தயாராகும்படி வழியமைத்துக் கொடுத்துவிட்டார். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஆப்பு வைத்து விட்டார்.
இதன் மூலம், சனாதான எதிர்ப்பாளர்களையும், மதசார்பற்றவர்களையும், ஆர்எஸ்எஸ்-இன் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களையும் களத்தில் மோதி வீழ்த்த வேண்டும் என்பதையும் நைச்சியமாக மோகன் பகவத் அறிவித்துவிட்டார்.
இனி என்ன? நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஓரங்கட்டி வைப்போம். அவர் ‘அறிவிப்பின் படியே’ பாசிச எதிர்ப்பு சக்திகள் உட்பட, உழைக்கும் மக்கள் அனைவரும் எதிரணியாக ஒன்றுபட்டு களத்தில் இறங்குவோம். ஆரிய – பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்கும் பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதுவோம். இத்துடன் சேர்த்து காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்துவோம்.
- மோகன்