சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு.
சாம்சங்கில் பணிபுரியும் 1800 தொழிலாளர்களில் 1500 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பெனிக்கு ஆதரவாக பணிபுரியும் ஒருசில தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை என்ற நாடகம் நடத்தி சுமுக முடிவு எட்டப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. பத்திரிக்கைகளும் அதை செய்தியாக வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொழிலாளர் தோழர்களோ, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாகவும் போராட்டத்தை தொடர போவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் போராடுகின்ற தொழிலாளர்களை போலீசார் கைது செய்வதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன.
“சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும்.. ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்திற்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம்….?” என்று தொழிலாளர்களைப் பார்த்து ‘கருணை உள்ளத்தோடு’ கேள்வி கேட்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. ஆடு நனைகிறதே என்று ஓநாய்க்கு எவ்வளவு அக்கறை.
சாம்சங்கில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியினுடைய உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு நிர்வாகம் விடுப்புக்கு கொடுக்காததால் தனது குழந்தை இறந்து விட்டதாக அத்தொழிலாளியின் மனைவி பேசியிருந்த காணொலி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அத்தொழிலாளியின் அம்மா இறந்ததற்கு கூட கம்பெனி நிர்வாகம் போதிய விடுப்பு கொடுக்கவில்லை என்றும் அந்த பெண் குற்றம் சாட்டியிருந்தார். தொழிலாளர்களுக்கு பாடம் எடுக்கும் டிஆர்பி ராஜா, சிறிதும் இரக்கமற்ற; லாபத்திற்காக கொலை செய்யக்கூடத் தயங்காத சாம்சங் நிர்வாகத்தை பார்த்து, தொழிலாளிக்கு விடுப்பு கொடுப்பது தானே சட்டப்படி சரியானது என்று கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்க வாய்ப்பில்லை. ஏனென்றால் திராவிடமாடல் அரசின் இதயம் துடிப்பதே சாம்சங் போன்ற முதலாளிவர்க்கத்தின் நலனுக்காக தான்.
“தொழிலாளர்களுடைய சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அவர் எப்போதும் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்.” என்று தர்மகர்த்தா பாணியில் பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜா. முதல்வர் தொழிலாளர் பக்கம் என்றால் தொழிற்சங்கம் அமைப்பதையொட்டி ஜீலை மாதம் கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இன்றுவரை தொழிலாளர் நலத்துறை பதிலளிக்காதது ஏன்? ஒரு பத்திரிக்கையாளர், தொழிற்சங்கங்களை அமைப்பது சட்டப்படி தொழிலாளர்கள் உரிமை இல்லையா, ஏன் நிர்வாகம் அனுமதி மறுக்கிறது என்று கேட்க, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது அதனால் அதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்று மலுப்பலான பதிலைச் சொல்லி கடந்து விட்டார் அமைச்சர். முற்றிலும் அம்மணமான பின்பும் இன்னும் ஏதோ மானம் இருப்பது போல காட்டிக்கொள்கிறது திமுக.
சாம்சங்-இல் இடதுசாரி தொழிற்சங்கத்தை அனுமதித்தால் அப்பகுதியில் உள்ள பிற தனியார் தொழிற்சாலைகளிலும் இது போன்ற தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய சூழல் உருவாகும். இது முதலாளிவர்க்கத்தினருக்கு கசப்பான விஷயமாகும். குறைந்த விலைக்கு நிலம் மற்றும் மின்சாரம்; தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு, வரிவிலக்கு போன்ற சலுகைகள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம், இடதுசாரி தொழிற்சங்கம் கிடையாது முதலாளிகளுக்கு ஏற்றார் போல் தொழிலாளர் சட்டங்கள் திருத்தம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிவப்புக்கம்பளம் விரிக்கின்றனர். மக்களை ஒட்டச் சுரண்டுகின்ற அவர்களின் ஜனநாயக் உரிமையை மறுக்கின்றன அனைத்தையும் தனியார்மயப் படுத்துகின்ற மறுகாலனியாக்க நடைமுறையைத்தான் தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு வருதல், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்று வெவ்வேறு பெயர்களில் கதையளக்கின்றனர்.
மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியின் உள்ளடக்கம். இது தான் காவி-கார்பரேட் பாசிசத்திற்கும் அடிப்படை. அப்பட்டமாக தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற அவர்களது உழைப்பை சுரண்டுகின்ற ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நலனை முன்னிறுத்துவதுதான் திராவிட மாடல் என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவது சரியா? நமக்கு தேவை தொழிலாளர்-விவசாயிகள் விடுதலைக்கான மார்க்சிய-லெனிய கண்ணோட்டம். காவி-கார்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஆயுதமும் அதுவே.
- அழகு
எழுத்துப் பிழைகள் உள்ளது என்று நினைக்கிறேன். சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.