இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்பு முதன் முறையாக காஷ்மீருக்கு சென்ற மோடி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும்  370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம்  காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரமாக சுவாசிக்கிறார்கள் என்றார். ஆனால் இப்பிரிவின் நீக்கம் தங்களுக்கானது அல்ல என்பதையும் அது கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கானது என்பதையும் லடாக் மக்கள்  நாளடைவில் உணரத் தொடங்கினர்.

மோடியின் ஆட்சியின் கீழ்,  இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும்  தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே நகரத்திலிருந்து தில்லி நோக்கி சமூக செயற்பாட்டாளர்  சோனம் வாங்சுங் தலைமையில் நடைபயணம் மேற்கொண்ட(1000 கி.மீ. 30 நாட்கள்) 150 பேரை, தில்லியை முற்றுகையிட வந்த விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய அதே சிங்கு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கே அவர்களை வரவேற்க காத்திருந்த லடாக்கின் ஒரே மக்களவை உறுப்பினரான முகமது ஹனீபாவை கைது செய்த போலீசார் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தனர்.

அதுமட்டுமன்றி லடாக் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட  வந்தவர்கள்  மீது எந்த வழக்கும் பதியாமல் அவர்களைச் சட்டவிரோதமாக புதுதில்லியில் உள்ள லடாக் பவனில் அடைத்து வைத்திருக்கின்றனர்.  அவர்களைச் சந்திக்கச் சென்ற தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான ஆதிஷியை தில்லி போலீசார் சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தற்போது தங்களை அடைத்து வைத்திருப்பதற்கு எதிராக வாங்சுங்கும் அவரது குழுவினரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

லடாக் மக்களின் போராட்டம் இன்று நேற்று  தொடங்கியதல்ல;  2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மோடி அரசு காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ஐ இரத்து செய்த ஒரு சில மாதங்களிலேயே தொடங்கி விட்டது.

கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதுடன் தங்களது வாழ்வாதாரத்தைப் பறித்து நடுத்தெருவில் வீசியெறிவதை எதிர்த்து நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் போராடுவதைப் போல தான் லடாக் மக்களும் போராடுகிறார்கள். இமயமலையை கார்ப்பரேட்டுகள் ஆக்ரமிப்பதையும்; அதற்கு இந்த மோடி அரசு உறுதுணையாக இருப்பதை எதிர்த்தும் கடந்த நான்கு வருடமாக  போராடி வருகின்றனர்.

லடாக்கின் மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் லடாக்கை ஆறாவது அட்டவணையில் இணைக்க வேண்டும்; லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; இரண்டு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்; லடாக் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக பொது வேலை வாய்ப்பு கமிசனை உருவாக்க வேண்டும் இதுதான் லடாக் மக்களின் பிரதானமான கோரிக்கைகள். இதனை நிறைவேற்றக் கோரி அவர்கள் அரசு பிரதிநிதிகளுடன் அமைதியான முறையில் நடத்திய பல சுற்று பேச்சு வார்த்தை 2020 ஆண்டின் ஆரம்பத்தில் தோல்வியில் முடிவடைந்தது.

அதனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 6ம்தேதி லடாக்கில் 30,000 பேர் தங்களது வாழ்தாரத்தை மீட்டெடுப்பதற்காக மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடினார்கள். இது லடாக் யூனியன் பிரதேச மக்கள் தொகையில் 10 சதவீதம். இவ்வளவு பேர் வீதிக்கு வந்து போராடிய போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு,  மோடி அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் சோனம் வாங்சுங் உள்ளிட்ட தலைமை குழுவினர் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை 21 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தப் போவதாக அக்கூட்டத்திலேயே அறிவித்தனர். அதன்பின்பு எந்த முடிவும் எட்டப்படாததால் 1000 கிமீ நடைப்பயணமாக வந்த சோனம் வாங்சுங்க் உள்ளிட்ட குழுவினர் தில்லியின் லடாக் பவனில் இமயமலையையும், லடாக் மக்களின் வாழ்வாதரத்தையும் காப்பதற்காக தற்போது உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமையளித்து வந்த இந்திய அரசியல் சாசன பிரிவு 370 யை நீக்கியது மோடி அரசு. பிரிவு 370-ஐ நீக்கினால், காஷ்மீர் இந்திய யூனியனில் இருந்து தானாக வெளியேறியதாகவே கருதப்படும். அத்தகைய சிக்கலைத் தவிர்ப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லடாக் பகுதியைத் (லே மற்றும் கார்கில்) தனியாக சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் சண்டிகர்), இதர ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் தில்லி, புதுச்சேரி) அறிவித்தது  மோடி அரசு.

ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் – 2019ன் கீழ் மோடி அரசு நியமித்துள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத  லெப்டினட் கவர்னரின் ஆட்சியின் கீழ்தான் தற்போது லடாக் மக்கள் ஆட்சி செய்யப்படுகிறார்கள். இதனால் இங்கு சட்டமன்றத் தேர்தல் இல்லை; ராஜ்யசபாவிற்கென என தனி உறுப்பினர் இல்லை; சுமார் 3 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 59,416 சதுர கிமீ பரப்பளவில் பரந்திருக்கும் லடாக்கிற்கென தற்போது ஒரே ஒரு  மக்களவை தொகுதி தான் இருக்கிறது.

370 பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் பிரிவு 35A-வும் ரத்தாகிறது. இதன் காரணமாக காஷ்மீர் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளும் ரத்தாகின்றன. குறிப்பாக 2019 ஆண்டுக்கு முன்பு  ஜம்மு & காஷ்மீரில் உள்ள சொத்துக்களை வெளிமாநிலத்தவர் யாரும் வாங்க முடியாது. இது பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் மிகப்பெரும் உறுத்தலாக பன்னெடுங்காலமாக இருந்துவந்த விசயம். 2019 ஆம் ஆண்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததன் மூலம் தனது  கார்ப்பரேட் எஜமானர்களுக்காக ஜம்மு & காஷ்மீரை திறந்து விட்டார் மோடி.

காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு  370 நீக்கிய  அடுத்த  ஆண்டே, 2020, ஆகஸ்ட் 15 உரையில் மோடி பேசும் போது, லடாக்கில் 7.5 ஜிகா வாட் சூரியமின்சக்தி திட்டம் அமைக்கப்படும் என்றார். அப்போது தான் லடாக் மக்கள் இந்த திட்டத்தைப் பற்றி முதன் முதலாக கேள்விப்பட்டனர். தற்போது இத்திட்டம்  13 ஜிகாவாட் மின்சக்தி திட்டமாக (சூரிய மின்சக்தி & காற்றாலை மின்சக்தி ) விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை நிறைவேற்றுவதற்காக 250 சதுர கிமீ நிலம் லடாக்கிலிருந்து கையகப்படுத்தப்படும்.  

சுமார் 20,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த மின்சக்தி திட்டத்திற்காக லடாக்கிலிருந்து 713 கீமி தொலைவில் உள்ள  ஹரியானாவிற்கு டிரான்ஸ்மிசன் லைன்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன; 2025 ஆம் ஆண்டில் தொடங்கும் இத்திட்டம் 2031ல் முடிக்கப்படவிருக்கிறது; எந்த நிறுவனம் இந்த சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி பூங்காவை அமைக்கப்போகிறது  என்பது பற்றி மோடி அரசு இரகசியம் காத்து வருகிறது; இந்திய சூரிய மின்சக்தி ஆற்றல் நிறுவனமும்  இத்திட்டத்திற்கான ஏல செயல்முறையை பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

 

மின்சக்தி திட்டம் அமையப்போகுமிடம்

கார்ப்பரேட்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் சுமார் 250 சதுர கிமீ பரப்பளவில் உள்ள அங்குள்ள மேய்ச்சல் நிலங்கள், பனி மலைகள், நீரோடைகள், புல்வெளிகளும்; புகழ்பெற்ற பஷ்மினா செம்மறி ஆடுகள், யூரியல் செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளும் பறிபோகும்; கேரளாவின் இயற்கைவளத்தை அழித்து அங்கே நிலச்சரிவிற்கு வித்திட்டதைப் போன்று, இத்திட்டம் இமயமலையில் நிலச்சரிவு, குடிநீர்ப்பஞ்சம்; காலநிலை மாற்றம் போன்ற  சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காவு கொடுக்கும். இதனை உணர்ந்துதான் லடாக் மக்களின் போராட்டம் உக்கிரமடைந்து வருகிறது. ஏற்கனவே உத்தரகாண்டில் உள்கட்டமைப்பு  வளர்ச்சி திட்டம் எனும் பேரில் மேற்கொள்ளப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையினால் கேதர்நாத்தில் வெள்ளம், 6000 பேர் பலி; ஜனவரி 2023ல் ஜோஷிமத் நகரமே புதையுண்டது; நவம்பர் 2023ல் சில்க்யாரா சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் 41 தொழிலாளர்கள் சிக்கிய அவலம் போன்ற இயற்கை அவலங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பிருந்த ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370  மூலம் ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கே அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகவும், பவுத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட லடாக் மக்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், ஆகையால்தான் சட்டப்பிரிவு 370 நீக்கியதாகவும் இப்பகுதி மக்களிடம் நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்துதான் பாஜக அவர்களின் ஆதரவைப் பெற்றது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்பு முதன் முறையாக காஷ்மீருக்கு சென்ற மோடி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும்  370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம்  காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரமாக சுவாசிக்கிறார்கள் என்றார். ஆனால் இப்பிரிவின் நீக்கம் தங்களுக்கானது அல்ல என்பதையும் அது கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கானது என்பதையும் லடாக் மக்கள்  நாளடைவில் உணரத் தொடங்கினர்.

இந்திய அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணைப்பிரிவின் படி 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு தன்னாட்சி கவுன்சில்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்கென ஒரு தன்னாட்சி கவுன்சில், ஒவ்வொரு பிராந்தியத்திற்கென தனித்தனி தன்னாட்சி கவுன்சில்கள் என காடுகள், மலைகள், நிலங்கள், சாலைகள் உள்ளிட்ட அனைத்திலும் பழங்குடியினர் நலன்களைக் கருத்தில் கொண்டு  இத்தன்னாட்சி கவுன்சிலுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகலாயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் சில பகுதிகள் ஆறாவது அட்டவணையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பழங்குடியினர் வசிக்கிறார்கள்; ஆறாவது அட்டவணைப்பிரிவின் கீழ் தான் லடாக் இல்லை; ஆனால் மேற்கூறிய  தன்னாட்சி அமைப்புகள் கார்கிலிலும், லேவிலும் அதிகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன; தேர்தல் மூலம் தான் இவ்வமைப்பிற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; ஆனாலும் கடந்த 4 வருடமாக லடாக்கை 6வது அட்டவணைப்பிரிவின் கீழ் இணைப்பதை பாஜக மறுத்து வருகிறது.

இதைத் தவிர கோபா எனும் பழங்குடிகளின்  உள்ளூர் அமைப்பு முறை  பல ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வருகிறது; இவ்வமைப்பு முறை மூலமே பழங்குடியினர் மத்தியில் ஏற்படும் பல பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன; மேய்ச்சல் நிலங்களின் வரம்பு கூட கோபாவின்  ஒழுங்குமுறையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2020 தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, லடாக், ஆறாவது அட்டவணையின் கீழ் இணைக்கப்படும் என பா.ஜ.க இரண்டு முறை வாக்குறுதி கொடுத்தே இத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் லடாக் மக்களின் தன்னாட்சி அதிகாரத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆறாவது அட்டவணைக்கு ஒரு துரும்பை கூட அசைக்காமல் அம்மக்களை ஏமாற்றி வருகிறது.

லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் இணைத்தால் லடாக்கின் காடுகள், மலைகள், சாலைகள், மேய்ச்சல் நிலங்கள்;  நிதி,  நிர்வாகத்தில் கட்டுப்பாடு  என அனைத்தும் தன்னாட்சி மலை கவுன்சிலின் கீழ் வந்துவிடும்; இதனால் கார்ப்பரேட்டுகளுக்கு லடாக்கின் மலைகளை அள்ளி வழங்க தடை ஏற்பட்டுவிடும், மோடி அரசு நினைத்த மாத்திரத்தில் அனைத்தையும் அள்ளி வழங்க முடியாது. இந்த காரணத்திற்காகத்தான் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக்கை இணைக்காமல் மோடி அரசு இழுத்தடித்து வருகிறது..

லடாக் மக்கள் பெரும்பான்மையாக அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சார்ந்தும், மேய்ச்சல் நிலங்களை நம்பியுமே பிழைத்து வருகிறார்கள். அரசுத்துறையில் வேலைக்கு விளம்பரம் கொடுத்தே பல வருடங்களாக ஆகிறது என்கிறார் வாங்சுக். படித்த முடித்த பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அறவே இல்லை; அனைவரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே கடைகளை திறக்கும் நிலைமையே உள்ளது.  இதனால் தான் பொது வேலை வாய்ப்பு கமிசனை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு போராடி வருகின்றனர்.

இது ஏதோ லடாக் மக்களின் தனிப்பட்ட போராட்டம் என்று நாம் கடந்து சென்றுவிட முடியாது; இமயமலை எனும் இயற்கை வளத்தை கார்ப்பரேட்டுகளிடமிருந்து காப்பதற்கான மக்களின் போராட்டம். இதில் இமயமலையை தங்களது லாபவெறிக்கு அழிக்க காத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களுக்கு ஆதரவாக பாசிச மோடி அரசும் ஒரு புறம் என்றால், தங்களது வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, இமயமலையையும் பாதுகாக்க போராடும் லடாக் மக்கள்  மறுபுறம். இதில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு இடமே இல்லை. காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் காஷ்மீர், லடாக் முதல் கன்னியாகுமரி வரையில் காவி கார்ப்பரேட் பாசிசத்தின் தாக்குதல்களைத் தடுத்து முறியடிக்க வேண்டும். பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். அந்த வகையில் லடாக் மக்கள் நடத்திவரும் போராட்டம் என்பது காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டமே, எனவே அதனை ஆதரித்து நிற்பது நமது கடமையாகும்.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன