பத்திரிகை செய்தி
மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம், பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று கூறுவதுதான் பொருத்தமானதாகும்.
22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்ததற்கு எதிராகவும், பாஜகவின் இந்து மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் தொடர்ந்து போராடியவர்தான், டெல்லி பல்கலைகழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக பணியாற்றிய சாய்பாபா.
கார்ப்பரேட் கொள்ளைக்காகவே வளர்ச்சி எனும் பெயரில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டன. அதை தீவிரமாக அமல்படுத்த மன்மோகன் சிங் அரசு தயங்குகிறது என்னும் காரணத்தால், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் 2014-ல் பாசிச மோடியை பிரதமராக்கினர். பேராசிரியர் சாய்பாபா போன்ற அறிவுத்துறையினர் சுதந்திரமாக வெளியில் இருந்தால், கார்ப்பரேட் திட்டங்களை அம்பலப்படுத்துவார்கள், எதிர்ப்பார்கள் என்று பயந்தனர். அதனால், அறிவுத்துறையினர், ஜனநாயகச் சக்திகளை ஒடுக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு செயல்பட்ட மோடி அரசு, பேராசிரியர் சாய்பாபா மீதும் ஒடுக்குமுறையை ஏவியது.
அவர் வீட்டை சோதனையிட வேண்டும் என்று நுழைந்து, அவரது கணிணியை போலிசு கைப்பற்றியது, சில நாட்கள் கழித்து அவரிடம் அவரது கடவுசொல்லைக் கேட்டுபெற்றது. பின்னர் 8 மாதம் கழித்து கல்லூரிக்கு காரில் சென்றுகொண்டிருந்தவரை வழிமறித்து, அவரை மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருப்பதாக பொய்க் குற்றஞ்சாட்டி, கொடிய அடுக்குமுறை சட்டமான ஊபா சட்டத்தில் கைது செய்தனர். ஜோடனை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, ஆயுள் தண்டனையும் கொடுத்தது, மோடி அரசு.
பேராசிரியர் சாய்பாபா 90 சதவீதம் ஊனமானவர். சக்கர நாற்காலி உதவியின்றியோ இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட பிறருடைய உதவியின்றியோ அன்றாட வேலைகள் எதையும் செய்ய முடியாதவர். சிறையில் இருந்த அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்ட போதும், மற்ற நேரத்திலும் முறையாக மருத்துவம் வழங்க கோரியும், படிப்பதற்கு புத்தகம் வழங்க கோரியும், மேலும் 24 மணி நேரமும் சிறையிலேயே தன்னைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவை அகற்றக்கோரியும், தனது மோசமடைந்து வரும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்க கோரியும் அல்லது வீட்டுக்காவலில் வைக்க கோரியும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கும் தன்தாயைப் பார்க்க வேண்டும் என சட்டபோராட்டம் மற்றும் சிறையிலேயே உண்ணாவிரத போராட்டம் என்று பல போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். தனது தாய்மொழியான தெலுங்கில் கூட குடும்ப உறவினர்களுக்கு கடிதம் எழுத மோடி அரசு அனுமதிக்கவில்லை.
அவரோடு கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உரிய நேரத்தில் மருத்துவம் தரப்படாததால் இறந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி இரு நீதிபதிகள் அடங்கிய நாக்பூர் உயர்நீதிமன்ற அமர்வு, பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 6 பேர் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது. குறிப்பாக, இரு நீதிபதிகள் அமர்வானது தனது உத்தரவில், ஊபா சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது தகுதியற்றது; தேசபாதுகாப்பு என்ற பலிபீடத்தில் நீதி பரிபாலன முறைகளை பலிகொடுக்க முடியாது என்று கூறி மற்ற ஏதேனும் வழக்குகளில் இந்த 5 பேரும் இல்லை என்றால் அவர்களை காலம் தாழ்த்தாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த தீர்ப்பு வந்த அதே நாளில், மகாராஷ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது; பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி பெறப்பட்ட விடுதலையை, அதே நாளில் உச்சநீதி மன்றம் பறித்தது. மோடியின் பாசிச ஆட்சியில் உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்காக போராடுபவர்களுக்கும் நீதியல்ல, அநீதிதான் உடனுக்குடன் வழங்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். பின்பு பல மாத சட்டப்போராட்டங்களுக்கு பிறகு, பேராசிரியர் சாய்பாபா மீதான வழக்கை வேறொரு உயர்நீதிமன்ற அமர்வு மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது. அதன்படி, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபாவை கடந்த மார்ச்(2024) மாதம் நிரபராதி என விடுதலை செய்தது.
பாசிச மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் மோடி அரசை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பல அறிவுத்தறையினர் கொடிய உபா வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு சிறைவைக்கப்பட்ட ஸ்டேன்சுவாமி சிறையிலேயே கொல்லப்பட்டார். பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய அவரது நண்பர் ஹேனி பாபு என்பவரும் அரசுக்கு எதிராக சதிவேலை செய்தார் என்று குற்றஞ்சாட்டி இன்றுவரை சிறையில் அடைத்துள்ளது, பாசிச மோடி அரசு. சாய்பாயாவையும் சிறையிலேயே வைத்திருப்பதன் மூலம் கொல்ல முயற்சித்தது, மோடி அரசு.
கார்ப்பரேட் திட்டங்களை எதிர்த்தும் ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும் மக்களுக்காக போராடுபவர்களை அடையாளம் கண்டு அழித்தொழித்து வருகிறது மோடி அரசு. பாசிசத்திற்கு எதிராக மக்களுக்காக போராடும் அறிவுத்துறையினரை பாதுகாக்க போராடவில்லை என்றால் இதுபோன்ற மரணங்கள் நேரத்தான் செய்யும்.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும் மூளை மழுங்கி அடிமை மனோபாவத்தில் பலர் இருக்க, தன் உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களுக்காக போராடினார், பேராசிரியர் சாய்பாபா. அந்த மன உறுதியை அவரிடமிருந்து நாம் கற்க வேண்டும்.
குறிப்பாக, காவி-கார்ப்பரேட் பாசிசத்தால் இன்று இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாசிசத்திற்கு எதிராக நாமும் போராடுவதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி!
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
97901 38614